கொள்ளிட கரையில் படகில் ஏற்றி நாம் விட்டு விட்டு வந்த வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டுக்கு அச்சமயம் எப்படி வந்து சேர்ந்தான் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா?
ஆழ்வார்க்கடியான் படகில் ஏறியதை ஆட்சேபித்த சைவப் பெரியார், படகு நகரத் தொடங்கியதும், வந்தியத்தேவனைப் பார்த்து, “தம்பி! உனக்காகப் போனால் போகிறது என்று இவனை ஏறவிட்டேன். ஆனால் ஓடத்தில் இருக்கும் வரையில் இவன் அந்த எட்டெழுத்துப் பெயரைச் சொல்லவே கூடாது. சொன்னால் இவனை இந்தக் கொள்ளிடத்தில் பிடித்துத் தள்ளிவிடச் சொல்லுவேன். ஓடக்காரர்கள் என்னுடைய ஆட்கள்!” என்றார்.
“நம்பி அடிகளே! தங்களுடைய திருச்செவியில் விழுந்ததா?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.
“இவர் ஐந்தெழுத்துப் பெயரைச் சொல்லாதிருந்தால் நானும் எட்டெழுத்துத் திருநாமத்தைச் சொல்லவில்லை!” என்றான் ஆழ்வார்க்கடியான்.
“சாஷாத் சிவபெருமானுடைய பஞ்சாட்சரத் திருமந்திரத்தைச் சொல்லக் கூடாது என்று இவன் யார் தடை செய்வதற்கு? முடியாது! முடியாது!
கற்றூணைப்பூட்டி கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமசிவாயவே!”
என்று சைவப் பெரியார் கம்பீர கர்ஜனை செய்தார்.
”நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்!”
என்று ஆழ்வார்க்கடியான் உரத்த குரலில் பாடத் தொடங்கினான்.
“சிவ சிவ சிவா!” என்று சைவர் இரண்டு காதிலும் கைவிரலை வைத்து அடைத்துக் கொண்டார்.
ஆழ்வார்க்கடியான் பாட்டை நிறுத்தியதும், சைவர் காதில் வைத்திருந்த விரல்களை எடுத்தார்.
ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனைப் பார்த்து, “தம்பி! நீயே அந்த வீர சைவரைக் கொஞ்சம் கேள். இவர் திருமாலின் பெயரைக் கேட்பதற்கே இவ்வளவு கஷ்டப்படுகிறாரே? ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் பாத கமலங்களை அலம்பி விட்டுத்தான் இந்தக் கொள்ளிட நதி கீழே வருகிறது. பெருமாளின் பாதம்பட்ட தீர்த்தம் புண்ணிய தீர்த்தம் என்றுதானே சிவபெருமான் திருவானைக்காவலில் அந்தத் தண்ணீரிலேயே முழுகித் தவம் செய்கிறார்?” என்று சொல்லுவதற்குள்ளே சைவப் பெரியார் மிக வெகுண்டு ஆழ்வார்க்கடியான் மீது பாய்ந்தார். படகில் ஓரத்தில் இரண்டு பேரும் கைகலக்கவே, படகு கவிழ்ந்து விடும் போலிருந்தது. ஓடக்காரர்களும் வந்தியத்தேவனும் குறுக்கிட்டு அவர்களை விலக்கினார்கள்.
“பக்த சிரோமணிகளே! நீங்கள் இருவரும் இந்தக் கொள்ளிட வெள்ளத்திலே விழுந்து நேரே மோட்சத்துக்குப் போக ஆசைப்படுவதாகத் தோன்றுகிறது. ஆனால் எனக்கு இன்னும் இந்த உலகத்தில் செய்ய வேண்டிய காரியங்கள் மிச்சமிருக்கின்றன!” என்றான் வந்தியத்தேவன்.
ஓடக்காரர்களில் ஒருவன், “கொள்ளிடத்தில் விழுந்தால் மோட்சத்துக்குப் போவது நிச்சயமோ, என்னமோ தெரியாது! ஆனால் முதலையின் வயிற்றுக்குள் நிச்சயமாகப் போகலாம்! அதோ பாருங்கள்!’ என்றான்.
அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் முதலை ஒன்று பயங்கரமாக வாயைத் திறந்து கொண்டு காணப்பட்டது.
“எனக்கு முதலையைப் பற்றிச் சிறிதும் அச்சம் இல்லை; கஜேந்திரனை ரட்சித்த ஆதிமூலமான நாராயண மூர்த்தி எங்கே போய்விட்டார்?” என்றான் ஆழ்வார்க்கடியான்.
“எங்கே போய்விட்டாரா? பிருந்தாவனத்து கோபிகா ஸ்திரீகளின் சேலைத் தலைப்பில் ஒரு வேளை ஒளிந்து கொண்டிருப்பார்!” என்றார் சைவர்.
“அல்லது பத்மாசுரனுக்கு வரங்கொடுத்துவிட்டு அலறிப் புடைத்துக் கொண்டு ஓடியது போல் சிவனுக்கு இன்னொரு சங்கடம் ஏற்பட்டிருக்கலாம்; அந்தச் சங்கடத்திலிருந்து சிவனைக் காப்பார்றுவதற்காகத் திருமால் போயிருக்கலாம்” என்றான் நம்பி.
“திரிபுர சம்ஹாரத்தின் போது திருமால் அடைந்த கர்வபங்கம் இந்த வைஷ்ணவனுக்கு ஞாபகம் இல்லை போலிருக்கிறது!” என்றார் சைவப் பெரியார்.
“சுவாமிகளே! நீங்கள் எதற்காகத்தான் இப்படிச் சண்டை போடுகிறீர்களோ, தெரியவில்லை! யாருக்கு எந்தத் தெய்வத்தின் பேரில் பக்தியோ, அந்தத் தெய்வத்தை வழிபடுவதுதானே?” என்றான் வந்தியத்தேவன்.
சைவப் பெரியாரும் ஆழ்வார்க்கடியானும் ஏன் அவ்விதம் சண்டையிட்டார்கள்? வீர நாராயணபுரத்தில் ஏன் இதே மாதிரியான வாதப் போர் நடந்தது என்பதைப் பற்றி வாசகர்களுக்கு இச்சமயத்தில் சொல்லிவிடுவது உசிதமாயிருக்கும்.
பழந் தமிழ்நாட்டில் ஏறக்குறைய அறுநூறு வருஷ காலம் பௌத்த மதமும் சமண மதமும் செல்வாக்குப் பெற்றிருந்தன. இந்தச் செல்வாக்கினால் தமிழகம் பல நலங்களை எய்தியது. சிற்பம், சித்திரம், கவிதை, காவியம் முதலிய கலைகள் தழைத்தோங்கின. பின்னர், ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றினார்கள். அமுதொழுகும் தெய்வத் தமிழ்ப் பாசுரங்களைப் பொழிந்தார்கள். வைஷ்ணவத்தையும் சைவத்தையும் தழைத்தோங்கச் செய்தார்கள். இவர்களுடைய பிரசார முறை மிகச்சக்தி வாய்ந்ததாயிருந்தது. சமயப் பிரச்சாரத்துக்குச் சிற்பக் கலையுடன் கூட இசைக் கலையையும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆழ்வார்களின் பாசுரங்களையும் மூவர் தேவாரப் பண்களையும் தேவகானத்தையொத்த இசையில் அமைத்துப் பலர் பாடத் தொடங்கினார்கள். இந்த இசைப் பாடல்கள் கேட்போர் உள்ளங்களைப் பரவசப்படுத்தி பக்தி வெறியை ஊட்டின. ஆழ்வார்களின் பாடல் பெற்ற விஷ்ணு ஸ்தலங்களும் மூவரின் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களும் புதிய சிறப்பையும் புனிதத் தன்மையையும் அடைந்தன. அதற்கு முன் செங்கல்லாலும் மரத்தினாலும் கட்டப்பட்டிருந்த ஆலயங்கள் புதுப்பித்துக் கற்றளிகளாகக் கட்டப்பட்டன. இந்தத் திருப்பணியை விஜயாலய சோழன் காலத்திலிருந்து சோழ மன்னர்களும், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வெகுவாகச் செய்துவந்தார்கள்.
அதே சமயத்தில் கேரள நாட்டில் ஒரு விசேஷ சம்பவம் நடந்தது. காலடி என்னுமிடத்தில் ஒரு மகான் அவதரித்தார். இளம் பிராயத்தில் அவர் உலகைத் துறந்து சந்நியாசி ஆனார். வடமொழியிலுள்ள சகல சாஸ்திரங்களையும் படித்துக் கரை கண்டார். வேத உபநிஷதம், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் – இவற்றின் அடிப்படையில் அத்வைத வேதாந்தக் கொள்கையின் கொடியை நாட்டினார். வடமொழியில் பெற்றிருந்த வித்வத்தின் உதவியினால் பாரத தேசம் முழுவதும் திக்விஜயம் செய்து ஆங்காங்கு எட்டு அத்வைத மடங்களை ஸ்தாபனம் செய்தார். இவருடைய கொள்கையை ஆதரித்த அத்வைத சந்நியாசிகள் நாடெங்கும் பரவிச் சென்றார்கள்.
இவ்விதம் தமிழ் நாட்டில் நம் கதை நடந்த காலத்தில் அதாவது சுமார் 980 வருஷங்களுக்கு முன்பு, (1950ல் எழுதியது) பெரியதொரு சமயக் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. இந்தக் கொந்தளிப்பிலிருந்து தீங்கு தரும் அம்சங்கள் சிலவும் தோன்றிப் பரவின. வீர வைஷ்ணவர்களும் வீர சைவர்களும் ஆங்காங்கு முளைத்தார்கள். இவர்கள் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் சண்டையில் இறங்கினார்கள். இந்த வாதப் போர்களில் அத்வைதிகளும் கலந்து கொண்டார்கள். சமய வாதப் போர்கள் சில சமயம் அடிதடி சண்டையாகப் பரிணமித்தன.
அந்த காலத்து சைவ – வைஷ்ணவப் போரை விளக்கும் அருமையான கதை ஒன்று உண்டு.
ஸ்ரீரங்கத்து வைஷ்ணவர் ஒருவர் திருவானைக்காவல் ஆலய வெளிச் சுவரின் ஓரமாகப் போய்க் கொண்டிருந்தார். தலையில் திடீரென்று ஒரு கல் விழுந்தது. காயமாகி இரத்தமும் கசிந்தது. வைஷ்ணவர் அண்ணாந்து பார்த்தார். கோபுரத்தில் ஒரு காக்கை உட்கார்ந்தபடியால் அந்தப் பழைய கோபுரத்தின் கல் இடிந்து விழுந்திருக்க வேண்டும் என்று அறிந்தார். உடனே அவருக்குக் காயமும் வலியும் மறந்து போய் ஒரே குதூகலம் உண்டாகி விட்டது. “ஸ்ரீரங்கத்து வீர வைஷ்ணவக் காக்காயே! திருவானைக்காவல் சிவன் கோயிலை நன்றாய் இடித்துத் தள்ளு!” என்றாராம்.
அந்த நாளில் இத்தகைய சைவ – வைஷ்ணவ வேற்றுமை மனப்பான்மை மிகப் பரவியிருந்தது. இதைத் தெரிந்து கொள்ளுதல், பின்னால் இந்தக் கதையைத் தொடர்ந்து படிப்பதற்கு மிக்க அனுகூலமாயிருக்கும்.
ஓடம் அக்கரை சென்றதும், சைவப் பெரியார் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, “நீ நாசமாய்ப் போவாய்!” என்று கடைசி சாபம் கொடுத்து விட்டுத் தம் வழியே போனார்.
வந்தியத்தேவனுடன் வந்த கடம்பூர் வீரன் பக்கத்திலுள்ள திருப்பனந்தாளுக்குச் சென்று குதிரை சம்பாதித்து வருவதாகச் சொல்லிப் போனான். ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் ஆற்றங்கரையில் அரச மரத்தின் அடியில் உட்கார்ந்தார்கள். அந்த மரத்தின் விசாலமான அடர்ந்த கிளைகளில் நூற்றுக்கணக்கான பறவைகள் மதுரமான கலகலத்வனி செய்து கொண்டிருந்தன.
வந்தியத்தேவனும் நம்பியும் ஒருவருடைய வாயை ஒருவர் பிடுங்கி ஏதாவது விஷயத்தைக் கிரஹிக்க விரும்பினார்கள். முதலில் சிறிது நேரம் சுற்றி வளைத்துப் பேசினார்கள்.
“ஏன் தம்பி! கடம்பூர் மாளிகைக்கு என்னை அழைத்துப் போகாமல் விட்டு விட்டுப் போனாயல்லவா?”
“நான் போவதே பெரிய கஷ்டமாகப் போய்விட்டது நம்பிகளே!”
“அப்படியா? பின் எப்படித்தான் போனாய்? ஒரு வேளை போகவில்லையோ?”
“போனேன், போனேன், ஒரு காரியத்தை உத்தேசித்து விட்டால் பின்வாங்கி விடுவேனோ? வாசற் காவலர்கள் தடுத்தார்கள். குதிரையை ஒரு தட்டு தட்டி உள்ளே விட்டேன். தடுத்தவர்கள் அத்தனை பேரும் உருண்டு தரையில் விழுந்தார்கள். பிறகு அவர்கள் எழுந்து வந்து என்னைச் சூழ்ந்து கொள்வதற்குள் என் நண்பன் கந்தமாறன் ஓடி வந்து என்னை அழைத்துப் போனான்.”
“அப்படித்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். மிக்க தைரியசாலி நீ. சரி அப்புறம் என்ன நடந்தது? யார், யார் வந்திருந்தார்கள்?”
“எத்தனையோ பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அவர்களுடைய பெயரெல்லாம் எனக்குத் தெரியாது. பழுவேட்டரையர் வந்திருந்தார். அவருடைய இளம் மனையாளும் வந்திருந்தாள். அப்பப்பா! அந்த பெண்ணின் அழகை என்னவென்று சொல்வது?…”
“நீ பார்த்தாயா என்ன?”
“ஆமாம், பார்க்காமலா? என் நண்பன் கந்தமாறன் என்னை அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்றான். அங்கே பார்த்தேன். அவ்வளவு ஸ்திரீகளிலும் பழுவேட்டரையரின் இளைய ராணி தான் பிரமாத அழகுடன் விளங்கினாள்! மற்ற கருநிறத்து மங்கையர்க்கு நடுவில் அந்த ராணியின் முகம் பூரண சந்திரனைப் போல் பொலிந்தது. அரம்பை, ஊர்வசி, திலோத்தமை, இந்திராணி, சந்திராணி எல்லோரும் அவளுக்கு அப்புறந்தான்!”
“அடேயப்பா! ஒரேயடியாக வர்ணிக்கிறாயே? பிறகு என்ன நடந்தது? குரவைக் கூத்து நடந்ததா?”
“நடந்தது, மிகவும் நன்றாயிருந்தது. அப்போது உம்மை நினைத்துக் கொண்டேன்.”
“எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. இன்னும் என்ன நடந்தது?”
“வேலனாட்டம் நடந்தது. தேவராளனும் தேவராட்டியும் மேடைக்கு வந்து ஆவேசமாக ஆடினார்கள்.”
“சந்நதம் வந்ததா? ஏதாவது வாக்குச் சொன்னார்களா?”
“ஆகா! நினைத்த காரியம் கைக்கூடும்; மழை பெய்யும்; நிலம் விளையும்; என்றெல்லாம் சந்நதக்காரன் சொன்னான்…”
“அவ்வளவுதானா?”
“இன்னும் ஏதோ இராஜாங்க விஷயமாகச் சொன்னான். நான் அதையொன்றும் கவனிக்கவில்லை.”
“அடாடா! இவ்வளவுதானா? கவனித்திருக்க வேண்டும், தம்பி! நீ இளம் பிள்ளை; நல்ல வீர பராக்கிரம் உடையவனாய்த் தோன்றுகிறாய். இராஜாங்க விஷயங்களைப் பற்றி எங்கேயாவது யாராவது பேசினால் காதில் கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.”
“நீர் சொல்வது உண்மை. எனக்குக் கூட இன்று காலையில் அப்படித்தான் தோன்றியது.”
“காலையில் தோன்றுவானேன்?”
“காலையில் கந்தமாறனும் நானும் பேசிக்கொண்டே கொள்ளிடக்கரை வரையில் வந்தோம். இராத்திரி நான் படுத்துத் தூங்கிய பிறகு, கடம்பூர் மாளிகைக்கு வந்திருந்த விருந்தாளிகள் கூட்டம் போட்டு ஏதேதோ இராஜாங்க விஷயமாகப் பேசினார்களாம்.”
“என்ன பேசினார்களாம்?”
“அது எனக்குத் தெரியாது. கந்தமாறன் ஏடாகூடமாகச் சொன்னானே தவிர, தெளிவாகச் சொல்லவில்லை, ஏதோ ஒரு காரியம் சீக்கிரம் நடக்கப் போகிறது. அப்போது சொல்கிறேன் என்றான். அவன் பேச்சே மர்மமாயிருந்தது. ஏன், சுவாமிகளே! உங்களுக்கு ஏதாவது தெரியுமா?”
“எதைப் பற்றி?”
“நாடு நகரமெல்லாம் ஏதேதோ பேசிக் கொள்கிறார்களே? வானத்தில் வால் நட்சத்திரம் காணப்படுகிறது; இராஜாங்கத்துக்கு ஏதோ ஆபத்து இருக்கிறது; சோழ சிம்மாசனத்தில் மாறுதல் ஏற்படும்; அப்படி, இப்படி – என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். தொண்டை மண்டலம் வரையில் இந்தப் பேச்சு எட்டியிருக்கிறது. இன்னும் யார் யாரோ பெரிய கைகள் சேர்ந்து, அடிக்கடி கூடி, அடுத்து பட்டத்துக்கு யார் என்று யோசித்து வருகிறார்களாம். உங்களுக்கு என்ன தோன்றுகிறது? – அடுத்து பட்டத்துக்கு யார் வரக்கூடும்?”
“எனக்கு அதெல்லாம் தெரியாது, தம்பி! இராஜாங்க காரியங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் வைஷ்ணவன்; ஆழ்வார்களின் அடியார்க்கு அடியான்; எனக்குத் தெரிந்த பாசுரங்களைப் பாடிக்கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறவன்!”
இவ்வாறு ஆழ்வார்க்கடியான் கூறி, “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று பாடத் தொடங்கவும், வந்தியத்தேவன் குறுக்கிட்டு, “உமக்குப் புண்ணியமாய்ப் போகட்டும், நிறுத்தும்!” என்றான்.
“அடடா! தெய்வத் தமிழ்ப் பாசுரத்தை நிறுத்தச் சொல்கிறாயே?”
“ஆழ்வார்க்கடியான் நம்பிகளே! எனக்கு ஒரு சந்தேகம் உதித்திருக்கிறது அதைச் சொல்லட்டுமா?”
“நன்றாய்ச் சொல்லு!”
“தடியைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரமாட்டீரே?”
“உன்னையா? உன்னை அடிக்க என்னாலே முடியுமா?”
“உம்முடைய வைஷ்ணவம், பக்தி, ஊர்த்தவ புண்டரம், பாசுரப் பாடல் – எல்லாம் வெறும் வேஷம் என்று சந்தேகிக்கிறேன்.”
“ஐயையோ! இது என்ன பேச்சு? அபசாரம்! அபசாரம்!”
“அபசாரமும் இல்லை, உபசாரமும் இல்லை. உம்முடைய பெண்ணாசையை மறைப்பதற்காக இந்த மாதிரி வேஷம் போடுகிறீர். உம்மைப் போல் இன்னும் சிலரையும் நான் பார்த்திருக்கிறேன். பெண்ணாசைப் பித்து பிடித்து அலைகிறவர்கள். அப்படி என்னதான் பெண்களிடம் காண்கிறீர்களோ, அதுதான் எனக்குத் தெரியவில்லை. எனக்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் வெறுப்பாகவே இருக்கிறது.”
“தம்பி! பெண் பித்துப் பிடித்து அலைகிறவர்கள் சிலர் உண்டு. ஆனால் அவர்களோடு என்னைச் சேர்க்காதே, நான் வேஷதாரி அல்ல. நீ அவ்விதம் சந்தேகிப்பது ரொம்பத் தவறு.”
“அப்படியானால் பல்லக்கில் வந்த அந்தப் பெண்ணிடம் ஓலை கொடுக்கும்படி என்னை ஏன் கேட்டீர்? அதிலும் இன்னொரு மனுஷன் மணம் புரிந்து கொண்ட பெண்ணிடம் மனதைச் செலுத்தலாமா? நீர் கடம்பூர் மாளிகைக்கு வரவேண்டும் என்று சொன்னதும் அவளைப் பார்ப்பதற்குத்தானே? இல்லை என்று சொல்ல வேண்டாம்!”
“இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கு நீ கூறிய காரணம் தவறு. வேறு தகுந்த காரணம் இருக்கிறது. அது பெரிய கதை.”
“குதிரை இன்னும் வரக்காணோம். அந்தக் கதையைத்தான் சொல்லுங்களேன்! கேட்கலாம்!”
“கதை என்றால், கற்பனைக் கதை அல்ல; உண்மையாக நடந்த கதை. அதிசய வரலாறு! கேட்டால் திகைத்துப் போவாய்! அவசியம் சொல்லத்தான் வேண்டுமா?”
“இஷ்டமிருந்தால் சொல்லுங்கள்!”
“ஆம், சொல்லுகிறேன். கொஞ்சம் எனக்கு அவசரமாய்ப் போக வேண்டும், இருந்தாலும் சொல்லிவிட்டுப் போகிறேன். மறுபடியும் உன்னிடம் ஏதாவது உதவி கோரும்படியிருந்தாலும் இருக்கும். அப்போது தட்டாமல் செய்வாய் அல்லவா?”
“நியாயமாயிருந்தால் செய்வேன். உங்களுக்கு இஷ்டமில்லாவிட்டால் ஒன்றும் சொல்ல வேண்டாம்.”
“இல்லையில்லை! உன்னிடம் கட்டாயம் சொல்லியே தீரவேண்டும். அந்த இரணியாசுரன் பழுவேட்டரையரின் இளம் மனைவி இருக்கிறாளே, நான் ஓலை கொண்டு போகச் சொன்னேனே, அவள் பெயர் நந்தினி. அவளுடைய கதையை நீ கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவாய். உலகில் இப்படியும் அக்கிரமம் உண்டா என்று பொங்குவாய்!” இந்த முன்னுரையுடன் ஆழ்வார்க்கடியான் நந்தினியைப் பற்றிய கதையை ஆரம்பித்தான்.
ஆழ்வார்க்கடியான் பாண்டிய நாட்டில் வைகை நதிக்கரையில் ஒரு கிராமத்தில் பிறந்தவன். அவனுடைய குடும்பத்தார் பரம பக்தர்களான வைஷ்ணவர்கள். அவனுடைய தந்தை ஒருநாள் நதிக்கரையில் உள்ள நந்தவனத்துக்குப் போனார். அங்கே ஒரு பெண் குழந்தை அனாதையாகக் கிடப்பதைக் கண்டார். குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். குழந்தை களையாகவும் அழகாகவும் இருந்தபடியால் குடும்பத்தார் அன்புடன் போற்றிக் காப்பாற்றினார்கள். நந்தவனத்தில் அகப்பட்டபடியால் நந்தினி என்று குழந்தைக்குப் பெயரிட்டார்கள். ஆழ்வார்க்கடியான் அப்பெண்ணைத் தன் தங்கை என்று கருதிப் பாராட்டி வந்தான்.
நந்தினிக்குப் பிராயம் வளர்ந்து வந்தது போல் பெருமாளிடமும் பக்தியும் வளர்ந்து வந்தது. அவள் மற்றொரு ‘ஆண்டாள்’ ஆகிப் பக்தர்களையெல்லாம் ஆட்கொள்ளப் போகிறாள் என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை ஆழ்வார்க்கடியானுக்கு அதிகமாயிருந்தது. தந்தை இறந்த பிறகு அப்பெண்ணை வளர்க்கும் பொறுப்பை அவனே ஏற்றுக் கொண்டான். இருவரும் ஊர் ஊராகச் சென்று ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடி வைஷ்ணவத்தைப் பரப்பி வந்தார்கள். நந்தினி துளசிமாலை அணிந்து பக்திப் பரவசத்துடன் பாசுரம் பாடியதைக் கேட்டவர்கள் மதிமயங்கிப் போனார்கள்.
ஒரு சமயம் ஆழ்வார்க்கடியான் திருவேங்கடத்துக்கு யாத்திரை சென்றான். திரும்பி வரக் காலதாமதமாகிவிட்டது. அப்போது நந்தினிக்கு ஒரு விபரீதம் நேர்ந்துவிட்டது.
பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இறுதிப் பெரும்போர் மதுரைக்கு அருகில் நடந்தது. பாண்டியர் சேனை சர்வ நாசம் அடைந்தது. வீரபாண்டியன் உடம்பெல்லாம் காயங்களுடன் போர்க்களத்தில் விழுந்திருந்தான். அவனுடைய அந்தரங்க ஊழியர்கள் சிலர் அவனைக் கண்டுபிடித்து எடுத்து உயிர் தப்புவிக்க முயன்றார்கள். இரவுக்கிரவே, நந்தினியின் வீட்டில் கொண்டு வந்து சேர்த்தார்கள். பாண்டியனுடைய நிலைமையைக் கண்டு மனமிரங்கி நந்தினி அவனுக்குப் பணிவிடை செய்தாள். ஆனால் சீக்கிரத்தில் சோழ வீரர்கள் அதைக் கண்டுபிடித்து விட்டார்கள். நந்தினியின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு உட்புகுந்து வீரபாண்டியனைக் கொன்றார்கள். நந்தினியின் அழகைக் கண்டு மோகித்துப் பழுவேட்டரையர் அவளைச் சிறைபிடித்துக் கொண்டு போய்விட்டார்.
இது மூன்று வருஷத்துக்கு முன்னால் நடந்தது. பிறகு ஆழ்வார்க்கடியான் நந்தினியைப் பார்க்கவே முடியவில்லை. அன்று முதல் ஒரு தடவையேனும் நந்தினியைத் தனியே சந்தித்துப் பேசவும், அவள் விரும்பினால் அவளை விடுதலை செய்து கொண்டு போகவும் ஆழ்வார்க்கடியான் முயன்று கொண்டிருக்கிறான். இது வரையில் அம்முயற்சியில் வெற்றி பெறவில்லை…
இந்த வரலாற்றைக் கேட்ட வந்தியத்தேவனுடைய உள்ளம் உருகிவிட்டது. கடம்பூர் மாளிகையில் பல்லக்கில் இருந்தது நந்தினி இல்லை என்றும், இளவரசன் மதுராந்தகன் என்றும் ஆழ்வார்க்கடியானிடம் சொல்லி விடலாமா என்று ஒரு கணம் யோசித்தான். பிறகு, ஏதோ ஒன்று மனத்தில் தடை செய்தது. ஒரு வேளை இந்தக் கதை முழுதும் ஆழ்வார்க்கடியானின் கற்பனையோ என்று தோன்றியது. ஆகையால் கடம்பூர் மாளிகையில் தான் அறிந்து கொண்ட இரகசியத்தைச் சொல்லவில்லை.
அப்போது சற்று தூரத்தில், கடம்பூர் வீரன் குதிரையுடன் வந்து கொண்டிருந்தான்…
“தம்பி! எனக்கு நீ உதவி செய்வாயா?” என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.
“நான் என்ன உதவி செய்ய முடியும்? பழுவேட்டரையர் இந்தச் சோழப் பேரரசையே ஆட்டுவிக்கும் ஆற்றல் உடையவர். நானோ ஒரு செல்வாக்குமில்லாத தன்னந் தனி ஆள். என்னால் என்ன செய்ய முடியும்?” என்று வந்தியத்தேவன் ஜாக்கிரதையாகவே பேசினான். பிறகு, “நம்பிகளே! இராஜாங்க காரியங்களைப் பற்றி உமக்கு ஒன்றுமே தெரியாது என்றா சொல்கிறீர்கள். சுந்தர சோழ மகாராஜாவுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அடுத்த பட்டத்துக்கு உரியவர் யார் என்று உம்மால் சொல்ல முடியாதா?” என்றான்.
இப்படிக் கேட்டு விட்டு, அடியானுடைய முகபாவத்தில் ஏதாவது மாறுதல் ஏற்படுகிறதா என்று வந்தியத்தேவன் ஆவலுடன் பார்த்தான், லவலேசமும் மாறுதல் ஏற்படவில்லை.
“அதெல்லாம் எனக்கு என்ன தெரியும், தம்பி! குடந்தை ஜோசியரைக் கேட்டால் ஒருவேளை சொல்வார்!” என்றான் நம்பி.
“ஓஹோ! குடந்தை சோதிடர் உண்மையிலே அவ்வளவு கெட்டிக்காரர்தானா?”
“அசாத்திய கெட்டிக்காரர்! சோதிடமும் பார்த்துச் சொல்வார்; மனதையும் அறிந்து சொல்வார்; உலக விவகாரங்களை அறிந்து, அதற்கேற்பவும் ஆருடம் சொல்லுவார்!”
“அப்படியானால் அவரைப் பார்த்து விட்டுப் போக வேண்டியதுதான்!” என்று வந்தியத்தேவன் மனதில் தீர்மானித்துக் கொண்டான்.
ஆதிகாலத்திலிருந்து மனித குலத்துக்கு வருங்கால நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதில் பிரேமை இருந்து வருகிறது. அரசர்களுக்கும் அந்தப் பிரேமை உண்டு; ஆண்டிகளுக்கும் உண்டு; முற்றும் துறந்த முனிவர்களுக்கும் உண்டு; இல்லறத்தில் உள்ள ஜனங்களுக்கும் உண்டு; அறிவிற் சிறந்த மேதாவிகளுக்கும் உண்டு; மூடமதியினர்களுக்கும் உண்டு. இத்தகைய பிரேமை, நாடு நகரங்களைக் கடந்து பல அபாயங்களுக்குத் துணிந்து, அரசாங்க அந்தரங்கப் பணியை நிறைவேற்றுவதற்காகப் பிரயாணம் செய்துகொண்டிருந்த நம்முடைய வாலிப வீரனுக்கும் இருந்ததில் ஆச்சரியம் இல்லை அல்லவா?
No comments:
Post a Comment