இந்நாளில் கும்பகோணம் என்ற பெயரால் ஆங்கில அகராதியிலேகூட இடம் பெற்றிருக்கும் நகரம், நம்முடைய கதை நடந்த காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்று வழங்கப்பட்டு வந்தது. புண்ணிய ஸ்தல மகிமையையன்றி, ‘குடந்தை சோதிடராலும் அது புகழ்பெற்றிருந்தது. குடந்தைக்குச் சற்றுத் தூரத்தில் தென் மேற்குத் திசையில் சோழர்களின் இடைக்காலத் தலைநகரமான பழையாறை, வானை அளாவிய அரண்மனை மாடங்களுடனும் ஆலய கோபுரங்களுடனும் கம்பீரமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.
பழையாறை அரண்மனைகளில் வசித்த அரச குலத்தினர் அனைவருடைய ஜாதகங்களையும் குடந்தை சோதிடர் சேகரித்து வைத்திருந்தார். அப்படிச் சேகரித்து வைத்திருந்த ஜாதகங்களைப் புரட்டித்தான் கொடும்பாளூர் இளவரசி வானதியின் ஜாதகத்தை அவர் கண்டெடுத்தார். சிறிது நேரம் ஜாதகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பிறகு, சோதிடர் வானதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். திரும்ப ஜாதகத்தைப் பார்த்தார். இப்படி மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, வாயைத் திறந்து ஒன்றும் சொல்லுகிற வழியைக் காணவில்லை.
“என்ன, ஜோசியரே! ஏதாவது சொல்லப் போகிறீரா, இல்லையா?” என்று குந்தவை தேவி கேட்டாள்.
“தாயே! என்னத்தைச் சொல்வது? எப்படிச் சொல்வது? முன் ஒரு தடவை தற்செயலாக இந்த ஜாதகத்தை எடுத்துப் பார்த்தேன். என்னாலேயே நம்ப முடியவில்லை; இப்படியும் இருக்க முடியுமா என்று சந்தேகப்பட்டு வைத்து விட்டேன். இப்போது இந்தப் பெண்ணின் திருமுகத்தையும் இந்த ஜாதகத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, திகைக்க வேண்டியிருக்கிறது!”
“திகையும்! திகையும்! போதுமானவரை திகைத்துவிட்டு பிறகு ஏதாவது குறிப்பாகச் சொல்லும்!”
“இது மிகவும் அதிர்ஷ்ட ஜாதகம் தாயே! தாங்கள் எதுவும் வித்தியாசமாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று சொல்கிறேன். தங்களுடைய ஜாதகத்தைக் காட்டிலும் கூட, இது ஒருபடி மேலானது. இம்மாதிரி அதிர்ஷ்ட ஜாதகத்தை நான் இதுவரை பார்த்ததேயில்லை!”
குந்தவை புன்னகை புரிந்தாள்; வானதியோ வெட்கப்பட்டவளாய், “அக்கா! இந்த துரதிர்ஷ்டக்காரியைப் போய் இவர் உலகத்திலேயே இல்லாத அதிர்ஷ்டக்காரி என்கிறாரே! இப்படித்தான் இருக்கும் இவர் சொல்லுவதெல்லாம்!” என்றாள்.
“அம்மா! என்ன சொன்னீர்கள்? நான் சொல்வது தவறானால் என்னுடைய தொழிலையே விட்டுவிடுகிறேன்” என்றார் ஜோதிடர்.
“வேண்டாம், ஜோதிடரே! வேண்டாம் அப்படியெல்லாம் செய்துவிடாதீர். ஏதோ நாலுபேருக்கு நல்ல வார்த்தையாகச் சொல்லிக் கொண்டிரும். ஆனால் வெறுமனே பொதுப்படையாகச் சொல்கிறீரே தவிர, குறிப்பாக ஒன்றும் சொல்லவில்லையே? அதனாலேதான் இவள் சந்தேகப்படுகிறாள்!”
“குறிப்பாகச் சொல்ல வேண்டுமா? இதோ சொல்லுகிறேன்! நாலு மாதத்திற்கு முன்னால் அபசகுனம் மாதிரி தோன்றக் கூடிய ஒரு காரியம் நடந்தது. ஏதோ ஒன்று தவறி விழுந்தது; ஆனால் அது உண்மையில் அபசகுனம் இல்லை. அதிலிருந்துதான் இந்தக் கோமகளுக்கு எல்லா அதிர்ஷ்டங்களும் வரப்போகின்றன!”
“வானதி! நான் என்னடி சொன்னேன்? பார்த்தாயா?” என்றாள் குந்தவை தேவி.
“முன்னாலேயே இவருக்கு நீங்கள் சொல்லி வைத்திருகிறீர்கள் போலிருக்கிறது!” என்றாள் வானதி.
“பார்த்தீரா சோதிடரே, இந்தப் பெண்ணின் பேச்சை!”
“பேசட்டும் தாயே! இப்போது எது வேண்டுமானாலும் பேசட்டும்! நாளைக்கு மன்னர் மன்னனை மணந்து கொண்டு…”
“அப்படிச் சொல்லுங்கள். இளம் பெண்களிடம் கலியாணத்தைப் பற்றிப் பேசினால் அல்லவா அவர்கள் சந்தோஷமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்?…”
“அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன், தாயே! திடுதிப்பென்று கலியாணப் பேச்சை எடுக்கக் கூடாது அல்லவா? எடுத்தால், இந்தக் கிழவனுக்குப் புத்தி கெட்டுவிட்டது” என்று சொல்லி விடுவார்கள்!”
“இவளுக்குப் புருஷன் எங்கிருந்து வருவான்? எப்போது வருவான்? அவனுக்கு என்ன அடையாளம்? ஜாதகத்திலிருந்து இதையெல்லாம் சொல்ல முடியுமா, ஜோதிடரே!”
“ஆகா! சொல்ல முடியாமல் என்ன? நன்றாய்ச் சொல்ல முடியும்!” என்று கூறிவிட்டு, ஜோதிடர் ஜாதகத்தை மறுபடியும் கவனித்துப் பார்த்தார்.
கவனித்துப் பார்த்தாரோ, அல்லது கவனித்துப் பார்ப்பது போல் அவர் பாசாங்குதான் செய்தாரோ நமக்குத் தெரியாது.
பிறகு, தலைநிமிர்ந்து நோக்கி, “அம்மணி! இந்த இளவரசிக்குக் கணவன் வெகு தூரத்திலிருந்து வரவேண்டியதில்லை. சமீபத்தில் உள்ளவன்தான்; ஆயினும் அந்த வீராதி வீரன் இப்போது இந்நாட்டில் இல்லை. கடல் கடந்து சென்றிருக்கிறான்!” என்றார் ஜோதிடர்.
இதைக் கேட்டதும் குந்தவை, வானதியைப் பார்த்தாள்.
வானதியின் உள்ளத்தில் பொங்கிய உவகையை அவள் அடக்கிக் கொள்ளப் பார்த்தும் முடியவில்லை, முகம் காட்டி விட்டது.
“அப்புறம்? அவன் யார்? என்ன குலம்? தெரிந்துகொள்ள ஏதாவது அடையாளம் உண்டா?”
“நன்றாக உண்டு இந்தப் பெண்ணை மணந்து கொள்ளும் பாக்கியசாலியின் திருக்கரங்களில் சங்கு சக்கர ரேகை இருக்கும், அம்மா!”
மீண்டும் குந்தவை வானதியைப் பார்த்தாள். வானதியின் முகம் கவிந்து பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தது.
“அப்படியானால், இவளுடைய கைகளிலும் ஏதேனும் அடையாள ரேகை இல்லாமற்போகுமா?” என்றாள் குந்தவைப் பிராட்டி.
“தாயே! இவளுடைய பாதங்களை எப்போதாவது தாங்கள் பார்த்ததுண்டா?..”
“ஏன் ஜோதிடரே! இது என்ன வார்த்தை! இவளுடைய காலைப் பிடிக்கும்படி என்னைச் சொல்கிறீரா?”
“இல்லை; அப்படியெல்லாம் நான் சொல்லவில்லை ஆனால் ஒரு காலத்தில் ஆயிரமாயிரம் மன்னர்குலப் பெண்கள், பட்ட மகிஷிகள், அரசிளங்குமரிகள், ராணிகள், மகாராணிகள், இந்தப் பெண்ணரசியின் பாதங்களைத் தொடும் பாக்கியத்துக்காகத் தவம் கிடப்பார்கள் தாயே!”
“அக்கா! இந்த கிழவர் என்னைப் பரிகாசம் செய்கிறார். இதற்காகவா என்னை இங்கே அழைத்து வந்தீர்கள்? எழுந்திருங்கள் போகலாம்!” என்று உண்மையாகவே பொங்கி வந்த போபத்துடன் கூறினாள் வானதி.
“நீ என்னத்துக்குப் பதறுகிறாயடி, பெண்ணே! அவர் ஏதாவது சொல்லிக் கொண்டு போகட்டும்…”
“நான் ஏதாவது சொல்லி விடவில்லை; எல்லாம் இந்த ஜாதகத்தில் குறிப்பிட்டிருப்பதைத்தான் சொல்லுகிறேன். ‘பாதத்தாமரை’ என்று ஏதோ கவிகள் உபசாரமாக வர்ணிப்பார்கள். இந்தப் பெண்ணின் உள்ளங்காலைச் சிறிது காட்டச் சொல்லுங்கள். அதில் செந்தாமரை இதழ்களின் ரேகை கட்டாயம் இருக்கும்.”
“போதும்! ஜோதிடரே இவளைப் பற்றி இன்னும் ஏதாவது சொன்னால் என்னைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு புறப்பட்டு விடுவாள். இவளுக்கு வாய்க்கப் போகும் கணவனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்…”
“ஆகா! சொல்கிறேன்! இவளைக் கைப்பிடிக்கும் பாக்கியவான் வீராதி வீரனாயிருப்பான்! நூறு நூறு போர்க்களங்களில் முன்னணியில் நின்று வாகை மாலை சூடுவான். மன்னாதி மன்னனாயிருப்பான்; ஆயிரமாயிரம் அரசர்கள் போற்றச் சக்கரவர்த்தியின் சிம்மாசனத்தில் பன்னெடுங் காலம் வீற்றிருப்பான்.
“நீர் சொல்வதை நான் நம்பவில்லை அது எப்படி நடக்க முடியும்?” என்று கேட்ட குந்தவை தேவியின் முகத்திலே ஆர்வமும் மகிழ்ச்சியும் ஐயமும் கவலையும் கலந்து தாண்டவமாடின.
“நானும் நம்பவில்லை. இவர் எதையோ நினைத்துக் கொண்டு பேசுகிறார். இப்படிச் சொன்னால் தங்களுக்குச் சந்தோஷமாயிருக்கும் என்று கூறுகிறார்!” என்றாள் வானதி.
“இன்று நீங்கள் நம்பாவிட்டால் பாதகமில்லை; ஒரு காலத்தில் நம்புவீர்கள் அப்போது இந்த ஏழைச் சோதிடனை மறந்து விடாதீர்கள்..”
“அக்கா! நாம் போகலாமா?” என்று மறுபடி கேட்டாள் வானதி.
அவளுடைய கரிய விழிகளின் ஓரங்களில் இரு கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.
“இன்னும் ஒரே ஒரு விஷயம் சொல்லி விடுகிறேன். அதைக் கேட்டுவிட்டுப் புறப்படுங்கள், இந்த இளவரசியை மணந்து கொள்ளப் போகும் வீரனுக்கு எத்தனை எத்தனையோ அபாயங்களும், கண்டங்களும் ஏற்படும்; பகைவர்கள் பலர் உண்டு…”
“ஐயோ!”
“ஆனால் அவ்வளவு அபாயங்களும் கண்டங்களும் முடிவில் பறந்து போகும்; பகைவர்கள் படுநாசம் அடைவார்கள். இந்தத் தேவியை அடையும் நாயகன் எல்லாத் தடைகளையும் மீறி மகோன்னத பதவியை அடைவான்…. இதைவிட முக்கியமான செய்தி ஒன்று உண்டு தாயே! நான் வயதானவன் ஆகையால் உள்ளதை ஒளியாமல் விட்டுச் சொல்கிறேன். இந்தப் பெண்ணின் வயிற்றை நீங்கள் ஒருநாள் பாருங்கள். அதில் ஆலிலையின் ரேகைகள் இல்லாவிட்டால் நான் இந்த ஜோதிடத் தொழிலையே விட்டுவிடுகிறேன்…”
“ஆலிலையின் ரேகையில் என்ன விசேஷம் ஜோதிடரே?”
“ஆலிலையின் மேல் பள்ளிகொண்ட பெருமான் யார் என்பது தெரியாதா? அந்த மகாவிஷ்ணுவின் அம்சத்துடன் இவள் வயிற்றில் ஒரு பிள்ளை பிறப்பான். இவளுடைய நாயகனுக்காவது பல இடைஞ்சல்கள், தடங்கல்கள், அபாயங்கள், கண்டங்கள் எல்லாம் உண்டு. ஆனால் இந்தப் பெண்ணின் வயிற்றில் அவதரிக்கப் போகும் குமாரனுக்குத் தடங்கல் என்பதே கிடையாது. அவன் நினைத்ததெல்லாம் கைகூடும்; எடுத்ததெல்லாம் நிறைவேறும், அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும்; அவன் கால் வைத்த இடமெல்லாம் அவனுடைய ஆட்சிக்கு உள்ளாகும்; அவன் கண்ணால் பார்த்த இடமெல்லாம் புலிக்கொடி பறக்கும்.தாயே! இவளுடைய குமாரன் நடத்திச் செல்லும் சைன்யங்கள் பொன்னி நதியின் புது வெள்ளத்தைப் போல் எங்கும் தங்குதடையின்றிச் செல்லும். ஜயலக்ஷ்மி அவனுக்குக் கைகட்டி நின்று சேவகம் புரிவாள். அவன் பிறந்த நாட்டின் புகழ் மூவுலகமும் பரவும். அவன் பிறந்த குலத்தின் கீர்த்தி உலகம் உள்ள அளவும் நின்று நிலவும்!…”
இவ்வாறு ஜோதிடர் ஆவேசம் வந்தவர் போல் சொல்லி வந்தபோது குந்தவை தேவி அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டு, அவர் கூறிய வார்த்தைகளை ஒன்றுவிடாமல் விழுங்குபவள் போல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அக்கா!” என்ற தீனமான குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
“எனக்கு என்னமோ செய்கிறது!” என்று மேலும் தீனமாகக் கூறினாள் வானதி;
திடீரென்று மயங்கித் தரையில் சாய்ந்தாள்.
“ஜோசியரே! சீக்கிரம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்!” என்று குந்தவை சொல்லிவிட்டு, வானதியைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டாள்.
சோதிடர் தண்ணீர் கொண்டு வந்தார்; குந்தவை தண்ணீரை வாங்கி வானதியின் முகத்தில் தௌித்தாள்.
“ஒன்றும் நேராது, அம்மா! கவலைப்படாதீர்கள்…” என்றார் ஜோதிடர்.
“ஒரு கவலையும் இல்லை; இவளுக்கு இது வழக்கம். இந்த மாதிரி இதுவரையில் ஐந்தாறு தடவை ஆகிவிட்டது! சற்றுப் போனால் கண் விழித்து எழுந்திருப்பாள், எழுந்ததும் இது பூலோகமா, கைலாசமா என்று கேட்பாள்!” என்றாள் குந்தவை.
பிறகு சிறிது மெல்லிய குரலில், “ஜோசியரே! முக்கியமாக ஒன்று கேட்பதற்காகவே உங்களிடம் வந்தேன்.நாடு நகரங்களிலே சில காலமாக ஜனங்கள் ஏதேதோ பேசிக் கொள்கிறார்களாமே? வானத்தில் சில நாளாக வால் நட்சத்திரம் தோன்றுகிறதே? இதற்கெல்லாம் உண்மையில் ஏதேனும் பொருள் உண்டா? இராஜ்யத்துக்கு ஏதாவது ஆபத்து உண்டா? மாறுதல் குழப்பம் ஏதேனும் ஏற்படுமா?” என்று இளையபிராட்டி கேட்டாள்.
“அதை மட்டும் என்னைக் கேட்காதீர்கள், தாயே! தேசங்கள், இராஜ்யங்கள், இராஜாங்க நிகழ்ச்சிகள் இவற்றுக்கெல்லாம் ஜாதகமும் கிடையாது; ஜோசியமும் சொல்ல முடியாது. நான் பயின்ற வித்தையில் அதெல்லாம் வரவில்லை. ஞானிகளும், ரிஷிகளும், மகான்களும், யோகிகளும் ஒருவேளை ஞான திருஷ்டியில் பார்த்துச் சொல்லலாம். இந்த ஏழைக்கு அந்தச் சக்தி கிடையாது. இராஜரீக காரியங்களில் நாள், நட்சத்திரம், ஜாதகம், ஜோசியம் எல்லாம் சக்தியற்றுப் போய்விடுகின்றன…”
“ஜோசியரே! மிக சாமர்த்தியமாகப் பேசுகிறீர்! இராஜாங்கத்துக்கு ஜாதகம் பார்க்க வேண்டாம். ஆனால் என் தந்தையைப் பற்றியும் சகோதரர்களைப் பற்றியும் பார்த்துச் சொல்லலாம் அல்லவா? அவர்களுடைய ஜாதகத்தைப் பார்த்தால் இராஜாங்க ஜாதகத்தைப் பார்த்ததுபோல் ஆகிவிடும் அல்லவா?”
“சாவகாசமாக இன்னொரு நாள் பார்த்துச் சொல்கிறேன், அம்மா! பொதுவாக, இது குழப்பங்களும் அபாயங்களும் நிறைந்த காலம். எல்லோருமே சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதுதான்…”
“ஜோசியரே! என் தந்தை, சக்கரவர்த்தி… பழையாறையை விட்டுத் தஞ்சாவூருக்குப் போனதிலிருந்து எனக்கு ஒரே கவலையாயிருக்கிறது.”
“முன்னமே சொன்னேனே, தாயே! மகாராஜாவுக்குப் பெரிய கண்டம் இருக்கிறது. தங்கள் குடும்பத்துக்கும் பெரிய அபாயங்கள் இருக்கின்றன. துர்க்காதேவியின் அருள் மகிமையினால் எல்லாம் நிவர்த்தியாகும்.”
“அக்கா! நாம் எங்கே இருக்கிறோம்?” என்று வானதியின் தீனக் குரல் கேட்டது.
குந்தவையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த வானதி கண்ணிமைகளை வண்டின் சிறகுகளைப்போல் கொட்டி மலர மலர விழித்தாள்.
“கண்மணி! இன்னும் நாம் இந்த பூலோகத்திலேதான் இருக்கிறோம்! சொர்க்க லோகத்துக்கு அழைத்துப் போக புஷ்பக விமானம் இன்னும் வந்து சேரவில்லை. எழுந்திரு! நம்முடைய குதிரை பூட்டிய ரதத்திலேயே ஏறிக் கொண்டு அரண்மனைக்குப் போகலாம்!” என்றாள் குந்தவை.
வானதி எழுந்து உட்கார்ந்து கொண்டு, “நான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேனா?” என்றாள்.
“மயக்கம் போடவில்லை; அக்காவின் மடியில் படுத்துக் கொஞ்சம் தூங்கிவிட்டாய்! தாலாட்டுப்கூடப் பாடினேன் உன் காதில் விழவில்லையா?”
“கோபிக்காதீர்கள், அக்கா! என்னை அறியாமலே தலை கிறுகிறுத்து வந்துவிட்டது.”
“கிறுகிறுக்கும், கிறுகிறுக்கும்; இந்த ஜோசியர் எனக்கு அப்படி ஜோசியம் சொல்லியிருந்தால் எனக்குக் கூடத்தான் கிறுகிறுத்திருக்கும்.”
“அதனால் இல்லை, அக்கா! இவர் சொன்னதையெல்லாம் நான் நம்பிவிட்டேனா?”
“நீ நம்பினாயோ, நம்பவில்லையோ? ஆனால் ஜோசியர் பயந்தே போய்விட்டார்! உன்னைப் போன்ற பயங்கொள்ளியை இனிமேல் எங்கும் அழைத்துப் போகக் கூடாது.”
“நான்தான் சோதிடரிடம் வரவில்லையென்று அப்போதே சொன்னேனே! நீங்கள்தானே..?”
“என் குற்றந்தான் எழுந்திரு, போகலாம் வாசல் வரையில் நாலு அடி நடக்க முடியுமா? இல்லாவிட்டால் இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டு போக வேணுமா?”
“வேண்டாம்! வேண்டாம்! நன்றாய் நடக்க முடியும்.”
“சற்றுப் பொறுங்கள், தாயே! தேவியின் பிரசாதம் தருகிறேன், வாங்கிக் கொண்டு போங்கள்” என்று ஜோசியர் சொல்லி விட்டு ஓலைச்சுவடியைக் கட்டத் தொடங்கினார்.
“ஜோசியரே! எனக்கு என்னவெல்லாமோ சொன்னீர்கள்; அக்காவுக்கு ஒன்றுமே சொல்லவில்லையே?” என்று வானதி கூறினாள்.
“அம்மா! இளையபிராட்டிக்கு எல்லாம் சொல்லியிருக்கிறேன் புதிதாக என்ன சொல்ல வேண்டும்?”
“அக்காவை மணந்து கொள்ளப் போகும் வீராதி வீரர்”
“அசகாய சூரர்” என்று குந்தவை குறுக்கிட்டுச் சொன்னாள்.
“சந்தேகம் என்ன?..மகா பராக்கிரமசாலியான இராஜகுமாரர்…”
“முப்பத்திரண்டு சாமுத்ரிகா லட்சணமும் பொருந்தியவர்; புத்தியில் பிரகஸ்பதி; வித்தையில் சரஸ்வதி, அழகிலே மன்மதன்; ஆற்றலில் அர்ஜுனன்!”
“இளையபிராட்டிக்கு ஏற்ற அந்த ஸுகுமாரரான இராஜகுமாரர் எங்கிருந்து எப்போது வருவார்?..”
“வருகிறார், தாயே! வருகிறார்! கட்டாயம் வரப்போகிறார் அதி சீக்கிரத்திலேயே வருவார்.”
“எப்படி வருவார்? குதிரை மேல் வருவாரா? ரதத்தில் ஏறி வருவாரா? யானை மேல் வருவாரா? கால் நடையாக வருவாரா? அல்லது நேரே ஆகாசத்திலிருந்து கூரையைப் பொத்துக் கொண்டு வந்து குதிப்பாரா!” என்று குந்தவைதேவி கேலியாகக் கேட்டாள்.
“அக்கா! குதிரை காலடிச் சத்தம் கேட்கிறது!” என்று வானதி சிறிது பரபரப்புடன் சொன்னாள்.
“ஒருவருக்கும் கேளாதது உனக்கு மாத்திரம் அதிசயமாய்க் கேட்கும்!”
“இல்லை, வேடிக்கைக்குக் சொல்லவில்லை இதோ கேளுங்கள்!”
உண்மையாகவே அப்போது வீதியில் குதிரை ஒன்று விரைந்து வரும் காலடிச் சத்தம் கேட்டது.
“கேட்டால் என்னடி? குடந்தைப் பட்டணத்தின் வீதிகளில் குதிரை போகாமலா இருக்கும்?” என்றாள் குந்தவை.
“இல்லை; இங்கே வருகிறது மாதிரி தோன்றியது!”
“உனக்கு ஏதாவது விசித்திரமாகத் தோன்றும் எழுந்திரு, போகலாம்!”
இச்சமயத்தில் அந்த வீட்டின் வாசலில் ஏதோ குழப்பமான சப்தம் கேட்டது; குரல் ஒலிகளும் கேட்டன.
“இதுதானே ஜோசியர் வீடு?”
“ஆமாம்; நீ யார்?”
“ஜோசியர் இருக்கிறாரா?”
“உள்ளே போகக் கூடாது?”
“அப்படித்தான் போவேன்!”
“விடமாட்டேன்”
“ஜோசியரைப் பார்க்க வேண்டும்”
“அப்புறம் வா”
“அப்புறம் வர முடியாது; எனக்கு மிக்க அவசரம்!”
“அடே! அடே! நில்! நில்!”
“சற்று! விலகிப்போ! தடுத்தாயோ கொன்றுவிடுவேன்…”
“ஐயா! ஐயா! வேண்டாம்! உள்ளே போக வேண்டாம்!”
இத்தகைய குழப்பமான கூச்சல் நெருங்கி நெருங்கிக் கேட்டது; படார் என்று வாசற் கதவு திறந்தது. அவ்வளவு பிரமாதமான தடபுடலுடன் ஒரு வாலிபன் உள்ளே திடும்பிரவேசமாக வந்தான். அவனைப் பின்னாலிருந்து தோள்களைப் பிடித்து இழுக்க ஒருவன் முயன்று கொண்டிருந்தான். வாலிபன் திமிறிக் கொண்டு வாசற்படியைக் கடந்து உள்ளே வந்தான். வந்த வாலிபன் யார் என்று வாசகர்கள் ஊகித்திருப்பார்கள் நமது வீரன் வந்தியத்தேவன் தான்!. வீட்டுக்குள்ளே இருந்த மூன்று பேருடைய கண்களும் ஏக காலத்தில் அவ்வீரனைப் பார்த்தன.
வந்தியத்தேவனும் உள்ளிருந்தவர்களைப் பார்த்தான். இல்லை; உள்ளேயிருந்தவர்களில் ஒருவரைத் தான் பார்த்தான். அதுகூட இல்லை; குந்தவை தேவியை அவன் முழுமையாகப் பார்க்கவில்லை.அவளுடைய பொன் முகத்தை மட்டுமே பார்த்தான். முகத்தையாவது முழுமையும் பார்த்தானோ என்றால், அதுவும் இல்லை! வியப்பினால் சிறிது விரிந்திருந்த அவளுடைய பவளச் செவ்வாயின் இதழ்களைப் பார்த்தான்; கம்பீரமும் வியப்பும் குறும்புச் சிரிப்பும் ததும்பியிருந்த அவளுடைய அகன்ற கண்களைப் பார்த்தான். கண்ணிமைகளையும் கரிய புருவங்களையும் பார்த்தான்; குங்குமச் சிவப்பான குழிந்த கன்னங்களைப் பார்த்தான். சங்கையொத்த வழுவழுப்பான கழுத்தைப் பார்த்தான். இவ்வளவையும் ஒரே சமயத்தில் தனி தனியாகப் பார்த்தான். தனித்தனியாக அவை அவன் மனத்தில் பதிந்தன.
இதெல்லாம் சில விநாடி நேரந்தான், உடனே சட்டென்று திரும்பிச் சோதிடருடைய சீடனை நோக்கி, “ஏனப்பா, உள்ளே பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று நீ சொல்லக் கூடாது? சொல்லியிருந்தால் நான் இப்படி வந்திருப்பேனா?” என்று கேட்டுக் கொண்டே சீடனை மறுபக்கம் தள்ளிக் கொண்டு வாசற்படியை மீண்டும் கடந்தான். ஆயினும் வெளியில் போவதற்குள் இன்னும் ஒரு தடவை குந்தவைதேவியைத் திரும்பிப் பார்த்து விட்டுத்தான் போனான்.
“அடே அப்பா! புயல் அடித்து ஓய்ந்தது போல் அல்லவா இருக்கிறது?” என்றாள் குந்தவைப் பிராட்டி.
“இன்னும் ஓய்ந்தபாடில்லை; அதோ கேளுங்கள்!” என்றாள் கொடும்பாளூர் இளவரசி.
வாசலில் இன்னமும் வந்தியத்தேவனுக்கும் சோதிடரின் சீடனுக்கும் தர்க்கம் நடந்து கொண்டிருந்தது.
“ஜோசியரே! இவர் யார்?” என்றாள் குந்தவை.
“தெரியாது, தாயே! யாரோ அசலூர்க்காரர் மாதிரி இருக்கிறது. பெரிய முரட்டுப் பிள்ளையென்று தோன்றுகிறது.”
குந்தவை திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு கலகலவென்று சிரித்தாள்.
“எதற்காக அக்கா சிரிக்கிறீர்கள்?”
“எதற்காகவா? எனக்கு வரப்போகும் மணாளன் குதிரையில் வரப் போகிறானா, யானையில் வரப் போகிறானா, அல்லது கூரை வழியாக வந்து குதிக்கப் போகிறானா என்று பேசிக் கொண்டிருந்தோமே, அதை நினைத்துக் கொண்டு சிரித்தேன்!”
இப்போது வானதிக்கும் சிரிப்புத் தாங்க முடியாமல் வந்தது. இருவருடைய சிரிப்பும் கலந்து அலை அலையாக எழுந்தது. வெளியில் எழுந்த சச்சரவுச் சப்தங்கூட இந்த இரு மங்கையரின் சிரிப்பின் ஒலியில் அடங்கிவிட்டது.
சோதிடர் மௌன சிந்தனையில் ஆழ்ந்தவராய், அரச குமாரிகள் இருவருக்கும் குங்குமம் கொடுத்தார். பெற்றுக் கொண்டு இருவரும் எழுந்தனர்; வீட்டுக்கு வெளியில் சென்றனர். சோதிடரும் கூட வந்தார்.
வீட்டு வாசலில் சிறிது ஒதுங்கி நின்ற வந்தியத்தேவன், பெண்மணிகளைப் பார்த்ததும், “மன்னிக்க வேண்டும்.உள்ளே பெண்கள் இருக்கிறார்கள் என்று இந்தப் புத்திசாலி சொல்லவில்லை. ஆகையினால்தான் அப்படி அவசரமாக வந்து விட்டேன். அதற்காக மன்னிக்க வேண்டும்!” என்று உரத்த குரலில் சொன்னான்.
குந்தவை மலர்ந்த முகத்துடன் குறும்பும் கேலியும் மிடுக்கும் ததும்பிய கண்களினால் வந்தியத்தேவனை ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்தாள். ஒரு வார்த்தையும் மறுமொழி சொல்லவில்லை. வானதியை ஒரு கையினால் பிடித்து இழுத்துக் கொண்டு ரதம் நின்ற ஆலமரத்தடியை நோக்கிச் சென்றாள்.
“குடந்தை நகரத்துப் பெண்களுக்கு மரியாதையே தெரியாது போலிருக்கிறது. ஏதடா ஒரு மனிதன் வலிய வந்து பேசுகிறானே என்பதற்காகவாவது திரும்பிப் பார்த்து ஒரு வார்த்தை பதில் சொல்லக் கூடாதோ?” என்று வந்தியத்தேவன் இரைந்து கூறியது அவர்கள் காதில் விழுந்தது.
ரதத்தில் குதிரையைப் பூட்டிச் சாரதி ஆயத்தமாக நிறுத்தியிருந்தான். இளவரசிகள் இருவரும் ரதத்தில் ஏறிக் கொண்டதும், ரத சாரதியும் முன்னால் ஏறிக் கொண்டான். ரதம் அரிசிலாற்றங்கரையை நோக்கி விரைந்து சென்றது. வந்தியத்தேவன் ரதம் மறையும் வரையில் பார்த்துக் கொண்டு நின்றான்.
<<அத்தியாயம் 10 அத்தியாயம் 12 >>
<<அத்தியாயம் 10 அத்தியாயம் 12 >>