Saturday 15 September 2012

அத்தியாயம் 14 – ஆற்றங்கரை முதலை


குடந்தை நகரிலிருந்து தஞ்சாவூர் செல்வோர் அந்தக் காலத்தில் அரிசலாற்றங்கரையோடாவது காவேரிக் கரையின் மேலாவது சென்று, திருவையாற்றை அடைவார்கள். அங்கிருந்து தெற்கே திரும்பித் தஞ்சாவூர் போவார்கள். வழியிலுள்ள குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு நதிகளைத் தாண்ட அங்கே தான் வசதியான துறைகள் இருந்தன.
குடந்தையிலிருந்து புறப்பட்ட வல்லவரையன், முதலில் அரிசிலாற்றங்கரையை நோக்கிச் சென்றான். வழியில் அவன் பார்த்த காட்சிகள் எல்லாம் சோழ நாட்டைக் குறித்து அவன் கேள்விப்பட்டிருந்ததைக் காட்டிலும் அதிகமாகவே அவனைப் பிரமிக்கச் செய்தன. எந்த இனிய காட்சியையும் முதல் முறை பார்க்கும்போது அதன் இனிமை மிகுந்து தோன்றுமல்லவா? பசும்பயிர் வயல்களும், இஞ்சி மஞ்சள் கொல்லைகளும், கரும்பு வாழைத் தோட்டங்களும், தென்னை, கமுகுத் தோப்புகளும், வாவிகளும், ஓடைகளும், குளங்களும், வாய்க்கால்களும் மாறி மாறி வந்து கொண்டேயிருந்தன. ஓடைகளில் அல்லியும் குவளையும் காடாகப் பூத்துக் கிடந்தன. குளங்களில் செந்தாமரையும் வெண்தாமரையும் நீலோத்பவமும் செங்கழுநீரும் கண்கொள்ளாக் காட்சியளித்தன. வெண்ணிறக் கொக்குகள் மந்தை மந்தையாகப் பறந்தன. செங்கால் நாரைகள் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தன. மடைகளின் வழியாகத் தண்ணீர் குபுகுபு என்று பாய்ந்தது. நல்ல உரமும் தழை எருவும் போட்டுப் போட்டுக் கன்னங்கரேலென்றிருந்த கழனிகளின் சேற்றை உழவர்கள் மேலும் ஆழமாக உழுது பண்படுத்தினார்கள். பண்பட்ட வயல்களில் பெண்கள் நடவு நட்டார்கள். நடவு செய்து கொண்டே, இனிய கிராமிய பாடல்களைப் பாடினார்கள். கரும்புத் தோட்டங்களின் பக்கத்தில் கரும்பு ஆலைகள் அமைத்திருந்தார்கள். சென்ற ஆண்டில் பயிரிட்ட முற்றிய கருப்பங்கழிகளை வெட்டி அந்தக் கரும்பு ஆலைகளில் கொடுத்துச் சாறு பிழிந்தார்கள். கரும்புச் சாற்றின் மணமும், வெல்லம் காய்ச்சும் மணமும் சேர்ந்து கலந்து வந்து மூக்கைத் தொளைத்தன.
தென்னந்தோப்புகளின் மத்தியில் கீற்று ஓலைகள் வேயப்பட்ட குடிசைகளும் ஓட்டு வீடுகளும் இருந்தன. கிராமங்களில் வீட்டு வாசலைச் சுத்தமாக மெழுகிப் பெருக்கித் தரையைக் கண்ணாடி போல் வைத்திருந்தார்கள். சில வீடுகளின் வாசல்களில் நெல் உலரப் போட்டிருந்தார்கள். அந்த நெல்லைக் கோழிகள் வந்து கொத்தித் தின்றுவிட்டு, “கொக்கரக்கோ!” என்று கத்திக் கொண்டு திரும்பிப் போயின. நெல்லைக் காவல் காத்துக் கொண்டிருந்த பெண் குழந்தைகள் அக்கோழிகளை விரட்டி அடிக்கவில்லை. “கோழி அப்படி எவ்வளவு நெல்லைத் தின்றுவிடப் போகிறது?” என்று அலட்சியத்துடன் அக்குழந்தைகள் சோழியும் பல்லாங்குழியும் ஆடிக் கொண்டிருந்தார்கள். குடிசைகளின் கூரைகளின் வழியாக அடுப்புப் புகை மேலே வந்து கொண்டிருந்தது. அடுப்புப் புகையுடன் நெல்லைப் புழுக்கும் மணமும், கம்பு வறுக்கும் மணமும், இறைச்சி வதக்கும் நாற்றமும் கலந்து வந்தன. அக்காலத்தில் போர் வீரர்கள் பெரும்பாலும் மாமிசபட்சணிகளாகவே இருந்தார்கள். வல்லவரையனும் அப்படித்தான்; எனவே அந்த மணங்கள் அவனுடைய நாவில் ஜலம் ஊறச் செய்தன.
ஆங்காங்கே சாலை ஓரத்தில் கொல்லர் உலைக்களங்கள் இருந்தன. உலைகளில் நெருப்புத் தணல் தகதகவென்று ஜொலித்தது. இரும்பைப் பட்டறையில் வைத்து அடிக்கும் சத்தம் ‘டணார், டணார்’ என்று கேட்டது. அந்த உலைக் களங்களில் குடியானவர்களுக்கு வேண்டிய ஏர்க்கொழு, மண்வெட்டி, கடப்பாரை முதலியவற்றுடன், கத்திகள், கேடயங்கள், வேல்கள், ஈட்டிகள் முதலியன கும்பல் கும்பலாகக் கிடந்தன. அவற்றை வாங்கிக் கொண்டு போகக் குடியானவர்களும் போர் வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டு காத்திருந்தார்கள்.
சிறிய கிராமங்களிலும் சின்னஞ்சிறு கோவில்கள் காட்சி அளித்தன. கோவிலுக்குள்ளே சேமக்கலம் அடிக்கும் சத்தமும், நகரா முழங்கும் சத்தமும், மந்திரகோஷமும், தேவாரப் பண்பாடலும் எழுந்தன. மாரியம்மன் முதலிய கிராம தேவதைகளை மஞ்சத்தில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு பூசாரிகள் கரகம் எடுத்து ஆடிக் கொண்டும் உடுக்கு அடித்துக் கொண்டும் வந்து நெல் காணிக்கை தண்டினார்கள். கழுத்தில் மணி கட்டிய மாடுகளைச் சிறுவர்கள் மேய்ப்பதற்கு ஓட்டிப் போனார்கள். அவர்களில் சிலர் புல்லாங்குழல் வாசித்தார்கள்!
குடியானவர்கள் வயலில் வேலை செய்த அலுப்புத் தீர மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறினார்கள். அப்போது செம்மறியாடுகளைச் சண்டைக்கு ஏவிவிட்டு அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். வீட்டுக் கூரைகளின் மேல் பெண் மயில்கள் உட்கார்ந்து கூவ, அதைக் கேட்டு ஆண் மயில்கள் தோகையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஜிவ்வென்று பறந்துபோய் அப்பெண் மயில்களுக்கு பக்கத்தில் அமர்ந்தன. புறாக்கள் அழகிய கழுத்தை அசைத்துக் கொண்டு அங்குமிங்கும் சுற்றின. பாவம்! கூண்டுகளில் அடைபட்ட கிளிகளும் மைனாக்களும் சோக கீதங்கள் இசைத்தன. இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் பார்த்துக் களித்துக் கொண்டு வந்தியத்தேவன் குதிரையை மெல்ல செலுத்திக் கொண்டு சென்றான்.
அவனுடைய கண்களுக்கு நிறைய வேலை இருந்தது. மனமும் இந்தப் பல்வேறு காட்சிகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தது. ஆயினும் அவன் உள்மனத்திலே இலேசாகப் பனியினால் மூடுண்டது போல், ஒரு பெண்ணின் முகம் தெரிந்து கொண்டேயிருந்தது. ஆகா! அந்தப் பெண் அவளுடைய செவ்விதழ்களைத் திறந்து தன்னுடன் சில வார்த்தை பேசியிருக்கக் கூடாதா? பேசியிருந்தால் அவளுக்கு என்ன நஷ்டமாகியிருக்கும்? அந்தப் பெண் யாராயிருக்கும்? யாராயிருந்தாலும் கொஞ்சம் மரியாதை என்பது வேண்டாமா? என்னைப் பார்த்தால் அவ்வளவு அலட்சியம் செய்வதற்குரியவனாகவா தோன்றுகிறது? அந்தப் பெண் யார் என்பதைச் சொல்லாமலே அந்தச் சோதிடக் கிழவன் ஏமாற்றிவிட்டார் அல்லவா! அவர் கெட்டிக்காரர்; அசாத்தியக் கெட்டிக்காரர். பிறருடைய மனத்தை எப்படி ஆழம் பார்த்துக் கொள்கிறார்? எவ்வளவு உலக அனுபவத்துடன் வார்த்தை சொல்லுகிறார்? முக்கியமான விஷயம் ஒன்றும் அவர் சொல்லவில்லைதான்! இராஜாங்க சம்பந்தமான பேச்சுக்களில் அவர் மிகவும் ஜாக்கிரதையாக எதுவும் சொல்லாமல் தப்பித்துக் கொண்டார். அல்லது எல்லோருக்கும் தெரிந்ததையே விகசித சாதுரியத்துடனே சொல்லிச் சமாளித்துக் கொண்டார். ஆனாலும் தன்னுடைய அதிர்ஷ்ட கிரகங்கள் உச்சத்துக்கு வந்திருப்பதாக நல்ல வார்த்தை சொன்னார் அல்லவா? குடந்தை ஜோதிடர் நன்றாயிருக்கட்டும்…
இவ்வாறெல்லாம் சிந்தித்துக் கொண்டு வந்தியத்தேவன் சென்றான். அவ்வப்போது எதிர்ப்பட்ட காட்சிகள் இடையிடையே அவனைச் சிந்தனை உலகத்திலிருந்து இவ்வுலகத்துக்கு இழுத்தன. கடைசியில் அரிசிலாற்றங் கரையை அடைந்தான். சிறிது தூரம் ஆற்றங் கரையோடு சென்றதும், பெண்களின் கைவளை குலுங்கும் சத்தமும், கலகலவென்று சிரிக்கும் ஒலியும் கேட்டன. அவர்கள் இருக்குமிடம் தெரியாமல் அரிசிலாற்றங் கரையில் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் மறைத்துக் கொண்டிருந்தன. எங்கிருந்து அப்பெண்களின் குரல் ஒலி வருகிறது என்று கண்டுபிடிக்க வந்தியத்தேவன் ஆற்றங்கரை ஓரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே சென்றான்.
திடீரென்று, “ஐயோ! ஐயோ! முதலை! முதலை! பயமாயிருக்கிறதே!” என்ற அபயக் குரலையும் கேட்டான். குரல் வந்த திசையை நோக்கிக் குதிரையைத் தட்டி விட்டான். அந்தப் பெண்கள் இருந்த இடம் இரு மரங்களின் இடைவெளி வழியாக அவனுக்குத் தெரிந்தது. அவர்களில் பலருடைய முகங்களில் பீதி குடிகொண்டிருந்தது. அதிசயம்! அதிசயம்! அவர்களிலே இருவர் ஜோதிடர் வீட்டிற்குள்ளே வந்தியத்தேவன் பிரவேசித்ததும் புறப்பட்டுச் சென்றவர்கள்தான். இதையெல்லாம் நொடி நேரத்தில் வந்தியத்தேவன் பார்த்துத் தெரிந்து கொண்டான். அதை மட்டுமா பார்த்தான்? ஓர் அடர்ந்த நிழல் தரும் பெரிய மரத்தின் அடியில், வேரோடு வேராக, பாதி தரையிலும் பாதி தண்ணீரிலுமாக ஒரு பயங்கரமான முதலை வாயைப் பிளந்து கொண்டிருந்தது. சமீபத்திலேதான் கொள்ளிட நதியில் ஒரு கொடூரமான முதலை வாயைப் பிளந்து கொண்டு வந்ததை வந்தியத்தேவன் பார்த்திருந்தான். முதலை எவ்வளவு பயங்கரமான பிராணி என்பதையும் கேட்டிருந்தான். ஆகவே இந்த முதலையைப் பார்த்ததும் அவன் உள்ளம் கலங்கி, உடல் பதறிப் போனான். ஏனெனில், அந்த முதலை சற்றுமுன் கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு வெகு சமீபத்தில் இருந்தது. வாயைப் பிளந்து கொண்டு, கோரமான பற்களைக் காட்டிக் கொண்டு, பயங்கர வடிவத்துடன் இருந்தது. முதலை இன்னும் ஒரு பாய்ச்சல் பாய வேண்டியதுதான். அந்தப் பெண்களின் கதி அதோகதியாகி விடும்! அந்தப் பெண்களோ, பின்னால் அடர்த்தியாயிருந்த மரங்களினால் தப்பி ஓடுவதற்கும் முடியாத நிலையில் இருந்தார்கள்.
வந்தியத்தேவனுடைய உள்ளம் எவ்வளவு குழம்பியிருந்தாலும் அவன் உறுதி அணுவளவும் குன்றவில்லை. தான் செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றியும் அவன் ஒரு கணத்துக்கு மேல் சிந்திக்கவில்லை. கையிலிருந்த வேலைக் குறி பார்த்து ஒரே வீச்சாக வீசி எறிந்தான். வேல் முதலையின் கெட்டியான முதுகில் பாய்ந்து சிறிது உள்ளேயும் சென்று செங்குத்தாக நின்றது. உடனே நமது வீரன் உடைவாளை உருவிக் கொண்டு முதலையை ஒரேயடியாக வேலை தீர்த்துவிடுவது என்ற உறுதியுடன் பாய்ந்து ஓடி வந்தான்.
முன்போலவே, அந்தச் சமயத்தில் அப்பெண்கள் கலகலவென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. வந்தியத்தேவன் காதுக்கு அது நாராசமாயிருந்தது. இத்தகைய அபாயகரமான வேளையில் எதற்காக அவர்கள் சிரிக்கிறார்கள்? பாய்ந்து ஓடி வந்தவன் ஒரு கணம் திகைத்து நின்றான். அப்பெண்களின் முகங்களைப் பார்த்தான். பயமோ பீதியோ அம்முகங்களில் அவன் காணவில்லை. அதற்கு மாறாகப் பரிகாசச் சிரிப்பின் அறிகுறிகளையே கண்டான்.
சற்றுமுன், “ஐயோ ஐயோ!” என்று கத்தியவர்கள் அவர்கள்தான் என்றே நம்ப முடியவில்லை.
அவர்களில் ஒருத்தி… ஜோதிடர் வீட்டில் தான் பார்த்த பெண் – கம்பீரமான இனிய குரலில், “பெண்களே! சும்மா இருங்கள், எதற்காகச் சிரிக்கிறீர்கள்?” என்று அதட்டும் குரலில் கூறியது கனவில் கேட்பது போல அவன் காதில் விழுந்தது.
முதலையண்டை பாய்ந்து சென்றவன் வாளை ஓங்கியவண்ணம் தயங்கி நின்றான். முதலையை உற்றுப் பார்த்தான்; அந்தப் பெண்களின் முகங்களையும் இன்னொரு தடவை உற்றுப் பார்த்தான். அவன் உள்ளத்தை வெட்கி மருகச் செய்த, உடலைக் குன்றச் செய்த, ஒரு சந்தேகம் உதித்தது. இதற்குள்ளாக அந்தப் பெண்மணி மற்றவர்களைப் பிரிந்து முன்னால் வந்தாள். முதலைக்கு எதிர்ப்புறத்தில் அதைக் காப்பாற்றுகிறவளைப் போல் நின்றாள்.
“ஐயா! தங்களுக்கு மிக்க வந்தனம் தாங்கள் வீணில் சிரமப்பட வேண்டாம்!” என்றாள்.

Saturday 8 September 2012

அத்தியாயம் 13 – வளர்பிறைச் சந்திரன்


இளவரசிகளின் ரதம் கண்ணுக்கு மறைந்த பிறகு, சோதிடர் வந்தியத்தேவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். தம்முடைய ஆஸ்தான பீடத்தில் அமர்ந்தார். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த அவ்வாலிபனையும் உட்காரச் சொன்னார்; அவனை ஏற இறங்கப் பார்த்தார்.
“தம்பி! நீ யார்? எங்கே வந்தாய்?” என்று கேட்டார், வந்தியத்தேவன் சிரித்தான்.
“என்னப்பா, சிரிக்கிறாய்?”
“இல்லை, தாங்கள் இவ்வளவு பிரபலமான ஜோதிடர் என்னை கேள்வி கேட்கிறீர்களே? நான் யார், எதற்காகத் தங்களிடம் வந்தேன் என்று ஜோதிடத்திலேயே பார்த்துக் கொள்ளக் கூடாதா?”
“ஓகோ! அதற்கென்ன? பார்த்துக் கொள்கிறேன். ஆனால் எனக்கு நானே ஜோசியம் பார்த்துக் கொண்டால், தட்சிணை யார் கொடுப்பார்கள் என்றுதான் யோசிக்கிறேன்.”
வந்தியத்தேவன் புன்னகை செய்து விட்டு, “ஜோதிடரே! இப்போது இங்கே வந்துவிட்டுப் போனார்களே? அவர்கள் யார்?” என்று கேட்டான்.
“ஓ! அவர்களா? நீ யாரைப் பற்றிக் கேட்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. தெரியும் தம்பி, தெரியும்! நீ என் சீடனைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது இங்கே இருந்தார்களே, அவர்களைப் பற்றித்தான் கேட்கிறாய், இல்லையா? ரதத்தில் ஏறிக் கொண்டு, பின்னால் புழுதியைக் கிளப்பி விட்டுக் கொண்டு போனார்களே, அவர்களைப் பற்றித்தானே?” என்று குடந்தை சோதிடர் சுற்றி வளைத்துக் கேட்டார்.
“ஆமாம், ஆமாம்! அவர்களைப் பற்றித் தான் கேட்டேன்…”
“நன்றாகக் கேள். கேட்க வேண்டாம் என்று யார் சொன்னது? அவர்கள் இரண்டு பேரும் இரண்டு பெண்மணிகள்!”
“அது எனக்கே தெரிந்து போய்விட்டது; ஜோதிடரே! நான் குருடன் இல்லை. ஆண்களையும் பெண்களையும் நான் வித்தியாசம் கண்டு பிடித்து விடுவேன். பெண் வேடம் பூண்ட ஆணாயிருந்தால் கூட எனக்குத் தெரிந்து போய்விடும்.”
“பின்னே என்ன கேட்கிறாய்?..”
“பெண்கள் என்றால், அவர்கள் இன்னார், இன்ன ஜாதி..”
“ஓகோ! அதையா கேட்கிறாய்? பெண்களில் பத்மினி, சித்தினி, காந்தர்வி, வித்யாதரி என்பதாக நாலு ஜாதிகள் உண்டு. உனக்குச் சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தில் கொஞ்சம் பயிற்சி இருக்கும் போலிருக்கிறது. அந்த நாலு ஜாதிகளில் இவர்கள் பத்மினி, காந்தர்வி ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்.”
“கடவுளே!…”
“ஏன்? அப்பனே!”
“கடவுளை நான் கூப்பிட்டால், நீங்கள் ‘ஏன்?’ என்று கேட்கிறீர்களே?”
“அதில் என்ன பிசகு? கடவுள் சர்வாந்தர்யாமி என்று நீ கேட்டதில்லையா? பெரியவர்களுடைய சகவாசம் உனக்கு அவ்வளவாகக் கிடையாது போலிருக்கிறது! எனக்குள்ளே இருப்பவரும் கடவுள் தான்; உனக்குள்ளே இருப்பவரும் கடவுள் தான். நீ இழுத்துக் கொண்டு உள்ளே வந்தாயே அந்த என் சீடனுக்குள்ளே இருப்பவரும் கடவுள்தான்…”
“போதும், போதும், நிறுத்துங்கள்.”
“இத்தனை நேரம் பேசச் சொன்னதும் கடவுள்தான்; இப்போது நிறுத்தச் சொல்வதும் கடவுள்தான்!”
“ஜோதிடரே! இப்போது இங்கேயிருந்து போனார்களே, அந்தப் பெண்கள் யார், எந்த ஊர், என்ன குலம், என்ன பெயர், என்று கேட்டேன். சுற்றி வளைக்காமல் மறுமொழி சொன்னால்..”
“சொன்னால் எனக்கு நீ என்ன தருவாய் அப்பனே!”
“என் வந்தனத்தைத் தருவேன்.”
“உன் வந்தனத்தை நீயே வைத்துக்கொள். ஏதாவது பொன்தானம் கொடுப்பதாயிருந்தால் சொல்லு!”
“பொன்தானம் கொடுத்தால் நிச்சயமாய்ச் சொல்லுவீர்களா?”
“அதுவும் சொல்லக்கூடியதாயிருந்தால்தான் சொல்லுவேன்! தம்பி! இதைக் கேள். ஜோதிடன் வீட்டுக்குப் பலரும் வந்து போவார்கள். ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லக் கூடாது. இப்போது போனவர்களைப் பற்றி உன்னிடம் சொல்ல மாட்டேன். உன்னைப் பற்றி வேறு யாராவது கேட்டால் அவர்களுக்கும் உன்னைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்ல மாட்டேன்.”
“ஆகா! ஆழ்வார்க்கடியான்நம்பி தங்களைப் பற்றிச் சொன்னது முற்றும் உண்மைதான்.”
“ஆழ்வார்க்கடியாரா? அவர் யார், அப்படி ஒருவர்?”
“தங்களுக்குத் தெரியாதா, என்ன? ரொம்பவும் தங்களைத் தெரிந்தவர்போல் பேசினாரே? ஆழ்வார்க்கடியான் நம்பி என்று கேட்டதேயில்லையா?”
“ஒருவேளை ஆளைத் தெரிந்திருக்கும்; பெயர் ஞாபகம் இராது கொஞ்சம் அடையாளம் சொல்லு, பார்க்கலாம்!”
“கட்டையாயும் குட்டையாயும் இருப்பார், முன் குடுமி வைத்திருப்பார். இளந்தொந்தியில் வேட்டியை இறுக்கிக் கட்டியிருப்பார். சந்தனத்தைக் குழைத்து உடம்பெல்லாம் கீழிருந்து மேலாக இட்டிருப்பார். சைவர்களைக் கண்டால் சண்டைக்குப் போவார். அத்வைதிகளைக் கண்டால் தடியைத் தூக்குவார். சற்றுமுன்னால் ‘நீயும் கடவுள், நானும் கடவுள்’ என்றீர்களே, இதை ஆழ்வார்க்கடியான் கேட்டிருந்தால் ‘கடவுளைக் கடவுள் தாக்குகிறது!’ என்று சொல்லித் தடியினால் அடிக்க வருவார்…”
“தம்பி! நீ சொல்லுவதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் திருமலையப்பனைப் பற்றிச் சொல்லுகிறாய் போலிருக்கிறது..”
“அவருக்கு அப்படி வெவ்வேறு பெயர்கள் உண்டா?”
“ஊருக்கு ஒரு பெயர் வைத்துக் கொள்வார் அந்த வீர வைஷ்ணவர்.”
“ஆளுக்குத் தகுந்த வேஷமும் போடுவாராக்கும்!”
“ஆகா! சமயத்துக்குத் தகுந்த வேஷமும் போடுவார்.”
“சொல்லுவதில் கொஞ்சம் கற்பனையும் பொய்யும் கலந்திருக்குமோ?”
“முக்காலே மூன்றரை வீசம் பொய்யும் கற்பனையும் இருக்கும்; அரை வீசம் உண்மையும் இருக்கலாம்.”
“ரொம்பப் பொல்லாத மனிதர் என்று சொல்லுங்கள்!”
“அப்படியும் சொல்லிவிட முடியாது. நல்லவர்க்கு நல்லவர்; பொல்லாதவர்க்குப் பொல்லாதவர்.”
“அவருடைய பேச்சை நம்பி ஒன்றும் செய்ய முடியாது.”
“நம்புவதும் நம்பாததும் அந்தந்தப் பேச்சைப் பொறுத்திருக்கிறது…”
“உதாரணமாக, தங்களிடம் போய்ச் சோதிடம் கேட்டால் நல்லபடி சொல்லுவீர்கள் என்று அவர் கூறியது…”
“அவர் பேச்சில் அரை வீசம் உண்மையும் இருக்கும் என்றேனே, அந்த அரை வீசத்தில் அது சேர்ந்தது.”
“அப்படியானால் எனக்கு ஏதாவது ஜோதிடம், ஆரூடம் சொல்லுங்கள்; நேரமாகிவிட்டது எனக்குப் போகவேண்டும், ஐயா!”
“அப்படி அவசரமாக எங்கே போக வேண்டும், அப்பனே!”
“அதையும் தாங்கள் ஜோதிடத்தில் பார்த்துச் சொல்லக் கூடாதா? எங்கே போகவேண்டும், எங்கே போகக் கூடாது, போனால் காரியம் சித்தியாகுமா என்பதைப் பற்றியெல்லாந்தான் தங்களைக் கேட்க வந்தேன்.”
“ஜோதிடம், ஆரூடம் சொல்வதற்கும் ஏதாவது ஆதாரம் வேண்டும், அப்பனே! ஜாதகம் வேண்டும்; ஜாதகம் இல்லாவிடில், பிறந்தநாள், நட்சத்திரமாவது தெரிய வேண்டும்; அதுவும் தெரியாவிடில், ஊரும் பேருமாவது சொல்ல வேண்டும்”.
“என் பெயர் வந்தியத்தேவன்!”
“ஆகா! வாணர் குலத்தவனா?”
“ஆமாம்.”
“வல்லவரையன் வந்தியத்தேவனா?”
“சாட்சாத் அவனேதான்.”
“அப்படிச் சொல்லு, தம்பி! முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா? உன் ஜாதகம் கூட என்னிடம் இருந்ததே! தேடிப் பார்த்தால் கிடைக்கும்.”
“ஓஹோ! அது எப்படி?”
“என்னைப் போன்ற ஜோதிடர்களுக்கு வேறு என்ன வேலை. பெரிய வம்சத்தில் பிறந்த பிள்ளைகள் – பெண்கள் இவர்களுடைய ஜாதகங்களையெல்லாம் சேர்த்து வைத்துக் கொள்வோம்”.
“நான் அப்படியொன்றும் பெரிய வம்சத்தில் பிறந்தவன் அல்லவே…”
“நன்றாகச் சொன்னாய்! உன்னுடைய குலம் எப்பேர்ப்பட்ட குலம்! வாணர் குலத்தைப் பற்றிக் கவிவாணர்கள் எவ்வளவு கவிகளையெல்லாம் பாடியிருக்கிறார்கள்! ஒருவேளை நீ கேட்டிருக்க மாட்டாய்.”
“ஒரு கவிதையைத்தான் சொல்லுங்களேன், கேட்கலாம்.”
ஜோதிடர் உடனே பின்வரும் பாடலைச் சொன்னார்:
     ”வாணன் புகழுரையா வாயுண்டோ மாகதர்கோன்
     வாணன் பெயரெழுதா மார்புண்டோ – வாணன்
     கொடி தாங்கி நில்லாத கொம்புண்டோ உண்டோ
     அடிதாங்கி நில்லா அரசு!”
ஜோதிடர் இசைப்புலவர் அல்லவென்பது அவர் பாடும்போது வெளியாயிற்று. ஆயினும் பாடலைப் பண்ணில் அமைத்து மிக விளக்கமாகவும் உருக்கமாகவும் பாடினார்.
“கவி எப்படியிருக்கிறது?” என்று கேட்டார்.
“கவி காதுக்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னுடைய கொடியை ஏதாவது ஒரு மாட்டின் கொம்பில் நானே கட்டி விட்டால்தான் உண்டு. அரசமரத்துக் கிளை மேல் ஏறி நின்றால்தான் அரசு என் அடியைத் தாங்கும்; அதுகூடச் சந்தேகம்தான். கனம் தாங்காமல் கிளை முறிந்து என்னையும் கீழே தள்ளினாலும் தள்ளும்!” என்றான் வந்தியத்தேவன்.
“இன்றைக்கு உன் நிலைமை இப்படி; நாளைக்கு எப்படியிருக்கும் என்று யார் கண்டது?” என்றார் ஜோதிடர்.
“தாங்கள் கண்டிருப்பீர்கள் என்று எண்ணியல்லவா வந்தேன்?” என்றான் வல்லவரையன்.
“நான் என்னத்தைக் கண்டேன், தம்பி! எல்லாரையும் போல் நானும் அற்ப ஆயுள் படைத்த மனிதன்தானே? ஆனால் கிரகங்களும் நட்சத்திரங்களும் வருங்கால நிகழ்ச்சிகளைச் சொல்லுகின்றன. அவை சொல்லுவதை நான் சிறிது கண்டறிந்து கேட்பவர்களுக்குச் சொல்கிறேன், அவ்வளவுதான்!”
“கிரஹங்களும் நட்சத்திரங்களும் என் விஷயத்தில் என்ன சொல்கின்றன ஜோதிடரே?”
“நீ நாளுக்கு நாள் உயர்வாய் என்று சொல்லுகின்றன.”
“சரியாகப் போச்சு! இப்போதுள்ள உயரமே அதிகமாயிருக்கிறது. உங்கள் வீட்டில் நுழையும்போது குனிய வேண்டியிருக்கிறது! இன்னும் உயர்ந்து என்ன செய்வது? இப்படியெல்லாம் பொதுவாகச் சொல்லாமல் குறிப்பாக ஏதாவது சொல்லுங்கள்.”
“நீ ஏதாவது குறிப்பாகக் கேட்டால், நானும் குறிப்பாகச் சொல்லுவேன்.”
“நான் தஞ்சாவூருக்குப் போகிற காரியம் கைகூடுமா? சொல்லுங்கள்.”
“நீ தஞ்சாவூருக்கு உன் சொந்தக் காரியமாகப் போகிறதானால் போகிற காரியம் கைகூடும். இப்போது உனக்கு ஜயக்கிரகங்கள் உச்சமாயிருக்கின்றன. பிறருடைய காரியமாகப் போவதாயிருந்தால், அந்த மனிதர்களுடைய ஜாதகத்தைப் பார்த்துச் சொல்ல வேண்டும்!”
வந்தியத்தேவன் தலையை ஆட்டிக் கொண்டு மூக்கின் மேல் விரலை வைத்து, “ஜோதிடரே! தங்களைப் போன்ற சாமர்த்தியசாலியை நான் பார்த்ததேயில்லை!” என்றான்.
“முகஸ்துதி செய்யாதே, தம்பி!” என்றார் ஜோதிடர்.
“இருக்கட்டும். கேட்க வேண்டியதைத் தெளிவாகவே கேட்டு விடுகிறேன். தஞ்சாவூரில் சக்கரவர்த்தியைத் தரிசிக்க விரும்புகிறேன், அது சாத்தியமாகுமா?”
“என்னைவிடப் பெரிய ஜோதிடர்கள் இருவர் தஞ்சாவூரில் இருக்கிறார்கள் அவர்களைதான் கேட்கவேண்டும்.”
“அவர்கள் யார்?”
“பெரிய பழுவேட்டரையர் ஒருவர்; சின்ன பழுவேட்டரையர் ஒருவர்.”
“சக்கரவர்த்தியின் உடல்நிலை மிக மோசமாகியிருப்பதாகச் சொல்கிறார்களே? அது உண்மையா?”
“யாராவது ஏதாவது சொல்லுவார்கள்! சொல்லுவதற்கு என்ன? அதையெல்லாம் நம்பாதே! வெளியிலும் சொல்லாதே!”
“சக்கரவர்த்திக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அடுத்த பட்டம் யாருக்கு என்று சொல்ல முடியுமா?”
“அடுத்த பட்டம் உனக்குமில்லை; எனக்குமில்லை; நாம் ஏன் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்?”
“அந்த மட்டில் தப்பிப் பிழைத்தோம்!” என்றான் வந்தியத்தேவன்.
“உண்மைதான், தம்பி! பட்டத்துக்குப் பாத்தியதை என்பது சாதாரண விஷயம் அல்ல; மிக்க அபாயகரமான விஷயம் இல்லையா!”
“ஜோசியரே! தற்சமயம் காஞ்சியில் இருக்கிறாரே, இளவரசர் ஆதித்த கரிகாலர்.”
“இருக்கிறார். அவருடைய சார்பாகத்தானே நீ வந்திருக்கிறாய்!”
“கடைசியாகக் கண்டு பிடித்து விட்டீர்கள்; சந்தோஷம் அவருடைய யோகம் எப்படி இருக்கிறது.”
“ஜாதகம் கைவசம் இல்லை, தம்பி! பார்த்துத்தான் சொல்ல வேண்டும்.”
“இளவரசர் மதுராந்தகரின் யோகம் எப்படி?”
“அவருடையது விசித்திரமான ஜாதகம். பெண்களின் ஜாதகத்தை ஒத்தது. எப்போதும் பிறருடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டிருப்பது…”
“இப்போதுகூடச் சோழ நாட்டில் பெண்ணரசு நடைபெறுவதாகச் சொல்கிறார்களே? அல்லி ராஜ்யத்தைவிட மோசம் என்கிறார்களே?”
“எங்கே தம்பி அப்படிச் சொல்லுகிறார்கள்?”
“கொள்ளிடத்துக்கு வடக்கே சொல்லுகிறார்கள்?”
“பெரிய பழுவேட்டரையர் புதியதாக மணம் புரிந்து கொண்ட இளைய ராணியின் ஆதிக்கத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் போலிருக்கிறது.”
“நான் கேள்விப்பட்டது வேறு.”
“என்ன கேள்விப்பட்டாய்?”
“சக்கரவர்த்தியின் திருக்குமாரி குந்தவைப் பிராட்டிதான் அவ்விதம் பெண்ணரசு செலுத்துவதாகச் சொல்கிறார்கள்!”
ஜோதிடர் சற்றே வந்தியத்தேவன் முகத்தை உற்றுப் பார்த்தார். சற்றுமுன் அந்த வீட்டிலிருந்து சென்றது குந்தவை தேவி என்று தெரிந்து கொண்டுதான் அவ்விதம் கேட்கிறானோ என்று முகத்திலிருந்து அறிய முயன்றார். ஆனால் அதற்கு அறிகுறி ஒன்றும் தெரியவில்லை.
“சுத்தத் தவறு, தம்பி! சுந்தர சோழ சக்கரவர்த்தி தஞ்சையில் இருக்கிறார், குந்தவைப்பிராட்டி பழையாறையில் இருக்கிறார் மேலும்…”
“மேலும் என்ன? ஏன் நிறுத்தி விட்டீர்கள்?”
“பகலில் பக்கம் பார்த்துப் பேச வேண்டும்; இரவில் அதுவும் பேசக் கூடாது. ஆனாலும் உன்னிடம் சொன்னால் பாதகமில்லை. இப்போது சக்கரவர்த்திக்கு அதிகாரம் ஏது? எல்லா அதிகாரங்களையும் பழுவேட்டரையர்கள் அல்லவா செலுத்துகிறார்கள்!”
இப்படி சொல்லிவிட்டுச் ஜோதிடர் வந்தியத்தேவனுடைய முகத்தை மறுபடியும் ஒரு தடவை கவனமாகப் பார்த்தார்.
“ஜோதிடரே! நான் பழுவேட்டரையரின் ஒற்றன் அல்ல; அப்படிச் சந்தேகப்பட வேண்டாம். சற்று முன்னால் ராஜ்யங்களும் ராஜவம்சங்களும் நிலைத்து நில்லாமை பற்றிச் சொன்னீர்கள். நான் பிறந்த வாணர் குலத்தையே உதாரணமாகச் சொன்னீர்கள். தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள்; சோழ வம்சத்தின் வருங்காலம் எப்படியிருக்கும்?”
“உண்மையைச் சொல்கிறேன்; சந்தேகம் சிறிதுமின்றிச் சொல்கிறேன். ஆனி மாதக் கடைசியில் காவேரியிலும் காவேரியின் கிளை நதிகளிலும் புதுவெள்ளம் வரும். அப்போது அது நாளுக்கு நாள் பெருகப் போகும் புது வெள்ளம் என்பது காவேரி தீரத்தில் உள்ளவர்களுக்கு நன்றாய்த் தெரியும். ஆவணி, புரட்டாசி வரையிலும் வெள்ளம் பெருகிக் கொண்டுதானிருக்கும். கார்த்திகை, மார்கழியில் வெள்ளம் வடிய ஆரம்பிக்கும். இது வடிகிற வெள்ளம் என்பதும் காவேரிக் கரையில் உள்ளவர்களுக்குத் தெரிந்து போகும். சோழ சாம்ராஜ்யம் இப்போது நாளுக்கு நாள் பெருகும் புதுவெள்ளத்தை ஒத்திருக்கிறது. இன்னும் பல நூறு வருஷம் இது பெருகிப் பரவிக் கொண்டேயிருக்கும். சோழப் பேரரசு இப்போது வளர்பிறைச் சந்திரனாக இருந்து வருகிறது. பௌர்ணமிக்கு இன்னும் பல நாள் இருக்கிறது. ஆகையால் மேலும் மேலும் சோழ மகாராஜ்யம் வளர்ந்து கொண்டேயிருக்கும்..”
“இத்தனை நேரம் தங்களுடனே பேசியதற்கு இந்த ஒரு விஷயம் தெளிவாகச் சொல்லி விட்டீர்கள். வந்தனம், இன்னும் ஒரு விஷயம் மட்டும் முடியுமானால் சொல்லுங்கள். எனக்கு கப்பல் ஏறிக் கடற் பிரயாணம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் ரொம்ப நாளாக இருக்கிறது…”
“அந்த விருப்பம் நிச்சயமாகக் கைகூடும்; நீ சகடயோகக்காரன். உன் காலில் சக்கரம் இருப்பது போலவே ஓயாமல் சுற்றிக் கொண்டிருப்பாய். நடந்து போவாய்; குதிரை ஏறிப் போவாய்; யானை மேல் போவாய்; கப்பல் ஏறியும் போவாய்; சீக்கிரமாகவே உனக்குக் கடற் பிரயாணம் செய்யும் யோகம் இருக்கிறது.”
“ஐயா! தென்திசைப் படையின் சேனாபதி, தற்சமயம் ஈழத்திலே யுத்தம் நடத்தும் இளவரசர் அருள்மொழிவர்மரைப் பற்றித் தாங்கள் சொல்லக் கூடுமா? கிரஹங்களும் நட்சத்திரங்களும் அவரைப் பற்றி என்ன சொல்லுகின்றன?”
“தம்பி! கப்பலில் பிரயாணம் செய்வோர் திசையறிவதற்கு ஒரு காந்தக் கருவியை உபயோகிக்கிறார்கள். கலங்கரைவிளக்கங்களும் உபயோகப்படுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம்விட, நடுக்கடலில் கப்பல் விடும் மாலுமிகளுக்கு உறுதுணையாயிருப்பது எது தெரியுமா? வடதிசையில் அடிவானத்தில் உள்ள துருவ நட்சத்திரந்தான். மற்ற நட்சத்திரங்கள் – கிரஹங்கள் எல்லாம் இடம்பெயர்ந்து போய்க் கொண்டேயிருக்கும். ஸப்தரிஷி மண்டலமும் திசைமாறிப் பிரயாணம் செய்யும். ஆனால் துருவ நட்சத்திரம் மட்டும் இடத்தைவிட்டு அசையாமல் இருந்த இடத்திலேயே இருக்கும். அந்தத் துருவ நட்சத்திரத்தைப் போன்றவர் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் கடைக்குட்டிப் புதல்வரான இளவரசர் அருள்மொழிவர்மர். எதற்கும் நிலைகலங்காத திட சித்தமுடையவர். தியாகம், ஒழுக்கம் முதலிய குணங்களில் போலவே வீரபுருஷத்திலும் சிறந்தவர். கல்வியறிவைப் போலவே உலக அறிவும் படைத்தவர். பார்த்தாலே பசி தீரும் என்று சொல்லக் கூடிய பால்வடியும் களைமுகம் படைத்தவர்; அதிர்ஷ்ட தேவதையின் செல்வப் புதல்வர். மாலுமிகள் துருவ நட்சத்திரத்தைக் குறிகொள்வது போல், வாழ்க்கைக் கடலில் இறங்கும் உன் போன்ற வாலிபர்கள் அருள்மொழிவர்மரைக் குறியாக வைத்துக்கொள்வது மிக்க பலன் அளிக்கும்.”
“அப்பப்பா! இளவரசர் அருள்மொழிவர்மரைப் பற்றி எவ்வளவெல்லாம் சொல்கிறீர்கள்? காதலனைக் காதலி வர்ணிப்பது போல் அல்லவா வர்ணிக்கிறீர்கள்?”
“தம்பி! காவிரி தீரத்திலுள்ள சோழ நாட்டில் யாரைக் கேட்டாலும் என்னைப் போலத்தான் சொல்வான்.”
“மிக்க வந்தனம் ஜோதிடரே! சமயம் நேர்ந்தால் உங்கள் புத்திமதியின்படியே நடப்பேன்.”
“உன்னுடைய அதிர்ஷ்டக் கிரகமும் உச்சத்துக்கு வந்திருக்கிறது என்று அறிந்து தான் சொன்னேன்.”
“போய் வருகிறேன் ஜோதிடரே. என் மனமார்ந்த வந்தனத்துடன் என்னால் இயன்ற பொன் தனமும் கொஞ்சம் சமர்ப்பிக்கிறேன்; தயவு செய்து பெற்றுக் கொள்ள வேணும்.”
இவ்விதம் கூறி, ஐந்து கழஞ்சு பொன் நாணயங்களை வந்தியத்தேவன் சமர்ப்பித்தான்.
“வாணர் குலத்தின் கொடைத்தன்மை இன்னமும் போகவில்லை!” என்று சொல்லிக் கொண்டு ஜோதிடர் பொன்னை எடுத்து கொண்டார்.

Wednesday 29 August 2012

PONNIYIN SELVAN AUDIO BY GOWTHAM

HERE I(GOWTHAM) NARRATE THE STORY OF PONNIYIN SELVAN BY KALKI R. KRISHNAMURTHY IN AUDIO. I NARRATE ONLY FOUR VOLUMES HERE, BECAUSE THESE AUDIO BOOKA ARE IN HIGH COST OF DOLLOR($).SORRY IF I NARRATE WRONGLY....


2. ponniyin selvan : bagam 2 : SULLAL KARTU 

3.
ponniyin selvan : bagam 3: KOLAIVALL

4.
ponniyin selvan : bagam 4:MANI MAGUDAM 

ponniyin selvan : bagam 5 : THIYAGA SIGARAM

Ponniyin Selvan : Bagam 5 : THIYAGA SIGARAM


  • அத்தியாயம் 1 – மூன்று குரல்கள்
  • அத்தியாயம் 2 – வந்தான் முருகய்யன்!
  • அத்தியாயம் 3 – கடல் பொங்கியது!
  • அத்தியாயம் 4 – நந்தி முழுகியது
  • அத்தியாயம் 5 – தாயைப் பிரிந்த கன்று
  • அத்தியாயம் 6 – முருகய்யன் அழுதான்!
  • அத்தியாயம் 7 – மக்கள் குதூகலம்
  • அத்தியாயம் 8 – படகில் பழுவேட்டரையர்
  • அத்தியாயம் 9 – கரை உடைந்தது!
  • அத்தியாயம் 10 – கண் திறந்தது!
  • அத்தியாயம் 11 – மண்டபம் விழுந்தது
  • அத்தியாயம் 12 – தூமகேது மறைந்தது!
  • அத்தியாயம் 13 – குந்தவை கேட்ட வரம்
  • அத்தியாயம் 14 – வானதியின் சபதம்
  • அத்தியாயம் 15 – கூரை மிதந்தது!
  • அத்தியாயம் 16 – பூங்குழலி பாய்ந்தாள்!
  • அத்தியாயம் 17 – யானை எறிந்தது!
  • அத்தியாயம் 18 – ஏமாந்த யானைப் பாகன்
  • அத்தியாயம் 19 – திருநல்லம்
  • அத்தியாயம் 20 – பறவைக் குஞ்சுகள்
  • அத்தியாயம் 21 – உயிர் ஊசலாடியது!
  • அத்தியாயம் 22 – மகிழ்ச்சியும், துயரமும்
  • அத்தியாயம் 23 – படைகள் வந்தன!
  • அத்தியாயம் 24 – மந்திராலோசனை
  • அத்தியாயம் 25 – கோட்டை வாசலில்
  • அத்தியாயம் 26 – வானதியின் பிரவேசம்
  • அத்தியாயம் 27 – “நில் இங்கே!”
  • அத்தியாயம் 28 – கோஷம் எழுந்தது!
  • அத்தியாயம் 29 – சந்தேக விபரீதம்
  • அத்தியாயம் 30 – தெய்வம் ஆயினாள்!
  • அத்தியாயம் 31 – “வேளை வந்து விட்டது!”
  • அத்தியாயம் 32 – இறுதிக் கட்டம்
  • அத்தியாயம் 33 – “ஐயோ! பிசாசு!”
  • அத்தியாயம் 34 – “போய் விடுங்கள்!”
  • அத்தியாயம் 35 – குரங்குப் பிடி!
  • அத்தியாயம் 36 – பாண்டிமாதேவி
  • அத்தியாயம் 37 – இரும்பு நெஞ்சு இளகியது!
  • அத்தியாயம் 38 – நடித்தது நாடகமா?
  • அத்தியாயம் 39 – காரிருள் சூழ்ந்தது!
  • அத்தியாயம் 40 – “நான் கொன்றேன்!”
  • அத்தியாயம் 41 – பாயுதே தீ!
  • அத்தியாயம் 42 – மலையமான் துயரம்
  • அத்தியாயம் 43 – மீண்டும் கொள்ளிடக்கரை
  • அத்தியாயம் 44 – மலைக் குகையில்
  • அத்தியாயம் 45 – “விடை கொடுங்கள்!”
  • அத்தியாயம் 46 – ஆழ்வானுக்கு ஆபத்து!
  • அத்தியாயம் 47 – நந்தினியின் மறைவு
  • அத்தியாயம் 48 – “நீ என் மகன் அல்ல!”
  • அத்தியாயம் 49 – துர்பாக்கியசாலி
  • அத்தியாயம் 50 – குந்தவையின் கலக்கம்
  • அத்தியாயம் 51 – மணிமேகலை கேட்ட வரம்
  • அத்தியாயம் 52 – விடுதலைக்குத் தடை
  • அத்தியாயம் 53 – வானதியின் யோசனை
  • அத்தியாயம் 54 – பினாகபாணியின் வேலை
  • அத்தியாயம் 55 – “பைத்தியக்காரன்”
  • அத்தியாயம் 56 – “சமய சஞ்சீவி”
  • அத்தியாயம் 57 – விடுதலை
  • அத்தியாயம் 58 – கருத்திருமன் கதை
  • அத்தியாயம் 59 – சகுனத் தடை
  • அத்தியாயம் 60 – அமுதனின் கவலை
  • அத்தியாயம் 61 – நிச்சயதார்த்தம்
  • அத்தியாயம் 62 – ஈட்டி பாய்ந்தது!
  • அத்தியாயம் 63 – பினாகபாணியின் வஞ்சம்
  • அத்தியாயம் 64 – “உண்மையைச் சொல்!”
  • அத்தியாயம் 65 – “ஐயோ, பிசாசு!”
  • அத்தியாயம் 66 – மதுராந்தகன் மறைவு
  • அத்தியாயம் 67 – “மண்ணரசு நான் வேண்டேன்”
  • அத்தியாயம் 68 – “ஒரு நாள் இளவரசர்!”
  • அத்தியாயம் 69 – “வாளுக்கு வாள்!”
  • அத்தியாயம் 70 – கோட்டைக் காவல்
  • அத்தியாயம் 71 – ‘திருவயிறு உதித்த தேவர்’
  • அத்தியாயம் 72 – தியாகப் போட்டி
  • அத்தியாயம் 73 – வானதியின் திருட்டுத்தனம்
  • அத்தியாயம் 74 – “நானே முடி சூடுவேன்!”
  • அத்தியாயம் 75 – விபரீத விளைவு
  • அத்தியாயம் 76 – வடவாறு திரும்பியது!
  • அத்தியாயம் 77 – நெடுமரம் சாய்ந்தது!
  • அத்தியாயம் 78 – நண்பர்கள் பிரிவு
  • அத்தியாயம் 79 – சாலையில் சந்திப்பு
  • அத்தியாயம் 80 – நிலமகள் காதலன்
  • அத்தியாயம் 81 – பூனையும் கிளியும்
  • அத்தியாயம் 82 – சீனத்து வர்த்தகர்கள்
  • அத்தியாயம் 83 – அப்பர் கண்ட காட்சி
  • அத்தியாயம் 84 – பட்டாபிஷேகப் பரிசு
  • அத்தியாயம் 85 – சிற்பத்தின் உட்பொருள்
  • அத்தியாயம் 86 – “கனவா? நனவா?”
  • அத்தியாயம் 87 – புலவரின் திகைப்பு
  • அத்தியாயம் 88 – பட்டாபிஷேகம்
  • அத்தியாயம் 89 – வஸந்தம் வந்தது
  • அத்தியாயம் 90 – பொன்மழை பொழிந்தது!
  • அத்தியாயம் 91 – மலர் உதிர்ந்தது!

ponniyin selvan : bagam 4:MANI MAGUDAM

Ponniyin Selvan : Bagam 4:MANI MAGUDAM


  • அத்தியாயம் 1 – கெடிலக் கரையில்
  • அத்தியாயம் 2 – பாட்டனும், பேரனும்
  • அத்தியாயம் 3 – பருந்தும், புறாவும்
  • அத்தியாயம் 4 – ஐயனார் கோவில்
  • அத்தியாயம் 5 – பயங்கர நிலவறை
  • அத்தியாயம் 6 – மணிமேகலை
  • அத்தியாயம் 7 – வாயில்லாக் குரங்கு
  • அத்தியாயம் 8 – இருட்டில் இரு கரங்கள்
  • அத்தியாயம் 9 – நாய் குரைத்தது!
  • அத்தியாயம் 10 – மனித வேட்டை
  • அத்தியாயம் 11 – தோழனா? துரோகியா?
  • அத்தியாயம் 12 – வேல் முறிந்தது!
  • அத்தியாயம் 13 – மணிமேகலையின் அந்தரங்கம்
  • அத்தியாயம் 14 – கனவு பலிக்குமா?
  • அத்தியாயம் 15 – இராஜோபசாரம்
  • அத்தியாயம் 16 – “மலையமானின் கவலை”
  • அத்தியாயம் 17 – பூங்குழலியின் ஆசை
  • அத்தியாயம் 18 – அம்பு பாய்ந்தது!
  • அத்தியாயம் 19 – சிரிப்பும் நெருப்பும்
  • அத்தியாயம் 20 – மீண்டும் வைத்தியர் மகன்
  • அத்தியாயம் 21 – பல்லக்கு ஏறும் பாக்கியம்
  • அத்தியாயம் 22 – அநிருத்தரின் ஏமாற்றம்
  • அத்தியாயம் 23 – ஊமையும் பேசுமோ?
  • அத்தியாயம் 24 – இளவரசியின் அவசரம்
  • அத்தியாயம் 25 – அநிருத்தரின் குற்றம்
  • அத்தியாயம் 26 – வீதியில் குழப்பம்
  • அத்தியாயம் 27 – பொக்கிஷ நிலவறையில்
  • அத்தியாயம் 28 – பாதாளப் பாதை
  • அத்தியாயம் 29 – இராஜ தரிசனம்
  • அத்தியாயம் 30 – குற்றச் சாட்டு
  • அத்தியாயம் 31 – முன்மாலைக் கனவு
  • அத்தியாயம் 32 – “ஏன் என்னை வதைக்கிறாய்?”
  • அத்தியாயம் 33 – “சோழர் குல தெய்வம்”
  • அத்தியாயம் 34 – இராவணனுக்கு ஆபத்து!
  • அத்தியாயம் 35 – சக்கரவர்த்தியின் கோபம்
  • அத்தியாயம் 36 – பின்னிரவில்
  • அத்தியாயம் 37 – கடம்பூரில் கலக்கம்
  • அத்தியாயம் 38 – நந்தினி மறுத்தாள்
  • அத்தியாயம் 39 – “விபத்து வருகிறது!”
  • அத்தியாயம் 40 – நீர் விளையாட்டு
  • அத்தியாயம் 41 – கரிகாலன் கொலை வெறி
  • அத்தியாயம் 42 – “அவள் பெண் அல்ல!”
  • அத்தியாயம் 43 – “புலி எங்கே?”
  • அத்தியாயம் 44 – காதலும் பழியும்
  • அத்தியாயம் 45 – “நீ என் சகோதரி!”
  • அத்தியாயம் 46 – படகு நகர்ந்தது!

ponniyin selvan : bagam 3: KOLAIVALL

Ponniyin Selvan : Bagam 3: KOLAIVALL



  • அத்தியாயம் 1 – கோடிக்கரையில்
  • அத்தியாயம் 2 – மோக வலை
  • அத்தியாயம் 3 – ஆந்தையின் குரல்
  • அத்தியாயம் 4 – தாழைப் புதர்
  • அத்தியாயம் 5 – ராக்கம்மாள்
  • அத்தியாயம் 6 – பூங்குழலியின் திகில்
  • அத்தியாயம் 7 – காட்டில் எழுந்த கீதம்
  • அத்தியாயம் 8 – “ஐயோ! பிசாசு!”
  • அத்தியாயம் 9 – ஓடத்தில் மூவர்
  • அத்தியாயம் 10 – சூடாமணி விஹாரம்
  • அத்தியாயம் 11 – கொல்லுப்பட்டறை
  • அத்தியாயம் 12 – “தீயிலே தள்ளு!”
  • அத்தியாயம் 13 – விஷ பாணம்
  • அத்தியாயம் 14 – பறக்கும் குதிரை
  • அத்தியாயம் 15 – காலாமுகர்கள்
  • அத்தியாயம் 16 – மதுராந்தகத் தேவர்
  • அத்தியாயம் 17 – திருநாரையூர் நம்பி
  • அத்தியாயம் 18 – நிமித்தக்காரன்
  • அத்தியாயம் 19 – சமயசஞ்சீவி
  • அத்தியாயம் 20 – தாயும் மகனும்
  • அத்தியாயம் 21 – “நீயும் ஒரு தாயா?”
  • அத்தியாயம் 22 – “அது என்ன சத்தம்?”
  • அத்தியாயம் 23 – வானதி
  • அத்தியாயம் 24 – நினைவு வந்தது
  • அத்தியாயம் 25 – முதன்மந்திரி வந்தார்!
  • அத்தியாயம் 26 – அநிருத்தரின் பிரார்த்தனை
  • அத்தியாயம் 27 – குந்தவையின் திகைப்பு
  • அத்தியாயம் 28 – ஒற்றனுக்கு ஒற்றன்
  • அத்தியாயம் 29 – வானதியின் மாறுதல்
  • அத்தியாயம் 30 – இரு சிறைகள்
  • அத்தியாயம் 31 – பசும் பட்டாடை
  • அத்தியாயம் 32 – பிரம்மாவின் தலை
  • அத்தியாயம் 33 – வானதி கேட்ட உதவி
  • அத்தியாயம் 34 – தீவர்த்தி அணைந்தது!
  • அத்தியாயம் 35 – “வேளை நெருங்கிவிட்டது!”
  • அத்தியாயம் 36 – இருளில் ஓர் உருவம்
  • அத்தியாயம் 37 – வேஷம் வெளிப்பட்டது
  • அத்தியாயம் 38 – வானதிக்கு நேர்ந்தது
  • அத்தியாயம் 39 – கஜேந்திர மோட்சம்
  • அத்தியாயம் 40 – ஆனைமங்கலம்
  • அத்தியாயம் 41 – மதுராந்தகன் நன்றி
  • அத்தியாயம் 42 – சுரம் தெளிந்தது
  • அத்தியாயம் 43 – நந்தி மண்டபம்
  • அத்தியாயம் 44 – நந்தி வளர்ந்தது!
  • அத்தியாயம் 45 – வானதிக்கு அபாயம்
  • அத்தியாயம் 46 – வானதி சிரித்தாள்
  • ponniyin selvan : bagam 2 : SULLAL KARTU

    Ponniyin Selvan : Bagam 2 : SULLAL KARTU 


    Introduction To The Narator
    • அத்தியாயம் 1 – பூங்குழலி (aathiyayam 1- poonkuzhalli)
    • அத்தியாயம் 2 – சேற்றுப் பள்ளம்
    • அத்தியாயம் 3 – சித்தப் பிரமை
    • அத்தியாயம் 4 – நள்ளிரவில்
    • அத்தியாயம் 5 – நடுக்கடலில்
    • அத்தியாயம் 6 – மறைந்த மண்டபம்
    • அத்தியாயம் 7 – “சமுத்திர குமாரி”
    • அத்தியாயம் 8 – பூதத் தீவு
    • அத்தியாயம் 9 – “இது இலங்கை!”
    • அத்தியாயம் 10 – அநிருத்தப் பிரமராயர்
    • அத்தியாயம் 11 – தெரிஞ்ச கைக்கோளப் படை
    • அத்தியாயம் 12 – குருவும் சீடனும்
    • அத்தியாயம் 13 – “பொன்னியின் செல்வன்”
    • அத்தியாயம் 14 – இரண்டு பூரண சந்திரர்கள்
    • அத்தியாயம் 15 – இரவில் ஒரு துயரக் குரல்
    • அத்தியாயம் 16 – சுந்தர சோழரின் பிரமை
    • அத்தியாயம் 17 – மாண்டவர் மீள்வதுண்டோ?
    • அத்தியாயம் 18 – துரோகத்தில் எது கொடியது?
    • அத்தியாயம் 19 – “ஒற்றன் பிடிபட்டான்!”
    • அத்தியாயம் 20 – இரு பெண் புலிகள்
    • அத்தியாயம் 21 – பாதாளச் சிறை
    • அத்தியாயம் 22 – சிறையில் சேந்தன் அமுதன்
    • அத்தியாயம் 23 – நந்தினியின் நிருபம்
    • அத்தியாயம் 24 – அனலில் இட்ட மெழுகு
    • அத்தியாயம் 25 – மாதோட்ட மாநகரம்
    • அத்தியாயம் 26 – இரத்தம் கேட்ட கத்தி
    • அத்தியாயம் 27 – காட்டுப் பாதை
    • அத்தியாயம் 28 – இராஜபாட்டை
    • அத்தியாயம் 29 – யானைப் பாகன்
    • அத்தியாயம் 30 – துவந்த யுத்தம்
    • அத்தியாயம் 31 – “ஏலேல சிங்கன்” கூத்து
    • அத்தியாயம் 32 – கிள்ளி வளவன் யானை
    • அத்தியாயம் 33 – சிலை சொன்ன செய்தி
    • அத்தியாயம் 34 – அநுராதபுரம்
    • அத்தியாயம் 35 – இலங்கைச் சிங்காதனம்
    • அத்தியாயம் 36 – தகுதிக்கு மதிப்பு உண்டா?
    • அத்தியாயம் 37 – காவேரி அம்மன்
    • அத்தியாயம் 38 – சித்திரங்கள் பேசின்
    • அத்தியாயம் 39 – “இதோ யுத்தம்!”
    • அத்தியாயம் 40 – மந்திராலோசனை
    • அத்தியாயம் 41 – “அதோ பாருங்கள்!”
    • அத்தியாயம் 42 – பூங்குழலியின் கத்தி
    • அத்தியாயம் 43 – “நான் குற்றவாளி!”
    • அத்தியாயம் 44 – யானை மிரண்டது!
    • அத்தியாயம் 45 – சிறைக் கப்பல்
    • அத்தியாயம் 46 – பொங்கிய உள்ளம்
    • அத்தியாயம் 47 – பேய்ச் சிரிப்பு
    • அத்தியாயம் 48 – ‘கலபதி’யின் மரணம்
    • அத்தியாயம் 49 – கப்பல் வேட்டை
    • அத்தியாயம் 50 – “ஆபத்துதவிகள்”
    • அத்தியாயம் 51 – சுழிக் காற்று
    • அத்தியாயம் 52 – உடைந்த படகு
    • அத்தியாயம் 53 – அபய கீதம்

    Tuesday 28 August 2012

    அத்தியாயம் 12 – நந்தினி


    கொள்ளிட கரையில் படகில் ஏற்றி நாம் விட்டு விட்டு வந்த வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டுக்கு அச்சமயம் எப்படி வந்து சேர்ந்தான் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா?
    ஆழ்வார்க்கடியான் படகில் ஏறியதை ஆட்சேபித்த சைவப் பெரியார், படகு நகரத் தொடங்கியதும், வந்தியத்தேவனைப் பார்த்து, “தம்பி! உனக்காகப் போனால் போகிறது என்று இவனை ஏறவிட்டேன். ஆனால் ஓடத்தில் இருக்கும் வரையில் இவன் அந்த எட்டெழுத்துப் பெயரைச் சொல்லவே கூடாது. சொன்னால் இவனை இந்தக் கொள்ளிடத்தில் பிடித்துத் தள்ளிவிடச் சொல்லுவேன். ஓடக்காரர்கள் என்னுடைய ஆட்கள்!” என்றார்.
    “நம்பி அடிகளே! தங்களுடைய திருச்செவியில் விழுந்ததா?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.
    “இவர் ஐந்தெழுத்துப் பெயரைச் சொல்லாதிருந்தால் நானும் எட்டெழுத்துத் திருநாமத்தைச் சொல்லவில்லை!” என்றான் ஆழ்வார்க்கடியான்.
    “சாஷாத் சிவபெருமானுடைய பஞ்சாட்சரத் திருமந்திரத்தைச் சொல்லக் கூடாது என்று இவன் யார் தடை செய்வதற்கு? முடியாது! முடியாது!
         கற்றூணைப்பூட்டி கடலிற் பாய்ச்சினும்
         நற்றுணையாவது நமசிவாயவே!”
    என்று சைவப் பெரியார் கம்பீர கர்ஜனை செய்தார்.
         ”நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
         நாராயணா என்னும் நாமம்!”
    என்று ஆழ்வார்க்கடியான் உரத்த குரலில் பாடத் தொடங்கினான்.
    “சிவ சிவ சிவா!” என்று சைவர் இரண்டு காதிலும் கைவிரலை வைத்து அடைத்துக் கொண்டார்.
    ஆழ்வார்க்கடியான் பாட்டை நிறுத்தியதும், சைவர் காதில் வைத்திருந்த விரல்களை எடுத்தார்.
    ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனைப் பார்த்து, “தம்பி! நீயே அந்த வீர சைவரைக் கொஞ்சம் கேள். இவர் திருமாலின் பெயரைக் கேட்பதற்கே இவ்வளவு கஷ்டப்படுகிறாரே? ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் பாத கமலங்களை அலம்பி விட்டுத்தான் இந்தக் கொள்ளிட நதி கீழே வருகிறது. பெருமாளின் பாதம்பட்ட தீர்த்தம் புண்ணிய தீர்த்தம் என்றுதானே சிவபெருமான் திருவானைக்காவலில் அந்தத் தண்ணீரிலேயே முழுகித் தவம் செய்கிறார்?” என்று சொல்லுவதற்குள்ளே சைவப் பெரியார் மிக வெகுண்டு ஆழ்வார்க்கடியான் மீது பாய்ந்தார். படகில் ஓரத்தில் இரண்டு பேரும் கைகலக்கவே, படகு கவிழ்ந்து விடும் போலிருந்தது. ஓடக்காரர்களும் வந்தியத்தேவனும் குறுக்கிட்டு அவர்களை விலக்கினார்கள்.
    “பக்த சிரோமணிகளே! நீங்கள் இருவரும் இந்தக் கொள்ளிட வெள்ளத்திலே விழுந்து நேரே மோட்சத்துக்குப் போக ஆசைப்படுவதாகத் தோன்றுகிறது. ஆனால் எனக்கு இன்னும் இந்த உலகத்தில் செய்ய வேண்டிய காரியங்கள் மிச்சமிருக்கின்றன!” என்றான் வந்தியத்தேவன்.
    ஓடக்காரர்களில் ஒருவன், “கொள்ளிடத்தில் விழுந்தால் மோட்சத்துக்குப் போவது நிச்சயமோ, என்னமோ தெரியாது! ஆனால் முதலையின் வயிற்றுக்குள் நிச்சயமாகப் போகலாம்! அதோ பாருங்கள்!’ என்றான்.
    அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் முதலை ஒன்று பயங்கரமாக வாயைத் திறந்து கொண்டு காணப்பட்டது.
    “எனக்கு முதலையைப் பற்றிச் சிறிதும் அச்சம் இல்லை; கஜேந்திரனை ரட்சித்த ஆதிமூலமான நாராயண மூர்த்தி எங்கே போய்விட்டார்?” என்றான் ஆழ்வார்க்கடியான்.
    “எங்கே போய்விட்டாரா? பிருந்தாவனத்து கோபிகா ஸ்திரீகளின் சேலைத் தலைப்பில் ஒரு வேளை ஒளிந்து கொண்டிருப்பார்!” என்றார் சைவர்.
    “அல்லது பத்மாசுரனுக்கு வரங்கொடுத்துவிட்டு அலறிப் புடைத்துக் கொண்டு ஓடியது போல் சிவனுக்கு இன்னொரு சங்கடம் ஏற்பட்டிருக்கலாம்; அந்தச் சங்கடத்திலிருந்து சிவனைக் காப்பார்றுவதற்காகத் திருமால் போயிருக்கலாம்” என்றான் நம்பி.
    “திரிபுர சம்ஹாரத்தின் போது திருமால் அடைந்த கர்வபங்கம் இந்த வைஷ்ணவனுக்கு ஞாபகம் இல்லை போலிருக்கிறது!” என்றார் சைவப் பெரியார்.
    “சுவாமிகளே! நீங்கள் எதற்காகத்தான் இப்படிச் சண்டை போடுகிறீர்களோ, தெரியவில்லை! யாருக்கு எந்தத் தெய்வத்தின் பேரில் பக்தியோ, அந்தத் தெய்வத்தை வழிபடுவதுதானே?” என்றான் வந்தியத்தேவன்.
    சைவப் பெரியாரும் ஆழ்வார்க்கடியானும் ஏன் அவ்விதம் சண்டையிட்டார்கள்? வீர நாராயணபுரத்தில் ஏன் இதே மாதிரியான வாதப் போர் நடந்தது என்பதைப் பற்றி வாசகர்களுக்கு இச்சமயத்தில் சொல்லிவிடுவது உசிதமாயிருக்கும்.
    பழந் தமிழ்நாட்டில் ஏறக்குறைய அறுநூறு வருஷ காலம் பௌத்த மதமும் சமண மதமும் செல்வாக்குப் பெற்றிருந்தன. இந்தச் செல்வாக்கினால் தமிழகம் பல நலங்களை எய்தியது. சிற்பம், சித்திரம், கவிதை, காவியம் முதலிய கலைகள் தழைத்தோங்கின. பின்னர், ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றினார்கள். அமுதொழுகும் தெய்வத் தமிழ்ப் பாசுரங்களைப் பொழிந்தார்கள். வைஷ்ணவத்தையும் சைவத்தையும் தழைத்தோங்கச் செய்தார்கள். இவர்களுடைய பிரசார முறை மிகச்சக்தி வாய்ந்ததாயிருந்தது. சமயப் பிரச்சாரத்துக்குச் சிற்பக் கலையுடன் கூட இசைக் கலையையும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆழ்வார்களின் பாசுரங்களையும் மூவர் தேவாரப் பண்களையும் தேவகானத்தையொத்த இசையில் அமைத்துப் பலர் பாடத் தொடங்கினார்கள். இந்த இசைப் பாடல்கள் கேட்போர் உள்ளங்களைப் பரவசப்படுத்தி பக்தி வெறியை ஊட்டின. ஆழ்வார்களின் பாடல் பெற்ற விஷ்ணு ஸ்தலங்களும் மூவரின் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களும் புதிய சிறப்பையும் புனிதத் தன்மையையும் அடைந்தன. அதற்கு முன் செங்கல்லாலும் மரத்தினாலும் கட்டப்பட்டிருந்த ஆலயங்கள் புதுப்பித்துக் கற்றளிகளாகக் கட்டப்பட்டன. இந்தத் திருப்பணியை விஜயாலய சோழன் காலத்திலிருந்து சோழ மன்னர்களும், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வெகுவாகச் செய்துவந்தார்கள்.
    அதே சமயத்தில் கேரள நாட்டில் ஒரு விசேஷ சம்பவம் நடந்தது. காலடி என்னுமிடத்தில் ஒரு மகான் அவதரித்தார். இளம் பிராயத்தில் அவர் உலகைத் துறந்து சந்நியாசி ஆனார். வடமொழியிலுள்ள சகல சாஸ்திரங்களையும் படித்துக் கரை கண்டார். வேத உபநிஷதம், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் – இவற்றின் அடிப்படையில் அத்வைத வேதாந்தக் கொள்கையின் கொடியை நாட்டினார். வடமொழியில் பெற்றிருந்த வித்வத்தின் உதவியினால் பாரத தேசம் முழுவதும் திக்விஜயம் செய்து ஆங்காங்கு எட்டு அத்வைத மடங்களை ஸ்தாபனம் செய்தார். இவருடைய கொள்கையை ஆதரித்த அத்வைத சந்நியாசிகள் நாடெங்கும் பரவிச் சென்றார்கள்.
    இவ்விதம் தமிழ் நாட்டில் நம் கதை நடந்த காலத்தில் அதாவது சுமார் 980 வருஷங்களுக்கு முன்பு, (1950ல் எழுதியது) பெரியதொரு சமயக் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. இந்தக் கொந்தளிப்பிலிருந்து தீங்கு தரும் அம்சங்கள் சிலவும் தோன்றிப் பரவின. வீர வைஷ்ணவர்களும் வீர சைவர்களும் ஆங்காங்கு முளைத்தார்கள். இவர்கள் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் சண்டையில் இறங்கினார்கள். இந்த வாதப் போர்களில் அத்வைதிகளும் கலந்து கொண்டார்கள். சமய வாதப் போர்கள் சில சமயம் அடிதடி சண்டையாகப் பரிணமித்தன.
    அந்த காலத்து சைவ – வைஷ்ணவப் போரை விளக்கும் அருமையான கதை ஒன்று உண்டு.
    ஸ்ரீரங்கத்து வைஷ்ணவர் ஒருவர் திருவானைக்காவல் ஆலய வெளிச் சுவரின் ஓரமாகப் போய்க் கொண்டிருந்தார். தலையில் திடீரென்று ஒரு கல் விழுந்தது. காயமாகி இரத்தமும் கசிந்தது. வைஷ்ணவர் அண்ணாந்து பார்த்தார். கோபுரத்தில் ஒரு காக்கை உட்கார்ந்தபடியால் அந்தப் பழைய கோபுரத்தின் கல் இடிந்து விழுந்திருக்க வேண்டும் என்று அறிந்தார். உடனே அவருக்குக் காயமும் வலியும் மறந்து போய் ஒரே குதூகலம் உண்டாகி விட்டது. “ஸ்ரீரங்கத்து வீர வைஷ்ணவக் காக்காயே! திருவானைக்காவல் சிவன் கோயிலை நன்றாய் இடித்துத் தள்ளு!” என்றாராம்.
    அந்த நாளில் இத்தகைய சைவ – வைஷ்ணவ வேற்றுமை மனப்பான்மை மிகப் பரவியிருந்தது. இதைத் தெரிந்து கொள்ளுதல், பின்னால் இந்தக் கதையைத் தொடர்ந்து படிப்பதற்கு மிக்க அனுகூலமாயிருக்கும்.
    ஓடம் அக்கரை சென்றதும், சைவப் பெரியார் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, “நீ நாசமாய்ப் போவாய்!” என்று கடைசி சாபம் கொடுத்து விட்டுத் தம் வழியே போனார்.
    வந்தியத்தேவனுடன் வந்த கடம்பூர் வீரன் பக்கத்திலுள்ள திருப்பனந்தாளுக்குச் சென்று குதிரை சம்பாதித்து வருவதாகச் சொல்லிப் போனான். ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் ஆற்றங்கரையில் அரச மரத்தின் அடியில் உட்கார்ந்தார்கள். அந்த மரத்தின் விசாலமான அடர்ந்த கிளைகளில் நூற்றுக்கணக்கான பறவைகள் மதுரமான கலகலத்வனி செய்து கொண்டிருந்தன.
    வந்தியத்தேவனும் நம்பியும் ஒருவருடைய வாயை ஒருவர் பிடுங்கி ஏதாவது விஷயத்தைக் கிரஹிக்க விரும்பினார்கள். முதலில் சிறிது நேரம் சுற்றி வளைத்துப் பேசினார்கள்.
    “ஏன் தம்பி! கடம்பூர் மாளிகைக்கு என்னை அழைத்துப் போகாமல் விட்டு விட்டுப் போனாயல்லவா?”
    “நான் போவதே பெரிய கஷ்டமாகப் போய்விட்டது நம்பிகளே!”
    “அப்படியா? பின் எப்படித்தான் போனாய்? ஒரு வேளை போகவில்லையோ?”
    “போனேன், போனேன், ஒரு காரியத்தை உத்தேசித்து விட்டால் பின்வாங்கி விடுவேனோ? வாசற் காவலர்கள் தடுத்தார்கள். குதிரையை ஒரு தட்டு தட்டி உள்ளே விட்டேன். தடுத்தவர்கள் அத்தனை பேரும் உருண்டு தரையில் விழுந்தார்கள். பிறகு அவர்கள் எழுந்து வந்து என்னைச் சூழ்ந்து கொள்வதற்குள் என் நண்பன் கந்தமாறன் ஓடி வந்து என்னை அழைத்துப் போனான்.”
    “அப்படித்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். மிக்க தைரியசாலி நீ. சரி அப்புறம் என்ன நடந்தது? யார், யார் வந்திருந்தார்கள்?”
    “எத்தனையோ பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அவர்களுடைய பெயரெல்லாம் எனக்குத் தெரியாது. பழுவேட்டரையர் வந்திருந்தார். அவருடைய இளம் மனையாளும் வந்திருந்தாள். அப்பப்பா! அந்த பெண்ணின் அழகை என்னவென்று சொல்வது?…”
    “நீ பார்த்தாயா என்ன?”
    “ஆமாம், பார்க்காமலா? என் நண்பன் கந்தமாறன் என்னை அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்றான். அங்கே பார்த்தேன். அவ்வளவு ஸ்திரீகளிலும் பழுவேட்டரையரின் இளைய ராணி தான் பிரமாத அழகுடன் விளங்கினாள்! மற்ற கருநிறத்து மங்கையர்க்கு நடுவில் அந்த ராணியின் முகம் பூரண சந்திரனைப் போல் பொலிந்தது. அரம்பை, ஊர்வசி, திலோத்தமை, இந்திராணி, சந்திராணி எல்லோரும் அவளுக்கு அப்புறந்தான்!”
    “அடேயப்பா! ஒரேயடியாக வர்ணிக்கிறாயே? பிறகு என்ன நடந்தது? குரவைக் கூத்து நடந்ததா?”
    “நடந்தது, மிகவும் நன்றாயிருந்தது. அப்போது உம்மை நினைத்துக் கொண்டேன்.”
    “எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. இன்னும் என்ன நடந்தது?”
    “வேலனாட்டம் நடந்தது. தேவராளனும் தேவராட்டியும் மேடைக்கு வந்து ஆவேசமாக ஆடினார்கள்.”
    “சந்நதம் வந்ததா? ஏதாவது வாக்குச் சொன்னார்களா?”
    “ஆகா! நினைத்த காரியம் கைக்கூடும்; மழை பெய்யும்; நிலம் விளையும்; என்றெல்லாம் சந்நதக்காரன் சொன்னான்…”
    “அவ்வளவுதானா?”
    “இன்னும் ஏதோ இராஜாங்க விஷயமாகச் சொன்னான். நான் அதையொன்றும் கவனிக்கவில்லை.”
    “அடாடா! இவ்வளவுதானா? கவனித்திருக்க வேண்டும், தம்பி! நீ இளம் பிள்ளை; நல்ல வீர பராக்கிரம் உடையவனாய்த் தோன்றுகிறாய். இராஜாங்க விஷயங்களைப் பற்றி எங்கேயாவது யாராவது பேசினால் காதில் கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.”
    “நீர் சொல்வது உண்மை. எனக்குக் கூட இன்று காலையில் அப்படித்தான் தோன்றியது.”
    “காலையில் தோன்றுவானேன்?”
    “காலையில் கந்தமாறனும் நானும் பேசிக்கொண்டே கொள்ளிடக்கரை வரையில் வந்தோம். இராத்திரி நான் படுத்துத் தூங்கிய பிறகு, கடம்பூர் மாளிகைக்கு வந்திருந்த விருந்தாளிகள் கூட்டம் போட்டு ஏதேதோ இராஜாங்க விஷயமாகப் பேசினார்களாம்.”
    “என்ன பேசினார்களாம்?”
    “அது எனக்குத் தெரியாது. கந்தமாறன் ஏடாகூடமாகச் சொன்னானே தவிர, தெளிவாகச் சொல்லவில்லை, ஏதோ ஒரு காரியம் சீக்கிரம் நடக்கப் போகிறது. அப்போது சொல்கிறேன் என்றான். அவன் பேச்சே மர்மமாயிருந்தது. ஏன், சுவாமிகளே! உங்களுக்கு ஏதாவது தெரியுமா?”
    “எதைப் பற்றி?”
    “நாடு நகரமெல்லாம் ஏதேதோ பேசிக் கொள்கிறார்களே? வானத்தில் வால் நட்சத்திரம் காணப்படுகிறது; இராஜாங்கத்துக்கு ஏதோ ஆபத்து இருக்கிறது; சோழ சிம்மாசனத்தில் மாறுதல் ஏற்படும்; அப்படி, இப்படி – என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். தொண்டை மண்டலம் வரையில் இந்தப் பேச்சு எட்டியிருக்கிறது. இன்னும் யார் யாரோ பெரிய கைகள் சேர்ந்து, அடிக்கடி கூடி, அடுத்து பட்டத்துக்கு யார் என்று யோசித்து வருகிறார்களாம். உங்களுக்கு என்ன தோன்றுகிறது? – அடுத்து பட்டத்துக்கு யார் வரக்கூடும்?”
    “எனக்கு அதெல்லாம் தெரியாது, தம்பி! இராஜாங்க காரியங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் வைஷ்ணவன்; ஆழ்வார்களின் அடியார்க்கு அடியான்; எனக்குத் தெரிந்த பாசுரங்களைப் பாடிக்கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறவன்!”
    இவ்வாறு ஆழ்வார்க்கடியான் கூறி, “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று பாடத் தொடங்கவும், வந்தியத்தேவன் குறுக்கிட்டு, “உமக்குப் புண்ணியமாய்ப் போகட்டும், நிறுத்தும்!” என்றான்.
    “அடடா! தெய்வத் தமிழ்ப் பாசுரத்தை நிறுத்தச் சொல்கிறாயே?”
    “ஆழ்வார்க்கடியான் நம்பிகளே! எனக்கு ஒரு சந்தேகம் உதித்திருக்கிறது அதைச் சொல்லட்டுமா?”
    “நன்றாய்ச் சொல்லு!”
    “தடியைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரமாட்டீரே?”
    “உன்னையா? உன்னை அடிக்க என்னாலே முடியுமா?”
    “உம்முடைய வைஷ்ணவம், பக்தி, ஊர்த்தவ புண்டரம், பாசுரப் பாடல் – எல்லாம் வெறும் வேஷம் என்று சந்தேகிக்கிறேன்.”
    “ஐயையோ! இது என்ன பேச்சு? அபசாரம்! அபசாரம்!”
    “அபசாரமும் இல்லை, உபசாரமும் இல்லை. உம்முடைய பெண்ணாசையை மறைப்பதற்காக இந்த மாதிரி வேஷம் போடுகிறீர். உம்மைப் போல் இன்னும் சிலரையும் நான் பார்த்திருக்கிறேன். பெண்ணாசைப் பித்து பிடித்து அலைகிறவர்கள். அப்படி என்னதான் பெண்களிடம் காண்கிறீர்களோ, அதுதான் எனக்குத் தெரியவில்லை. எனக்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் வெறுப்பாகவே இருக்கிறது.”
    “தம்பி! பெண் பித்துப் பிடித்து அலைகிறவர்கள் சிலர் உண்டு. ஆனால் அவர்களோடு என்னைச் சேர்க்காதே, நான் வேஷதாரி அல்ல. நீ அவ்விதம் சந்தேகிப்பது ரொம்பத் தவறு.”
    “அப்படியானால் பல்லக்கில் வந்த அந்தப் பெண்ணிடம் ஓலை கொடுக்கும்படி என்னை ஏன் கேட்டீர்? அதிலும் இன்னொரு மனுஷன் மணம் புரிந்து கொண்ட பெண்ணிடம் மனதைச் செலுத்தலாமா? நீர் கடம்பூர் மாளிகைக்கு வரவேண்டும் என்று சொன்னதும் அவளைப் பார்ப்பதற்குத்தானே? இல்லை என்று சொல்ல வேண்டாம்!”
    “இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கு நீ கூறிய காரணம் தவறு. வேறு தகுந்த காரணம் இருக்கிறது. அது பெரிய கதை.”
    “குதிரை இன்னும் வரக்காணோம். அந்தக் கதையைத்தான் சொல்லுங்களேன்! கேட்கலாம்!”
    “கதை என்றால், கற்பனைக் கதை அல்ல; உண்மையாக நடந்த கதை. அதிசய வரலாறு! கேட்டால் திகைத்துப் போவாய்! அவசியம் சொல்லத்தான் வேண்டுமா?”
    “இஷ்டமிருந்தால் சொல்லுங்கள்!”
    “ஆம், சொல்லுகிறேன். கொஞ்சம் எனக்கு அவசரமாய்ப் போக வேண்டும், இருந்தாலும் சொல்லிவிட்டுப் போகிறேன். மறுபடியும் உன்னிடம் ஏதாவது உதவி கோரும்படியிருந்தாலும் இருக்கும். அப்போது தட்டாமல் செய்வாய் அல்லவா?”
    “நியாயமாயிருந்தால் செய்வேன். உங்களுக்கு இஷ்டமில்லாவிட்டால் ஒன்றும் சொல்ல வேண்டாம்.”
    “இல்லையில்லை! உன்னிடம் கட்டாயம் சொல்லியே தீரவேண்டும். அந்த இரணியாசுரன் பழுவேட்டரையரின் இளம் மனைவி இருக்கிறாளே, நான் ஓலை கொண்டு போகச் சொன்னேனே, அவள் பெயர் நந்தினி. அவளுடைய கதையை நீ கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவாய். உலகில் இப்படியும் அக்கிரமம் உண்டா என்று பொங்குவாய்!” இந்த முன்னுரையுடன் ஆழ்வார்க்கடியான் நந்தினியைப் பற்றிய கதையை ஆரம்பித்தான்.
    ஆழ்வார்க்கடியான் பாண்டிய நாட்டில் வைகை நதிக்கரையில் ஒரு கிராமத்தில் பிறந்தவன். அவனுடைய குடும்பத்தார் பரம பக்தர்களான வைஷ்ணவர்கள். அவனுடைய தந்தை ஒருநாள் நதிக்கரையில் உள்ள நந்தவனத்துக்குப் போனார். அங்கே ஒரு பெண் குழந்தை அனாதையாகக் கிடப்பதைக் கண்டார். குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். குழந்தை களையாகவும் அழகாகவும் இருந்தபடியால் குடும்பத்தார் அன்புடன் போற்றிக் காப்பாற்றினார்கள். நந்தவனத்தில் அகப்பட்டபடியால் நந்தினி என்று குழந்தைக்குப் பெயரிட்டார்கள். ஆழ்வார்க்கடியான் அப்பெண்ணைத் தன் தங்கை என்று கருதிப் பாராட்டி வந்தான்.
    நந்தினிக்குப் பிராயம் வளர்ந்து வந்தது போல் பெருமாளிடமும் பக்தியும் வளர்ந்து வந்தது. அவள் மற்றொரு ‘ஆண்டாள்’ ஆகிப் பக்தர்களையெல்லாம் ஆட்கொள்ளப் போகிறாள் என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை ஆழ்வார்க்கடியானுக்கு அதிகமாயிருந்தது. தந்தை இறந்த பிறகு அப்பெண்ணை வளர்க்கும் பொறுப்பை அவனே ஏற்றுக் கொண்டான். இருவரும் ஊர் ஊராகச் சென்று ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடி வைஷ்ணவத்தைப் பரப்பி வந்தார்கள். நந்தினி துளசிமாலை அணிந்து பக்திப் பரவசத்துடன் பாசுரம் பாடியதைக் கேட்டவர்கள் மதிமயங்கிப் போனார்கள்.
    ஒரு சமயம் ஆழ்வார்க்கடியான் திருவேங்கடத்துக்கு யாத்திரை சென்றான். திரும்பி வரக் காலதாமதமாகிவிட்டது. அப்போது நந்தினிக்கு ஒரு விபரீதம் நேர்ந்துவிட்டது.
    பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இறுதிப் பெரும்போர் மதுரைக்கு அருகில் நடந்தது. பாண்டியர் சேனை சர்வ நாசம் அடைந்தது. வீரபாண்டியன் உடம்பெல்லாம் காயங்களுடன் போர்க்களத்தில் விழுந்திருந்தான். அவனுடைய அந்தரங்க ஊழியர்கள் சிலர் அவனைக் கண்டுபிடித்து எடுத்து உயிர் தப்புவிக்க முயன்றார்கள். இரவுக்கிரவே, நந்தினியின் வீட்டில் கொண்டு வந்து சேர்த்தார்கள். பாண்டியனுடைய நிலைமையைக் கண்டு மனமிரங்கி நந்தினி அவனுக்குப் பணிவிடை செய்தாள். ஆனால் சீக்கிரத்தில் சோழ வீரர்கள் அதைக் கண்டுபிடித்து விட்டார்கள். நந்தினியின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு உட்புகுந்து வீரபாண்டியனைக் கொன்றார்கள். நந்தினியின் அழகைக் கண்டு மோகித்துப் பழுவேட்டரையர் அவளைச் சிறைபிடித்துக் கொண்டு போய்விட்டார்.
    இது மூன்று வருஷத்துக்கு முன்னால் நடந்தது. பிறகு ஆழ்வார்க்கடியான் நந்தினியைப் பார்க்கவே முடியவில்லை. அன்று முதல் ஒரு தடவையேனும் நந்தினியைத் தனியே சந்தித்துப் பேசவும், அவள் விரும்பினால் அவளை விடுதலை செய்து கொண்டு போகவும் ஆழ்வார்க்கடியான் முயன்று கொண்டிருக்கிறான். இது வரையில் அம்முயற்சியில் வெற்றி பெறவில்லை…
    இந்த வரலாற்றைக் கேட்ட வந்தியத்தேவனுடைய உள்ளம் உருகிவிட்டது. கடம்பூர் மாளிகையில் பல்லக்கில் இருந்தது நந்தினி இல்லை என்றும், இளவரசன் மதுராந்தகன் என்றும் ஆழ்வார்க்கடியானிடம் சொல்லி விடலாமா என்று ஒரு கணம் யோசித்தான். பிறகு, ஏதோ ஒன்று மனத்தில் தடை செய்தது. ஒரு வேளை இந்தக் கதை முழுதும் ஆழ்வார்க்கடியானின் கற்பனையோ என்று தோன்றியது. ஆகையால் கடம்பூர் மாளிகையில் தான் அறிந்து கொண்ட இரகசியத்தைச் சொல்லவில்லை.
    அப்போது சற்று தூரத்தில், கடம்பூர் வீரன் குதிரையுடன் வந்து கொண்டிருந்தான்…
    “தம்பி! எனக்கு நீ உதவி செய்வாயா?” என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.
    “நான் என்ன உதவி செய்ய முடியும்? பழுவேட்டரையர் இந்தச் சோழப் பேரரசையே ஆட்டுவிக்கும் ஆற்றல் உடையவர். நானோ ஒரு செல்வாக்குமில்லாத தன்னந் தனி ஆள். என்னால் என்ன செய்ய முடியும்?” என்று வந்தியத்தேவன் ஜாக்கிரதையாகவே பேசினான். பிறகு, “நம்பிகளே! இராஜாங்க காரியங்களைப் பற்றி உமக்கு ஒன்றுமே தெரியாது என்றா சொல்கிறீர்கள். சுந்தர சோழ மகாராஜாவுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அடுத்த பட்டத்துக்கு உரியவர் யார் என்று உம்மால் சொல்ல முடியாதா?” என்றான்.
    இப்படிக் கேட்டு விட்டு, அடியானுடைய முகபாவத்தில் ஏதாவது மாறுதல் ஏற்படுகிறதா என்று வந்தியத்தேவன் ஆவலுடன் பார்த்தான், லவலேசமும் மாறுதல் ஏற்படவில்லை.
    “அதெல்லாம் எனக்கு என்ன தெரியும், தம்பி! குடந்தை ஜோசியரைக் கேட்டால் ஒருவேளை சொல்வார்!” என்றான் நம்பி.
    “ஓஹோ! குடந்தை சோதிடர் உண்மையிலே அவ்வளவு கெட்டிக்காரர்தானா?”
    “அசாத்திய கெட்டிக்காரர்! சோதிடமும் பார்த்துச் சொல்வார்; மனதையும் அறிந்து சொல்வார்; உலக விவகாரங்களை அறிந்து, அதற்கேற்பவும் ஆருடம் சொல்லுவார்!”
    “அப்படியானால் அவரைப் பார்த்து விட்டுப் போக வேண்டியதுதான்!” என்று வந்தியத்தேவன் மனதில் தீர்மானித்துக் கொண்டான்.
    ஆதிகாலத்திலிருந்து மனித குலத்துக்கு வருங்கால நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதில் பிரேமை இருந்து வருகிறது. அரசர்களுக்கும் அந்தப் பிரேமை உண்டு; ஆண்டிகளுக்கும் உண்டு; முற்றும் துறந்த முனிவர்களுக்கும் உண்டு; இல்லறத்தில் உள்ள ஜனங்களுக்கும் உண்டு; அறிவிற் சிறந்த மேதாவிகளுக்கும் உண்டு; மூடமதியினர்களுக்கும் உண்டு. இத்தகைய பிரேமை, நாடு நகரங்களைக் கடந்து பல அபாயங்களுக்குத் துணிந்து, அரசாங்க அந்தரங்கப் பணியை நிறைவேற்றுவதற்காகப் பிரயாணம் செய்துகொண்டிருந்த நம்முடைய வாலிப வீரனுக்கும் இருந்ததில் ஆச்சரியம் இல்லை அல்லவா?