Showing posts with label TAMIL. Show all posts
Showing posts with label TAMIL. Show all posts

Monday 27 August 2012

அத்தியாயம் 10 – குடந்தை சோதிடர்


குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்னி நதி கன்னிப் பருவம் கடந்ததும் தன் மணாளனாகிய சமுத்திர ராஜனிடம் சென்றடைய விரும்பினாள். காடும் மேடும் கடந்து பாறைகளையும் பள்ளங்களையும் தாண்டிக் கொண்டு விரைந்து சென்றாள். சமுத்திர ராஜனை நெருங்க நெருங்க, நாயகனைக் காணப் போகிறோம் என்ற குதூகலத்தினால் அவள் உள்ளம் விம்மி உடல் பூரித்தது. இன்னும் சற்றுத் தூரம் சென்றாள், காதலனை அணைத்துக் கொள்ளக் கரங்கள் இரண்டு உண்டாயின. இரு கரங்களை விரித்தவாறு தாவிப் பாய்ந்து சென்றாள். ஆனால் உள்ளத்தில் பொங்கிய ஆர்வ மிகுதிக்கு இரு கரங்கள் போதுமென்று தோன்றவில்லை; அவளுடைய ஆசைக் கரங்கள் பத்து, இருபது, நூறு என்று வளர்ந்தன. அவ்வளவு கரங்களையும் ஆவலுடன் நீட்டிக் கொண்டு சமுத்திர ராஜனை அணுகினாள். இவ்விதம் ஆசைக் கணவனை அடைவதற்குச் சென்ற மணப் பெண்ணுக்குச் சோழ நாட்டுச் செவிலித் தாய்மார் செய்த அலங்காரங்கள்தான் என்ன? அடடா! எத்தனை அழகிய பச்சைப் புடைவைகளை உடுத்தினார்கள்? எப்படியெல்லாம் வண்ண மலர்களைச் சூட்டினார்கள்? எவ்விதமெல்லாம் பரிமள சுகந்தங்களைத் தூவினார்கள்? ஆஹா! இரு கரையிலும் வளர்ந்திருந்த புன்னை மரங்களும் கடம்ப மரங்களும் ரத்தினப் பூக்களையும் வாரிச் சொரிந்த அருமையை எவ்விதம் வர்ணிப்பது? தேவர்கள் பொழியும் பூமாரியும் இதற்கு இணையாகுமா?
பொன்னி நதியே! உன்னைப் பார்த்துக் களிப்படையாத கன்னிப் பெண் யார்தான் இருக்க முடியும்! உன் மணக்கோல ஆடை அலங்காரங்களைக் கண்டு உள்ளம் பொங்காத மங்கை யார் இருக்க முடியும்?
கலியாணப் பெண்ணைச் சுற்றி ஊரிலுள்ள கன்னிப் பெண்கள் எல்லோரும் சூழ்ந்து கொள்வதுபோல் உன்னை நாடிப் பெண்கள் வந்து கூடுவதும் இயற்கையே அல்லவா!
பொன்னி தன் மணாளனைத் தழுவிக் கொள்ள ஆசையுடன் நீட்டும் பொற்கரங்களில் ஒன்றுக்குத்தான் அரிசிலாறு என்று பெயர்! காவேரிக்குத் தென் புறத்தில் மிக நெருக்கத்தில் அரிசிலாறு என்னும் அழகிய நதி அமைந்திருக்கிறது. அப்படி ஒரு நதி இருப்பது சற்றுத் தூரத்தில் இருந்து வருகிறவர்களுக்குச் சொல்லித் தான் தெரிய வேண்டும். இருபுறமும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் இனிய பசுமரங்கள் அப்படி அந்நதியை மறைத்து விடுகின்றன. பிறந்தது முதலாவது அந்தப்புரத்தை விட்டு வௌியேறி அறியாத அரசகுலக் கன்னியென்றே அரிசிலாற்றைச் சொல்லலாம். அந்தக் கன்னி நதியின் அழகுக்கு இந்த உலகில் உவமையே கிடையாது.
நல்லது; அந்தப்புரம் என்னும் எண்ணத்தை மறந்துவிட்டு நேயர்கள் நம்முடன் அரிசிலாற்றை நெருங்கி வருவார்களாக. சோலையாக நெருங்கி வளர்ந்திருந்த மரங்களுக்கிடையே புகுந்து வருவார்களாக! அடடா இது என்ன அருமையான காட்சி? அழகுக்கு அழகு செய்வது போலும் அமுதத்துக்கு இனிப்பு ஊட்டுவது போலும் அல்லவா இருக்கிறது?
சித்திர விசித்திரமாகச் செய்த அன்ன வடிவமான வண்ணப் படகில் வீற்றிருக்கும் இந்த வனிதாமணிகள் யார்? அவர்களில் நடு நாயகமாக, நட்சத்திரங்களுக்கிடையில் பூரண சந்திரனைப் போல் ஏழுலகங்களையும் ஆளப் பிறந்த ராணியைப் போல், காந்தியுடன் விளங்கும் இந்த நாரீமணி யார்? அவளுக்கு அருகில் கையில் வீணையுடன் வீற்றிருக்கும் சாந்தசுந்தரி யார்? இனிய குரல்களில் இசை பாடி நதி வெள்ளத்துடன் கீத வெள்ளமும் கலந்து பெருகச் செய்து கொண்டு வரும் இந்தக் கந்தர்வப் பெண்கள் யார்? அவர்களில் ஒருத்தி மீனலோசனி; இன்னொருத்தி நீலலோசனி; ஒருத்தி தாமரை முகத்தாள்; இன்னொருத்தி கமல இதழ் நயனத்தாள்; ஆஹா வீணையை மீட்டுகிறாளே, அவளுடைய காந்தளை ஒத்த விரல்கள் வீணைத் தந்திகளில் அங்குமிங்கும் சஞ்சரிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.
அவர்கள் இசைக்கும் கீதத்தின் இனிமையைத்தான் என்ன என்று சொல்லுவது? அதைக் கேட்பதற்காக நதியின் வெள்ளம் கூட அல்லவா தன் ஓசையை நிறுத்தியிருக்கிறது? நதிக்கரை மரங்களில் வாழும் கிளிகளும் குயில்களும் கூட வாய்திறவா மோனத்தில் ஆழ்ந்திருக்கின்றனவே! மனிதர்களாய்ப் பிறந்தவர்கள், கேட்கும் செவி படைத்த பாக்கியசாலிகள் அந்த அமுத கானத்தை கேட்டுப் பரவசம் அடைவதில் வியப்பு என்ன? படகில் வரும் அப்பெண்கள் என்ன பாடுகிறார்கள் கேட்கலாம்:
     மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
          மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
     கருங்கயற்கண் விழித்து ஒல்கி
          நடந்தாய் வாழி! காவேரி!
     கருங்கயற்கண் விழித்து ஒல்கி
          நடந்த எல்லாம் நின்கணவன்
     திருந்து செங்கோல் வளையாமை
          அறிந்தேன் வாழி! காவேரி!
     பூவர் சோலை மயிலாடப்
          புரிந்து குயில்கள் இசைபாடக்
     காமர் மாலை அருகசைய
          நடந்தாய் வாழி! காவேரி!
     காமர் மாலை அருகசைய
          நடந்த வெல்லாம், நின் கணவன்
     நாம வேலின் திறங்கண்டே
          அறிந்தேன் வாழி! காவேரி!
இந்த அமுதத் தமிழ்ப் பாடல்களை எங்கேயோ கேட்டிருக்கிறோமல்லவா? ஆம், சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப் பாடல்கள் இவை. எனினும், இந்தப் பெண்கள் பாடும்போது முன் எப்போதுமில்லாத வனப்பும் கவர்ச்சியும் பெற்று விளங்குகின்றன. இவர்கள் பொன்னி நதியின் அருமைத் தோழிகள் போலும்! அதனாலேதான் இவ்வளவு பரவசமாக உணர்ச்சி ததும்பப் பாடுகிறார்கள். அடடா! பாடலும் பண்ணும் பாவமும் எப்படிக் கலந்து இழைந்து குழைந்து இவர்களுடைய குரலிலிருந்து அமுத வெள்ளமாகப் பொழிகின்றன? பாட்டாவது, பண்ணாவது, கானமாவது, இசையாவது! அதெல்லாம் ஒன்றுமில்லை. இது ஏதோ மாயக் கலை! பாடுகிறவர்கள், கேட்பவர்கள் எல்லாரையும் பித்துப் பிடிக்கச் செய்யும் மந்திர வித்தை!
படகு மிதந்து கொண்டே வந்து, மரங்கள் சிறிது இடைவெளி தந்த ஓடத்துறையில் ஒதுங்கி நிற்கிறது. இரண்டு பெண்கள் இறங்குகிறார்கள்; அவர்களில் ஒருத்தி ஏழுலகத்துக்கும் ராணி எனத் தகும் கம்பீரத் தோற்றமுடைய பெண்மணி. இன்னொருத்தி வீணைத் தந்திகளில் விரல்களை ஓட்டி இன்னிசை எழுப்பிய நங்கை. இருவரும் அழகிகள் என்றாலும் ஒருவருடைய அழகுக்கும் இன்னொருவருடைய அழகுக்கும் மிக்க வேற்றுமை இருந்தது. ஒருத்தி செந்தாமரை மலரின் கம்பீர சௌந்தரியம் உடையவள். இன்னொருத்தி குமுத மலரின் இனிய அழகை உடையவள். ஒருத்தி பூரண சந்திரன்; இன்னொருத்தி காலைப் பிறை. ஒருத்தி ஆடும் மயில்; இன்னொருத்தி பாடும் குயில். ஒருத்தி இந்திராணி; இன்னொருத்தி மன்மதனின் காதலி. ஒருத்தி வேகவாஹினியான கங்காநதி; இன்னொருத்தி குழைந்து நெளிந்து செல்லும் காவேரி.
வாசகர்களை மேலும் சந்தேக ஆராய்ச்சி நிலையில் விட்டு வைக்காமல் இவர்கள் இருவரும் யார் என்று சொல்லி விடுகிறோம். கம்பீரத் தோற்றமுடைய கங்கைதான் சுந்தர சோழ மன்னரின் செல்வப் புதல்வி குந்தவை. சரித்திரத்தில் ராஜராஜன் என்று புகழ் பெற்ற அருள்மொழிவர்மனின் சகோதரி. அரசிளங் குமரி என்றும் இளைய பிராட்டி என்றும் மக்களால் போற்றப்பட்ட மாதரசி. சோழ ராஜ்யத்தின் மகோன்னதத்திற்கு அடிகோலிய தமிழ்ப் பெரும் செல்வி. ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி. இன்னொருத்தி, குந்தவைப் பிராட்டியுடன் இருக்கும் பாக்கியத்தை நாடி வந்த கொடும்பாளூர்ச் சிற்றரசர் குலப் பெண். பிற்காலத்தில், சரித்திரத்திலேயே இணையில்லாத பாக்கியவதியாகப் போகிறவள். இன்று அடக்கமும் இனிமையும் சாந்தமும் உருவெடுத்து விளங்குகிறவள்.
இந்த இரு மங்கைமார்களும் படகிலிருந்து கரையில் இறங்கினார்கள். குந்தவை மற்ற தோழிப் பெண்களைப் பார்த்து, “நீங்கள் இங்கேயே இருங்கள். ஒரு நாழிகை நேரத்தில் திரும்பி வந்து விடுகிறோம்!” என்றாள். அந்தத் தோழிப் பெண்கள் அனைவரும் தெய்வத் தமிழ்நாட்டில் பற்பல சிற்றரசர்களின் அரண்மனையில் பிறந்த அரசகுமாரிகள். குந்தவை தேவிக்குத் தோழியாக இருப்பதைப் பெறற்கரும் பேறாகக் கருதிப் பழையாறை அரண்மனைக்கு வந்தவர்கள்.இப்போது தங்களில் ஒருத்தியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவைப் பிராட்டி கரையில் இறங்கி ‘போய்விட்டு விரைவில் வருகிறேன்’ என்றதும் அவர்களுடைய கண்களில் ஏமாற்றமும் அசூயையும் தோன்றின.
கரையில் குதிரை பூட்டிய ரதம் ஒன்று சித்தமாயிருந்தது. “வானதி! ரதத்தில் ஏறிக்கொள்!” என்றாள் குந்தவை தன் தோழியைப் பார்த்து. வானதி ஏறியதும் தானும் ஏறி கொண்டாள் ரதம் வேகமாய்ச் சென்றது.
“அக்கா! நாம் எங்கே போகிறோம்? எனக்குச் சொல்லலாமா?” என்று வானதி கேட்டாள்.
“சொல்லாமல் என்ன? குடந்தை சோதிடர் வீட்டுக்குப் போகிறோம்!” என்றாள் குந்தவை.
“சோதிடர் வீட்டுக்கு எதற்காகப் போகிறோம், அக்கா? என்னத்தைப் பற்றிக் கேட்பதற்காக?”
“வேறு எதற்கு? உன்னைப் பற்றிக் கேட்பதற்காகத்தான். சில மாத காலமாக நீ இப்படிப் பிரமை பிடித்தவள் போலும், உடல் மெலிந்தும் வருகிறாயா? உனக்கு எப்போது பிரமை நீங்கி உடம்பு தேறும் என்று கேட்பதற்காகத்தான்!”
“அக்கா! தங்களுக்கு ரொம்பப் புண்ணியமுண்டு; எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை. என்னைப் பற்றிக் கேட்பதற்காகப் போக வேண்டாம் திரும்பி விடுவோம்!”
“இல்லையடி, அம்மா, இல்லை! உன்னைப் பற்றிக் கேட்பதற்காக இல்லை; என்னைப் பற்றிக் கேட்பதற்காகத்தான் போகிறேன்.”
“தங்களைப் பற்றி என்ன கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்? ஜோசியரிடம் கேட்டு என்ன தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.”
“எனக்குக் கலியாணம் ஆகுமா? அல்லது கடைசி வரையில் கன்னிப் பெண்ணாகவே இருந்து காலம் கழிப்பேனா என்று கேட்கப் போகிறேன்.”
“அக்கா!இதற்கு ஜோசியரிடம் போய்க் கேட்பானேன்! தங்களுடைய மனதையே அல்லவா கேட்க வேண்டும்? தாங்கள் தலையை அசைக்க வேண்டியதுதான்! இமய மலை முதலாவது குமரி முனை வரையில் உள்ள ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வரமாட்டார்களா? ஏன், கடல் கடந்த தேசங்களிலேயிருந்தெல்லாம்கூட வருவார்களே! தங்களைக் கை பிடிக்கும் பேறு எந்த வீர ராஜகுமாரனுக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ? அதைத் தாங்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்!”
“வானதி நீ சொல்வதெல்லாம் உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதற்கு ஒரு தடை இருக்கிறது. எந்தத் தேசத்து அரச குமாரனையாவது மணம் புரிந்து கொண்டால் நான் அவனுடைய நாட்டுக்குப் போக வேண்டி வருமல்லவா? எனக்கு இந்தப் பொன்னி நதி பாயும் சோழ நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்குப் போகப் பிடிக்கவேயில்லையடி! வேறு நாட்டுக்குப் போவதில்லை என்று நான் சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்…”
“அது ஒரு தடையாகாது; தங்களை மணம் புரிந்து கொள்ளும் எந்த ராஜகுமாரனும் தங்கள் காலில் விழுந்து கிடக்கும் அடிமையாகவே இருப்பான். இங்கேயே இருக்க வேண்டும் என்றாலும் இருந்து விட்டுப் போகிறான்.”
“ஆகா! எலியைப் பிடித்து மடியில் வைத்துக் கட்டிக் கொள்வதுபோல் வேறு தேசத்து ராஜகுமாரனை நம் ஊரிலேயே கொண்டு வைத்துக் கொள்ளவா சொல்கிறாய்? அதனால் என்னென்ன தொல்லைகள் எல்லாம் விளையும் தெரியுமா?”
“எப்படியும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் ஒரு நாள் கலியாணம் செய்து கொண்டுதானே தீர வேண்டும்?”
“அப்படி ஒரு சாஸ்திரத்திலும் சொல்லியிருக்கவில்லையடி, வானதி! ஔவையாரைப் பார்! அவள் என்றும் கன்னி அழியாத கவீசுவரியாகப் பல காலம் ஜீவித்திருக்கவில்லையா?”
“ஔவையார் இளம் பிராயத்திலேயே கடவுளின் வரத்தினால் கிழவியாகப் போனவள் தாங்கள் அதைப்போல் ஆகவில்லையே?”
“சரி அப்படிக் கலியாணம் செய்து கொள்வது என்று புறப்பட்டால் அநாதையான சோழ நாட்டு வீரன் ஒருவனையே நான் மணந்து கொள்வேன். அத்தகையவனுக்கு ராஜ்யம் இராது. என்னை அழைத்துக் கொண்டு வேறு ஒரு தேசத்துக்குப் போக வேண்டும் என்று சொல்ல மாட்டான். இங்கேயே சோழ நாட்டிலேயே இருந்து விடுவான்…”
“அக்கா! அப்படியானால் இந்தச் சோழ நாட்டை விட்டுப் போகமாட்டீர்களே?”
“ஒரு நாளும் போக மாட்டேன் சொர்க்க லோகத்துக்கு என்னை அரசியாக்குவதாகச் சொன்னாலும் போகமாட்டேன்.”
“இன்றைக்குத்தான் என் மணம் நிம்மதி அடைந்தது.”
“அது என்னடி?”
“நீங்கள் வேறு நாட்டுக்குப் போனால், நானும் உங்களோடு வந்தே தீர வேண்டும். உங்களை விட்டுப் பிரிந்திருக்க என்னால் முடியாது. அதே சமயத்தில் இந்தச் சோழ வளநாட்டைப் பிரிந்து போகவும் எனக்கு மனமில்லை.”
“கலியாணம் ஆனால் நீ பிரிந்து போய்த்தானே தீர வேண்டும்?”
“நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை, அக்கா!”
“அடியே! எனக்கு செய்த உபதேசமெல்லாம் எங்கே போயிற்று?”
“தங்களை போலவா நான்?”
“அடி கள்ளி! எனக்கு எல்லாம் தெரியும். என் கண்ணில் மண்ணைத் தூவலாம் என்றா பார்க்கிறாய்? உனக்குச் சோழ நாட்டின் மீது அபிமானம் ஒன்றும் கிடையாது. நீ ஆசை வைத்திருக்கும் சோழ நாடு, வாளும் வேலும் தாங்கி ஈழநாட்டுக்கு யுத்தம் செய்ய அல்லவா போயிருக்கிறது? உன் அந்தரங்கம் எனக்குத் தெரியாது எனறா நினைத்தாய்?”
“அக்கா! அக்கா! நான் அவ்வளவு மடமதி உடையவளா? சூரியன் எங்கே? காலைப் பனித்துளி எங்கே? சூரியனுடைய நட்புக்குப் பனித்துளி ஆசைப்பட்டால் என்ன பயன்?”
“பனித்துளி சிறியது தான்! சூரியன் பெரியது, பிரகாசமானது தான்! ஆனாலும் பனித்துளி அப்படிப்பட்ட சூரியனைச் சிறைப்படுத்தித் தனக்குள் வைத்திருக்கிறதோ, இல்லையோ?”
வானதி உற்சாகமும் ஆர்வமும் நிறைந்த குரலில், “அப்படியா சொல்கிறீர்கள்! பனித்துளிகூடச் சூரியனை அடையலாம் என்று சொல்கிறீர்களா?” என்றாள். பிறகு திடீரென்று மனச் சோர்வு வந்து விட்டது. “பனித்துளி ஆசைப்படுகிறது; சூரியனையும் சிறைப்பிடிக்கிறது. ஆனால் பலன் என்ன? சிறிது நேரத்துக்கெல்லாம் சரியான தண்டனை அடைகிறது. வெயிலில் உலர்ந்து, இருந்த இடம் தெரியாமல் மறைகிறது!”
“அது தவறு, வானதி! பனித்துளியின் ஆசையைக் கண்டு சூரியன் தன்னுடன் பனித்துளியை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான். தன் ஆசைக்குகந்த பனித்துளிப் பெண் பிற புருஷர் கண்ணில் படக் கூடாது என்று அவன் எண்ணம். இரவு வந்ததும் மறுபடியும் வெளியே விட்டு விடுகிறான். மறைந்த பனித்துளி மறுபடியும் வந்து உதிக்கிறது அல்லவா?”
“அக்கா! இதெல்லாம் என்னைத் தேற்றுவதற்காகச் சொல்கிறீர்கள்.”
“அப்படியானால் உன் மனதில் ஒரு குறை இருக்கிறது என்று சொல்லு. இத்தனை நாள் ‘இல்லவே இல்லை’ என்று சாதித்தாயே? அதனால்தான் குடந்தை ஜோசியரிடம் போகிறேன்.”
“என் மனதில் குறையிருந்தால், அதைப் பற்றிக் கேட்கச் சோதிடரிடம் போய் என்ன பயன்?” என்று கூறி வானதி பெருமூச்செறிந்தாள்.
குடந்தை சோதிடரின் வீடு அந்த நகரின் ஒரு மூலையில் காளி கோயிலுக்கு அருகில் ஒரு தனித்த இடத்தில் இருந்தது. குடந்தை நகருக்குள் புகாமலேயே நகரைச் சுற்றிக் கொண்டு ரதம் அந்த வீடு சென்று அடைந்தது. ரதசாரதி ரதத்தைத் தங்கு தடையின்றி அங்கே ஓட்டிக் கொண்டு போய்ச் சேர்த்ததைப் பார்த்தால், அவன் அதற்கு முன் பலமுறை அங்கே ரதம் ஓட்டிக் கொண்டு சென்றிருக்க வேணும் என்று தோன்றியது.
வீட்டு வாசலில் சோதிடரும் அவருடைய சீடர் ஒருவரும் ஆயத்தமாகக் காத்திருந்தார்கள். சோதிடர் மிக்க பக்தி மரியாதையுடன் வந்தவர்களை வரவேற்று உபசரித்தார்.
“பெருமாட்டி! கலைமகளும் திருமகளும் ஓருருவாய் வந்த தாயே! வரவேணும்! வரவேணும்! இந்த ஏழையின் குடிசை செய்த பாக்கியம், மறுமுறையும் தாங்கள் இக்குடிசையைத் தேடி வந்தீர்கள்!” என்றார்.
“சோதிடரே! இந்த வேளையில் தங்களைத் தேடிக் கொண்டு வேறு யாரும் இங்கு வரமாட்டார்கள் அல்லவா?” என்றாள் குந்தவை.
“வரமாட்டார்கள், தாயே! இப்போதெல்லாம் என்னைத் தேடி அதிகம் பேர் வருவதே இல்லை. உலகத்தில் கஷ்டங்கள் அதிகமாகும் போது தான் சோதிடர்களைத் தேடி மக்கள் அதிகமாக வருவார்கள். இப்போது தங்களுடைய திருத் தந்தை சுந்தரச் சோழரின் ஆட்சியில், குடிகளுக்குக் கஷ்டம் என்பதே கிடையாது. எல்லோரும் சுக சௌக்கியங்களுடன் சகல சம்பத்துக்களையும் பெற்றுச் சந்தோஷமாக வாழ்கிறார்கள். என்னைத் தேடி ஏன் வருகிறார்கள்?” என்றார் சோதிடர்.
“அப்படியானால் எனக்கு ஏதோ கஷ்டம் வந்திருப்பதனால் தான் உம்மைத் தேடி வந்திருக்கிறேன் என்று சொல்லுகிறீராக்கும்!”
“இல்லை, பெருமாட்டி! இல்லவே இல்லை! நவநிதியும் கொழிக்கும் பழையாறை மன்னரின் திருக் குமாரிக்குக் கஷ்டம் வந்தது என்று எந்தக் குருடன்தான் சொல்லுவான்! உலகத்தில் மக்களுக்குக் கஷ்டமே இல்லாமற் போய்விட்டபடியால், இந்த ஏழைச் சோதிடனுக்கு மட்டும் கஷ்டம் வந்திருக்கிறது; இவனை மட்டும் கவனிப்பார் இல்லை. ஆகையால், இந்த ஏழையின் கஷ்டத்தைத் தீர்ப்பதற்காக அம்பிகையைப் போல் வந்திருக்கிறீர்கள். தாயே! குடிசைக்குள்ளே வந்தருள வேண்டும். இங்கேயே தங்களை நிறுத்தி வைத்திருப்பது நான் செய்யும் அபசாரம்!” என்று ஜோசியர் சமத்காரமாகப் பேசினார்.
ரதசாரதியைப் பார்த்துக் குந்தவை, “ரதத்தைக் கோயிலுக்குச் சமீபம் கொண்டு போய் ஆலமரத்தின் நிழலில் நிறுத்தி வை!” என்றாள்.
பிறகு சோதிடர் வழிகாட்டி முன் செல்ல, குந்தவையும் வானதியும் அவ்வீட்டுக்குள்ளே சென்றார்கள்.
சோதிடர் தம் சீடனைப் பார்த்து, “அப்பனே! வாசலில் ஜாக்கிரதையாக நின்று கொண்டிரு; தப்பித் தவறி யாராவது வந்தாலும் உள்ளே விடாதே!” என்று எச்சரித்தார்.
அரசகுமாரியை வரவேற்பதற்கு உகந்ததாகச் சோதிடரின் கூடம் அழகு செய்யப்பட்டிருந்தது. சுவரில் ஒரு மாடத்தில் அம்பிகையின் படம் அலங்கரிக்கப்பட்டு விளங்கியது. அமருவதற்கு இரண்டு பீடங்கள் சித்தமாயிருந்தன. குத்துவிளக்கு எரிந்தது, அங்குமிங்கும் கோலங்கள் பொலிந்தன. ராசிச் சக்கரங்கள் போட்ட பலகைகளும் ஓலைச்சுவடிகளும் சுற்றிலும் இரைந்து கிடந்தன.
பெண்மணிகள் இருவரும் பீடங்களில் அமர்ந்த பிறகு, சோதிடரும் உட்கார்ந்தார்.
“அம்மணி! வந்த காரியம் இன்னதென்பதைத் தயவு செய்து சொல்லி அருள வேணும்!” என்றார்.
“ஜோசியரே! அதையும் தங்கள் ஜோதிடத்திலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளக் கூடாதா?” என்றாள் குந்தவை.
“ஆகட்டும் தாயே!” என்று கூறிச் ஜோதிடர் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் ஏதோ மந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தார்.
பிறகு கண்ணைத் திறந்து பார்த்து, “கோமாட்டி, இந்தக் கன்னிப் பெண்ணின் ஜாதகம் பற்றிக் கேட்பதற்காகவே இன்று முக்கியமாக வந்திருக்கிறீர்கள். அவ்விதம் தேவி பராசக்தியின் அருள் சொல்கிறது உண்மைதானா?” என்றார்.
“ஆஹா! பிரமாதம்! உங்களுடைய சக்தியை என்னவென்று சொல்வது? ஆம் ஜோசியரே! இந்தப் பெண்ணைப் பற்றிக் கேட்கத் தான் வந்தேன். ஒரு வருஷத்துக்கு முன்பு இவள் பழையாறை அரண்மனைக்கு வந்தாள். வந்து எட்டு மாத காலம் மிகக் குதூகலமாய் இருந்து வந்தாள். என் தோழியருக்குள்ளே இவள்தான் சிரிப்பும் விளையாட்டும் கலகலப்புமாக இருந்து வந்தாள். நாலுமாதமாக இவளுக்கு என்னவோ நேர்ந்திருக்கிறது. அடிக்கடி சோர்ந்து போகிறாள். பிரமை பிடித்தாற்போல் இருக்கிறாள்; சிரிப்பையே மறந்து விட்டாள். உடம்புக்கு ஒன்றுமில்லை என்கிறாள். இவள் பெற்றோர்கள் நாளைக்கு வந்து கேட்டால், என்ன மறுமொழி சொல்வதென்றே தெரியவில்லை…”
“தாயே! கொடும்பாளூர் கோமகளின் செல்வப் புதல்வி தானே இவர்? இவருடைய பெயர் வானதி தானே?” என்றார் ஜோதிடர்.
“ஆமாம்; உமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே!”
“இந்த அரசிளங்குமரியின் ஜாதகம் கூட என்னிடம் இருக்கிறது. சேர்த்து வைத்திருக்கிறேன்! சற்றுப் பொறுக்க வேணும்!” என்று சொல்லிவிட்டு, ஜோதிடர் பக்கத்திலிருந்த ஒரு பழைய பெட்டியைத் திறந்து சிறிது நேரம் புரட்டினார். பிறகு, அதிலிருந்து ஒரு ஜாதகக் குறிப்பை எடுத்துக் கவனமாய்ப் பார்த்தார்.

<<அத்தியாயம் 9                                                                                                                                 அத்தியாயம் 11>> 

அத்தியாயம் 9 – வழிநடைப் பேச்சு


பாலாற்றுக்கு வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன் அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன் ஆகையால் ஆற்று வெள்ளத்தில் நீந்துவதற்கு அவனுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு சமயம் வடபெண்ணைக் கரையில் எல்லைக் காவல் புரிந்துவந்தபோது, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினான். ஒரு பெரிய நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டான். அந்தப் பொல்லாத விஷமச் சுழல் அவனைச் சுற்றிச் சுற்றி வரச் செய்து வதைத்தது. அதே சமயத்தில் கீழேயும் இழுத்துக் கொண்டிருந்தது. சீக்கிரத்தில் வந்தியதேவனுடைய பலத்தையெல்லாம் அந்தச் சுழல் உறிஞ்சிவிட்டது. “இனிப் பிழைக்க முடியாது, சுழலில் மூழ்கிச் சாக வேண்டியதுதான்!” என்று வந்தியத்தேவன் நிராசை அடைந்த சமயத்தில் தெய்வாதீனமாக நதிச் சுழலிலிருந்து வௌிப்பட்டான். வெள்ளம் அவனை அடித்துக் கொண்டு போய்க் கரையில் ஒதுக்கிக் காப்பாற்றியது!
அன்றிரவு வந்தியத்தேவன் மீண்டும் சென்று படுத்தபோது அவனுக்கு நதியின் சுழலில் அகப்பட்டுத் திண்டாடியது போன்ற அதே உணர்ச்சி ஏற்பட்டது. ஒரு பெரிய இராஜாங்கச் சதிச் சுழலில் தன்னுடைய விருப்பமில்லாமலே விழுந்து அகப்பட்டுக் கொண்டதாகத் தோன்றியது. அந்த நதிச் சுழலிலிருந்து தப்பியது போல் இந்தச் சதிச் சுழலிலிருந்தும் தப்ப முடியுமா? கடவுள் தன்னை மறுமுறையும் காப்பாற்றுவாரா?
அன்று அவன் கடம்பூர் மாளிகையில் நடந்த நள்ளிரவுக் கூட்டத்திலிருந்து அறிந்து கொண்ட விஷயங்கள் அவனைத் திக்குமுக்காடச் செய்து விட்டன. சோழ மகா சாம்ராஜ்யத்துக்கு வெளிப்பகைவர்களால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கிச் சில வருஷங்கள்தான் ஆகியிருந்தன. இளவரசர் ஆதித்த கரிகாலர் மகாவீரர், போர்க் கலையில் நிபுணர்; ராஜதந்திரத்தில் சாணக்கியர். தம்முடைய அறிவாற்றல்களையும் சோழ நாட்டுப் படைகளின் போர்த் திறனையும் பூரணமாகப் பயன்படுத்தி இரட்டை மண்டலத்துக் கிருஷ்ண மன்னனின் ஆதிக்கத்தைத் தொண்டை மண்டலத்திலிருந்து அடியோடு தொலைத்தார். வெளிப்பகை ஒருவாறு ஒழிந்தது. இந்த நிலைமையில் உட்கலகமும் சதியும் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. வெளிப்பகையைக் காட்டிலும் அபாயகரமான இந்த உட்பகையின் விளைவு என்ன ஆகும்?
சோழ நாட்டின் புகழ்பெற்ற வீரர்களும் அமைச்சர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் அல்லவா இந்தப் பயங்கரமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்? பழுவேட்டரையரும் அவருடைய சகோதரரும் எப்பேர்ப்பட்டவர்கள்? அவர்களுடைய சக்தி என்ன? செல்வாக்கு என்ன? இங்கே இன்று கூடியிருந்த மற்றவர்கள்தான் எவ்வளவு பெயரும் புகழும் செல்வாக்கும் பராக்கிரமமும் வாய்ந்தவர்கள்? இத்தகைய கூட்டம் இதுதான் முதற் கூட்டமாயிருக்குமா? பழுவேட்டரையர் மூடுபல்லக்கில் மதுராந்தகரை வைத்து இவ்விதம் இன்னும் எத்தனை இடங்களுக்குக் கொண்டு போயிருக்கிறாரோ? அடாடா! முதிய வயதில் ஓர் இளம்பெண்ணை மணந்து கொண்டது இவருக்கு இந்தச் சதிகார முயற்சிக்கு எவ்வளவு சாதகமாகப் போய்விட்டது?
சோழ சிம்மாசனத்துக்கு உரியவர் இளவரசர் ஆதித்த கரிகாலர்தான் என்பது பற்றி இன்று வரை வந்தியத்தேவனுடைய மனதில் எவ்விதச் சந்தேகமும் உதிக்கவில்லை. போட்டி ஒன்று ஏற்படக் கூடும் என்று அவன் கனவிலும் கருதவில்லை. கண்டராதித்தனுடைய புதல்வர் மதுராந்தகரைப் பற்றி அவன் கேள்விப்பட்டதுண்டு. தந்தையைப் போலவே புதல்வரும் சிவபக்திச் செல்வர் என்று அறிந்ததுண்டு. ஆனால் அவர் இராஜ்யத்துக்கு உரிமையுள்ளவர் என்றோ, அதற்காகப் போட்டியிடக் கூடியவர் என்றோ கேள்விப்பட்டதில்லை. அந்த எண்ணமே அவனுடைய மனத்தில் அது வரையில் தோன்றியதில்லை.
ஆனால் நியாயா நியாயங்கள் எப்படி? பட்டத்துக்கு உரியவர் உண்மையிலே யார்? ஆதித்த கரிகாலரா? மதுராந்தகரா? யோசிக்க யோசிக்க, இரு தரப்பிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது. போட்டி என்று உண்மையில் ஏற்பட்டால், இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள்? தன்னுடைய கடமை என்ன? ஆஹா! என்னென்னவோ மனக் கோட்டை கட்டிக் கொண்டு காஞ்சியிலிருந்து இந்த யாத்திரை கிளம்பினோமே? பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு உகந்தபடி நடந்து கொண்டு சோழப் பேரரசில் பெரிய பதவிகளை அடையலாம் என்று ஆசைப்பட்டோமே! காலாகாலத்தில் வாணர் குலத்தின் பூர்வீக ராஜ்யத்தைக்கூடத் திரும்பப் பெறலாம் என்று நினைத்தோமே? இதற்கெல்லாம் சாதனமாக எந்தப் புளியங்கொம்பைப் பிடித்தோமோ அதுவே முறிந்துவிடும் போலிருக்கிறதே…? இத்தகைய சிந்தனைகளினால் வந்தியத்தேவன் இரண்டாம் முறை வந்து படுத்த பிறகு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் திண்டாடினான். கடைசியாக, இரவு நாலாம் ஜாமத்தில் கிழக்கு வெளுக்கும் நேரத்தில் அவனுக்கு ஒருவாறு தூக்கம் வந்தது.
மறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் சுளீர் என்று அவன்பேரில் பட்டபோது கூட வந்தியத்தேவன் எழுந்திருக்கவில்லை. கந்தமாறன் வந்து தட்டி எழுப்பியபோதுதான் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தான்.
“இராத்திரி நன்றாய்த் தூக்கம் வந்ததா?” என்று கந்தமாறன் விருந்தினரை உபசரிக்கும் முறைப்படி கேட்டான். பிறகு அவனாகவே, “மற்ற விருந்தினரெல்லாம் தூங்கச் சென்ற பிறகு நான் இங்கு வந்து பார்த்தேன். நீ நன்றாய்க் கும்பகர்ண சேவை செய்து கொண்டிருந்தாய்!” என்று சொன்னான்.
வந்தியத்தேவன் மனத்தில் பொங்கி எழுந்த நினைவுகளையெல்லாம் அடக்கிக் கொண்டு, “குரவைக் கூத்துப் பார்த்து விட்டு இங்கு வந்து படுத்ததுதான் தெரியும், இப்போதுதான் எழுந்திருக்கிறேன். அடாடா! இவ்வளவு நேரம் ஆகி விட்டதே! உதித்து ஒரு ஜாமம் இருக்கும் போலிருக்கிறதே! உடனே நான் கிளம்ப வேண்டும். கந்தமாறா! குதிரையை ஆயத்தம் பண்ணும்படி உன் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடு!” என்றான்.
“அழகாயிருக்கிறது! அதற்குள்ளே நீ புறப்படுவதாவது? என்ன அவசரம்? பத்து நாளாவது இங்கே தங்கிவிட்டுத்தான் போக வேண்டும்” என்றான் கந்தமாறன்.
“இல்லை, அப்பனே! தஞ்சாவூரில் என் மாமனுக்கு உடம்பு செவ்வையாக இல்லை. பிழைப்பதே துர்லபம் என்று செய்தி வந்தது. ஆகையால் சீக்கிரத்தில் அவரைப் போய்ப் பார்க்க வேண்டும், உடனே புறப்பட வேண்டும்” என்று ஒரே போடாகப் போட்டான் வல்லவரையன்.
“அப்படியானால், திரும்பி வரும் போதாவது இங்கே சில நாள் கட்டாயம் தாமதிக்க வேண்டும்.”
“அதற்கென்ன, அப்போது பார்த்துக் கொள்ளலாம், இப்போது நான் புறப்படுவதற்கு விடைகொடு!”
“அவ்வளவு அவசரப்படாதே! காலை உணவு அருந்திவிட்டுப் புறப்படலாம். நானும் உன்னுடன் கொள்ளிட நதி வரையில் வருகிறேன்.”
“அது எப்படி முடியும்? யார், யாரோ, பெரிய பெரிய விருந்தாளிகள் உன் வீட்டுக்கு வந்திருக்கிறார்களே, அவர்களை விட்டுவிட்டு..”
“உன்னைவிடப் பெரிய விருந்தாளி எனக்கு யாரும் இல்லை!..” என்று கூறிய கந்தன் மாறவேள் சட்டென்று நிறுத்திக் கொண்டான். “வந்தவர்கள் பெரிய விருந்தாளிகள் தான் ஆனால் அவர்களைக் கவனித்துக்கொள்ள என் தந்தை இருக்கிறார்; அரண்மனை அதிகாரிகளும் இருக்கிறார்கள். உன்னோடு நேற்று ராத்திரிகூட நான் அதிக நேரம் பேசவில்லை. வழி நடையிலாவது சிறிது நேரம் உன்னோடு சல்லாபம் செய்தால்தான் என் மனம் நிம்மதி அடையும். அவசியம் கொள்ளிடக்கரை வரையில் வந்தே தீருவேன்!” என்றான்.
“எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. உன் இஷ்டம், உன் சௌகரியம்” என்றான் வந்தியத்தேவன்.
ஒரு நாழிகை நேரத்துக்குப் பிறகு இரு நண்பர்களும் இரு குதிரைகளில் ஏறிச் சம்புவரையர் மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். குதிரைகள் மெதுவாகவே சென்றன. பிரயாணம் மிகவும் இன்பகரமாயிருந்தது. மேலக்காற்று சாலைப் புழுதியை வாரி அடிக்கடி அவர்கள் மேல் இறைத்ததைக் கூட அந்த நண்பர்கள் பொருட்படுத்தவில்லை. பழைய ஞாபகங்களைப் பற்றிய பேச்சில் அவ்வளவாக மனத்தைப் பறிகொடுத்திருந்தார்கள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் வந்தியத்தேவன் கூறினான்; “கந்தமாறா! உன் வீட்டில் ஒரே ஒரு இரவுதான் தங்கினாலும் அது எனக்கு எவ்வளவோ பயனுள்ளதாயிருந்தது.ஆனால் ஒரே ஒரு ஏமாற்றம். உன் சகோதரியைப் பற்றி வடபெண்ணை நதிக்கரையில் என்னவெல்லாமோ வர்ணனை செய்து கொண்டிருந்தாய்! அவளை நன்றாய்ப் பார்க்கக் கூட முடியவில்லை. உன் அன்னைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அவள் எட்டிப் பார்த்தபோது அவள் முகத்தில் எட்டில் ஒரு பங்குதான் தெரிந்தது! நாணமும் மடமும் பெண்களுக்கு இருக்க வேண்டியதைவிட உன் தங்கையிடம் சற்று அதிகமாகவேயிருக்கிறது.”
கந்தமாறனுடைய வாயும் உதடுகளும் ஏதோ சொல்வதற்குத் துடித்தன. ஆனால் வார்த்தை ஒன்றும் உருவாகி வரவில்லை.
“ஆயினும் பாதகமில்லை நீதான் நான் திரும்பி வரும்போது சில நாள் உன் வீட்டில் தங்கவேண்டும் என்று சொல்கிறாயே? அப்போது பார்த்துப் பேசிக் கொண்டால் போகிறது. அதற்குள் உன் தங்கையின் கூச்சமும் கொஞ்சம் நீங்கிவிடலாம் அல்லவா? கந்தமாறா! உன் சகோதரியின் பெயர் என்னவென்று சொன்னாய்?”
“மணிமேகலை!”
“அடடா! என்ன இனிமையான பெயர்! பெயரைப் போலவே அழகும் குணமும் இருந்து விட்டால்..”
கந்தமாறன் குறுக்கிட்டு, “நண்பா! உன்னை ஒன்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.என் தங்கையை நீ மறந்து விடு; அவளைப் பற்றி நான் சொன்னதையெல்லாம் மறந்துவிடு; அவள் பேச்சையே எடுக்காதே!” என்றான்.
“இது என்ன, கந்தமாறா! ஒரே தலை கீழ் மாறுதலாயிருக்கிறதே! நேற்று இரவு கூட உன் வீட்டுக்கு நான் மருமகனாக வரப் போவதைப் பற்றி ஜாடையாகச் சொன்னாயே!”
“அவ்விதம் நான் சொன்னது உண்மை தான். ஆனால் பிறகு வேறு நிலைமை ஏற்பட்டுவிட்டது. என் பெற்றோர்கள் வேறு இடத்தில் என் சகோதரியைக் கலியாணம் செய்து கொடுக்க முடிவு செய்து விட்டார்கள்; மணிமேகலையும் அதற்குச் சம்மதித்து விட்டாள்!”
வந்தியத்தேவன் மனத்திற்குள் “மணிமேகலை வாழ்க!” என்று சொல்லிக் கொண்டான். மணிமேகலையை யாருக்குக் கொடுக்க நிச்சயித்திருப்பார்கள் என்று ஊகிப்பதிலும் அவனுக்குக் கஷ்டம் ஏற்படவில்லை. மூடு பல்லக்கிலிருந்து வெளிப்பட்ட இளவரசர் மதுராந்தகருக்குத்தான் நிச்சயித்திருப்பார்கள். மதுராந்தகருடைய கட்சிக்குப் பலம் தேட இப்படியெல்லாம் உறவுகளையும் ஏற்படுத்துகிறார்களாக்கும். பழுவேட்டரையர் பொல்லாத கெட்டிக்காரர்தான்!
“ஆஹா! நேற்று ராத்திரி வந்திருந்த பணக்கார விருந்தாளிகளில் ஒருவரை மாப்பிள்ளையாக்கத் திட்டம் செய்தீர்களாக்கும்! கந்தமாறா! இதில் எனக்கு வியப்பும் இல்லை; ஏமாற்றமும் இல்லை ஒரு மாதிரி நான் எதிர்பார்த்ததுதான்…”
“எதிர்பார்த்தாயா அது எப்படி?”
“என்னைப்போல் ஏழை அநாதைக்கு யார் பெண்ணைக் கொடுப்பார்கள்? ஊரும் வீடும் இல்லாதவனை எந்தப் பெண் மணந்து கொள்ள இணங்குவாள்? எப்போதோ என் குலத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அரசு செலுத்தினார்கள் என்றால், அது இப்போது என்னத்துக்கு ஆகும்.”
“நண்பா! போதும் நிறுத்து; என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் அவ்வளவு கேவலப்படுத்தாதே! நீ சொல்வது ஒன்றும் காரணமில்லை. வேறு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. அதை அறிந்தால் நீயே ஒப்புக் கொள்வாய். ஆனால் அதை நான் இப்போது வெளிப்படுத்துவதற்கில்லை. சமயம் வரும்போது நீயே தெரிந்து கொள்வாய்!”
“கந்தமாறா! இது என்ன ஒரே மர்மமாகவே இன்றைக்கு நீ பேசிக் கொண்டு வருகிறாயே?”
“அதற்காக என்னை மன்னித்துவிடு. உன்னிடம்கூட நான் மனம் விட்டுப் பேச முடியாதபடி அப்படி ஒரு பெரிய காரியந்தான். எது எப்படியானாலும் நம்முடைய சிநேகத்துக்கு எவ்வித பங்கமும் வராது என்பதை நம்பு. விஷயம் வெளியாக வேண்டிய சமயம் வரும்போது, ஓட்டமாக ஓடி வந்து உன்னிடந்தான் முதலில் சொல்வேன். அதுவரையில் என்னிடம் நம்பிக்கை வைத்திரு. உன்னை நான் ஒருநாளும் கைவிட மாட்டேன் என்னை நம்பு!..”
“இந்த வாக்குறுதிக்காக ரொம்ப வந்தனம். ஆனால் என்னைக் கைவிடும்படியான நிலைமை என்ன என்பதுதான் தெரியவில்லை! அப்படி நான் இன்னொருவரை நம்பிப் பிழைக்கிறவனும் அல்ல, கந்தமாறா! என்னுடைய உடைவாளையும் கைவேலையுமே நான் நம்பியிருப்பவன்!”
“அந்த உடைவாளையும் வேலையும் உபயோகிக்க வேண்டிய சந்தர்ப்பம் சீக்கிரத்தில் வரலாம். அப்போது நாம் இருவரும் ஒரே கட்சியில் நின்று தோளோடு தோள் சேர்ந்து போரிடுவோம்; அதனால் உன்னுடைய நோக்கமும் கைகூடும்…”
“இது என்ன? ஏதாவது யுத்தம் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கிறாயா? அல்லது ஈழ நாட்டில் நடக்கும் யுத்தத்துக்குப் போகும் உத்தேசம் உனக்கு உண்டா?”
“ஈழத்துக்கா? ஈழத்தில் நடக்கும் அழகான யுத்தத்தைப் பற்றிக் கேட்டால் நீ ஆச்சரியப்பட்டுப் போவாய்! ஈழத்தில் உள்ள நம் வீரர்களுக்காகச் சோழ நாட்டிலிருந்து அரிசியும் மற்ற உணவுப் பொருள்களும் போக வேண்டுமாம்! வெட்கக்கேடு! நான் சொல்லுவது வேறு விஷயம். கொஞ்சம் பொறுமையாயிரு, சமயம் வரும்போது சொல்லுகிறேன்; தயவு செய்து இப்போது என் வாயைப் பிடுங்காதே!”
“சரி, சரி! உனக்கு விருப்பம் இல்லை என்றால் ஒன்றும் சொல்ல வேண்டாம். வாயைக்கூடத் திறக்க வேண்டாம் அதோ கொள்ளிடமும் தெரிகிறது!” என்றான் வந்தியத்தேவன்.
உண்மையில் சற்றுத் தூரத்தில் கொள்ளிடப் பெரு நதியின் வெள்ளம் தெரிந்தது. சில நிமிஷ நேரத்தில் நண்பர்கள் நதிக்கரையை அடைந்தார்கள்.
ஆடிப் புதுப் பிரவாகம் அந்த மாநதியில் கரை புரண்டு சென்றது. மறுகரை வெகு தூரத்தில் இருப்பதாகத் தோன்றியது. மறுகரையிலேயுள்ள மரங்கள் சிறிய செடிகளைப் போலிருந்தன. செக்கச் சிவந்த பெரு நீர் வெள்ளம் சுழிகளும் சுழல்களுமாக, வட்ட வடிவக் கோலங்கள் போட்டுக் கொண்டு, கொம்மாளம் அடித்துக் கொண்டு, கரையை உடைக்கப் பிரயத்தனம் செய்து கொண்டு, ‘ஹோ’ என்று இரைந்து கொண்டு, கீழ்க் கடலை நோக்கி அடித்து மோதிக் கொண்டு விரைந்து சென்ற காட்சியை வந்தியத்தேவன் பார்த்துப் பிரமித்து நின்றான்.
தோணித்துறையில் ஓடம் ஒன்று நின்றது. ஓடந்தள்ளுவோர் இருவர் கையில் நீண்ட கோல்களுடன் ஆயத்தமாயிருந்தார்கள். படகில் ஒரு மனிதர் ஏற்கனவே ஏறியிருந்தார். அவரைப் பார்த்தால் பெரிய சிவபக்த சிகாமணி என்று தோன்றியது.
கரையில் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, “சாமி படகில் வரப் போகிறீர்களா? என்று படகோட்டிகளில் ஒருவன் கேட்டான்.
“ஆம்; இவர் வரப்போகிறார் கொஞ்சம் படகை நிறுத்து!” என்றான் கந்தமாறன்! இரு நண்பர்களும், குதிரை மீதிருந்து கீழே குதித்தார்கள்.
“யோசனை இல்லாமல் வந்து விட்டேனே? இந்தக் குதிரையை என்ன செய்வது? படகில் ஏற்ற முடியுமா?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.
“தேவையில்லை, நம்மைத் தொடர்ந்து இதோ இரண்டு ஆட்கள் வந்திருக்கிறார்கள். ஒருவன் உன் குதிரையை இங்கிருந்து கடம்பூருக்கு இட்டு வருவான். இன்னொருவன் உன்னுடன் படகில் ஏறி வந்து அக்கரையில் உனக்கு வேறு குதிரை சம்பாதித்துக் கொடுப்பான்!” என்றான் கந்தமாறன்.
“ஆஹா! எவ்வளவு முன்யோசனை? நீ அல்லவா உண்மை நண்பன்!” என்றான் வந்தியத்தேவன்.
“பாலாற்றையும் பெண்ணையாற்றையும் போலத்தான் கொள்ளிடத்தைப் பற்றி நீ நினைத்திருப்பாய். இதில் குதிரையைக் கொண்டு போக முடியாது என்று நீ எண்ணியிருக்கமாட்டாய்!”
“ஆமாம்; அவ்விதம் உங்கள் சோழ நாட்டு நதியைப் பற்றி அலட்சியமாய் நினைத்ததற்காக மன்னித்துவிடு! அப்பப்பா இது என்ன ஆறு? இது என்ன வெள்ளம்? சமுத்திரம் போலவல்லவா பொங்கி வருகிறது?”
இரு நண்பர்களும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு விடை பெற்றுக் கொண்டார்கள்.
வந்தியத்தேவன் நதிக்கரையோரமாகச் சென்று படகில் ஏறினான்.
கந்தமாறனுடன் வந்த ஆட்களில் ஒருவனும் ஏறிக் கொண்டான்.
படகு புறப்படுவதற்குச் சித்தமாயிருந்தது. ஓடக்காரர்கள் கோல்போட ஆரம்பித்தார்கள்.
திடீரென்று கொஞ்ச தூரத்திலிருந்து, “நிறுத்து! நிறுத்து! படகை நிறுத்து!” என்று ஒரு குரல் கேட்டது.
ஓடக்காரர்கள் கோல் போடாமல் கொஞ்சம் தயங்கி நின்றார்கள்.
கூவிக் கொண்டு ஓடி வந்தவன் அதிவிரைவில் கரைக்கருகில் வந்து சேர்ந்தான். முதற் பார்வையிலேயே அவன் யார் என்பது வந்தியத்தேவனுக்குத் தெரிந்து போயிற்று; அவன் ஆழ்வார்க்கடியான் நம்பி தான்.
வருகிறவர் வைஷ்ணவர் என்பதை அறிந்ததும் படகிலிருந்த சைவர், “விடு! படகை விடு! அந்தப் பாஷாண்டியுடன் நான் படகில் வரமாட்டேன்; அவன் அடுத்த படகில் வரட்டும்!” என்றார்.
ஆனால் வந்தியத்தேவன் ஓடக்காரர்களைப் பார்த்து, “கொஞ்சம் பொறுங்கள் அவரும் வரட்டும்! படகில் நிறைய இடம் இருக்கிறதே! ஏற்றிக் கொண்டு போகலாம்!” என்றான்.
ஆழ்வார்க்கடியானிடமிருந்து நேற்றிரவு நிகழ்ச்சிகளைப் பற்றிப் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வந்தியத்தேவன் விரும்பினான்.

<< அத்தியாயம் 8                                                                                                                               அத்தியாயம் 10 >> 

அத்தியாயம் 8 – பல்லக்கில் யார்?


சற்று நேரம் அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் ஏதோ பேசி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பல குரல்கள் ஒருங்கே கலந்து ஒலித்தபடியால் வந்தியத்தேவன் காதில் ஒன்றும் தெளிவாக விழவில்லை.
சம்புவரையர் உரத்த குரலில், ” பழுவூர் மன்னர் கேட்டதற்கு நாம் மறுமொழி சொல்ல வேண்டாமா? தலைக்குத் தலை பேசிக் கொண்டிருந்தால் என்ன ஆகிறது? இரவு மூன்றாம் ஜாமம் ஆரம்பமாகி விட்டது. அதோ சந்திரனும் வந்து விட்டது” என்றான்.
“எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. என்னைப் போல் இன்னும் சிலருடைய மனத்திலும் அது இருக்கலாம். பழுவூர்த்தேவர் கோபித்துக் கொள்வதில்லையென்றால், அதைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன்!” என்று முன்னால் ஒரு தடவை பேசிய கம்மல் குரல் சொல்லிற்று.
“இப்போது பேசுகிறது வணங்காமுடியார் தானே? எழுந்து நன்றாக வெளிச்சத்திற்கு வரட்டும்!” என்றார் பழுவேட்டரையர்.
“ஆமாம்; நான் தான் இதோ வெளிச்சத்துக்கு வந்து விட்டேன்.
“என்னுடைய கோபத்தையெல்லாம் நான் போர்க்களத்தில் காட்டுவதுதான் வழக்கம்; பகைவர்களிடம் காட்டுவது வழக்கம்; என் சிநேகிதர்களிடம் காட்டமாட்டேன். ஆகையால் எது வேண்டுமானாலும் மனம் விட்டுத் தாராளமாகக் கேட்கலாம்.”
“அப்படியானால் கேட்கிறேன், சுந்தரசோழ மகாராஜாவின் பேரில் பழுவேட்டரையர் என்ன குற்றம் சொல்கிறாரோ, அதே குற்றத்தைப் பழுவேட்டரையர் மீதும் சிலர் சுமத்துகிறார்கள்! அதை நான் நம்பாவிட்டாலும் இந்தச் சமயத்தில் கேட்டுத் தெளிய விரும்புகிறேன்!” என்றார் வணங்காமுடியார்.
“அது என்ன? எப்படி? விவரம் சொல்ல வேணும்?”
“பழுவூர்த்தேவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை மணம் புரிந்து கொண்டது நம் எல்லோருக்கும் தெரியும்…”
இச்சமயம், சம்புவரையரின் குரல் கோபத்தொனியில், “வணங்காமுடியார் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நம் மாபெருந் தலைவரை, நமது பிரதம விருந்தாளியை, இவ்விதம் அசந்தர்ப்பமான கேள்வி கேட்பது சிறிதும் தகாத காரியம்…” என்றார்.
“சம்புவரையரைப் பொறுமையாயிருக்கும்படி நான் ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன். வணங்காமுடியார் கேட்க விரும்புவதைத் தாராளமாகக் கேட்கட்டும். மனத்தில் ஒன்றை வைத்துக் கொண்டிருப்பதைவிடக் கீறிக் கேட்டு விடுவதே நல்லது. ஐம்பத்தைந்து பிராயத்துக்கு மேல் நான் ஒரு பெண்ணை மணந்து கொண்டது உண்மைதான். அதைத் தாராளமாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான்தான் கலியுக ராமாவதாரம் என்று எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை. ஏகபத்தினி விரதம் கொண்டவன் என்றும் சொல்லிக் கொண்டதில்லை. அந்தப் பெண்ணை நான் காதலித்தேன்; அவளும் என்னைக் காதலித்தாள். பழந்தமிழ்நாட்டு முறைப்படி இஷ்டப்பட்டு மணந்து கொண்டோம் இதில் என்ன தவறு?”
“ஒரு தவறும் இல்லை!” என்று பல குரல்கள் எழுந்தன.
“மணம் புரிந்து கொண்டது தவறு என்று நானும் சொல்லவில்லை. நம்மில் யார்தான் ஒரு தார விரதம் கொண்டவர்கள்? ஆனால்….ஆனால்…”
“ஆனால் என்ன! தயங்காமல் மனத்தைத் திறந்து கேட்டு விடுங்கள்!”
“புது மணம் புரிந்து கொண்ட இளைய ராணியின் சொல்லை எல்லா காரியங்களிலும் பழுவேட்டரையர் கேட்டு நடப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். இராஜரீக காரியங்களில் கூட இளைய ராணியின் யோசனையைக் கேட்பதாகச் சொல்லுகிறார்கள். தாம் போகுமிடங்களுக்கெல்லாம் இளைய ராணியையும் அழைத்துப் போவதாகச் சொல்லுகிறார்கள்.”
இப்போது கூட்டத்தில் ஒரு சிரிப்புச் சப்தம் எழுந்தது.
சம்புவரையர் குதித்து எழுந்து, “சிரித்தது யார்? உடனே முன் வந்து சிரித்ததற்குக் காரணம் சொல்லட்டும்!” என்று கர்ஜித்துக் கத்தியை உறையிலிருந்து உருவினார்.
“நான்தான் சிரித்தேன்! பதற வேண்டாம் சம்புவரையரே!” என்றார் பழுவேட்டரையர்.
பிறகு, “வணங்காமுடியாரே! தாலி கட்டி மணந்த மனைவியை நான் போகுமிடத்துக்கெல்லாம் அழைத்துப் போவது குற்றமா? அவ்விதம் நான் பல இடங்களுக்கு அழைத்துப் போவது உண்மைதான். ஆனால் ராஜரீக காரியங்களில் இளையராணியின் யோசனையைக் கேட்கிறேன் என்று சொல்வது மட்டும் பிசகு. அவ்விதம் நான் ஒரு நாளும் செய்வதில்லை…”
“அப்படியானால், இன்னும் ஓரே ஒரு சந்தேகத்தை மட்டும் நிவர்த்தி செய்யும்படி பழுவூர்த்தேவரை வேண்டிக் கொள்கிறேன். அந்தப்புரத்தில் இருந்திருக்க வேண்டிய பல்லக்கு இங்கே நாம் அந்தரங்க யோசனை செய்யும் இடத்திற்கு ஏன் வந்திருக்கிறது? பல்லக்கிற்குள்ளே யாராவது இருக்கிறார்களா; இல்லையா? இல்லையென்றால் சற்று முன்பு கேட்ட கனைப்புச் சத்தமும், வளையல் குலுங்கும் சத்தமும் எங்கிருந்து வந்தன?”
இவ்விதம் வணங்காமுடியார் கேட்டதும் அந்தக் கூட்டத்தில் ஒரு விசித்திரமான நிசப்தம் நிலவிற்று. பலருடைய மனத்திலும் இதே வித எண்ணமும் கேள்வியும் தோன்றியிருந்தபடியால், வணங்காமுடியாரை எதிர்த்துப் பேச யாருக்கும் உடனே துணிவு ஏற்படவில்லை. சம்புவரையரின் உதடுகள் ஏதோ முணுமுணுத்தன. ஆனால் அவர் வாயிலிருந்தும் வார்த்தை ஒன்றும் கேட்கவில்லை.
அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு பழுவேட்டரையர் கணீர் என்று கூறினார்: “சரியான கேள்வி; மறுமொழி சொல்ல நான் கடமைப்பட்டவன். இந்தக் கூட்டம் கலைவதற்கு முன்னால் உங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறேன். இன்னும் அரை நாழிகை பொறுத்திருக்கலாம் அல்லவா? அவ்வளவு நம்பிக்கை என்னிடம் உங்களுக்கு இருக்கிறதல்லவா?”
“இருக்கிறது, இருக்கிறது பழுவேட்டரையரிடம் எங்களுக்குப் பரிபூரண நம்பிக்கை இருக்கிறது!” என்று பல குரல்கள் கூவின.
“மற்றவர்களைக் காட்டிலும் பழுவேட்டரையரிடம் எனக்குப் பக்தியும் மரியாதையும் குறைவு என்று யாரும் எண்ண வேண்டாம். அவர் மனத்தைத் திறந்து கேட்கச் சொன்னபடியால் கேட்டேன். மற்றபடி அவர் இட்ட கட்டளையை நிறைவேற்றச் சித்தமாயிருக்கிறேன். இந்தக் கணத்தில் என் உயிரைக் கொடுக்கச் சொன்னாலும் கொடுக்கச் சித்தம்!” என்றார் வணங்காமுடி முனையரையர்.
“வணங்காமுடியாரின் மனத்தை நான் அறிவேன். நீங்கள் எல்லோரும் என்னிடம் வைத்துள்ள நம்பிக்கையையும் அறிவேன். ஆகையால் இன்று எதற்காகக் கூடினோமோ அதைப் பற்றி முதலில் முடிவு கொள்வோம். சுந்தர சோழ மகாராஜா நீடூழி இவ்வுலகில் வாழ்ந்து இந்தச் சோழ சாம்ராஜ்யத்தை ஆளட்டும்.ஆனால் ஒருவேளை ஏதாவது அவருக்கு நேர்ந்துவிட்டால், வைத்தியர்களுடைய வாக்குப் பலித்து விட்டால், சில நாளாகத் தோன்றி வரும் தூமகேது முதலிய உற்பாதங்கள் பலித்து விட்டால், அடுத்தபடி இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் பட்டத்திற்கு உரியவர் யார் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.”
“அது விஷயமாகத் தங்கள் கருத்தைத் தெரிவிக்கும்படி கோருகிறோம். தங்களுடைய கருத்துக்கு மாறாகச் சொல்லக் கூடியவர் இந்தக் கூட்டத்தில் யாரும் இல்லை.”
“அது சரியல்ல, ஒவ்வொருவரும் சிந்தித்துத் தங்கள் கருத்தை வெளியிட வேண்டும். சில பழைய செய்திகளை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மகா வீரரும் மகா ஞானியும் புண்ணிய புருஷருமான கண்டராதித்ததேவர் யாரும் எதிர்பாராத வண்ணம் இருபத்து நாலு ஆண்டுகளுக்கு முன்னால் காலமானார். அச்சமயம் அவருடைய புதல்வர் மதுராந்தகத் தேவர் ஒரு வயதுக் குழந்தை. ஆகவே தமது தம்பி அரிஞ்சயதேவர் பட்டத்துக்கு வர வேண்டும் என்று திருவாய் மலர்ந்து விட்டுப் போனார். இதை அவருடைய தர்ம பத்தினியும் பட்ட மகிஷியுமான செம்பியன் மாதேவி தான் நமக்கு அறிவித்தார்கள். அதன்படியே அரிஞ்சய சோழருக்கு முடிசூட்டி சக்கரவர்த்தி பீடத்தில் அமர்த்தினோம். ஆனால் விதிவசமாக அரிஞ்சய சக்கரவர்த்தி சோழ சிம்மாசனத்தில் ஓர் ஆண்டுக்கு மேல் அமர்ந்திருக்கவில்லை. அரிஞ்சய சோழருடைய மூத்த புதல்வர் பராந்தக சுந்தர சோழர் இருபது வயது இளங் காளைப் பருவம் எய்தியிருந்தார். எனவே ராஜ்யத்தின் நன்மையை முன்னிட்டு மந்திரிகளும் சாமந்தர்களும் குறுநில மன்னர்களும் நகரத் தலைவர்களும் கூற்றத் தலைவர்களும் சேர்ந்து யோசித்துப் பராந்தக சுந்தர சோழருக்கு முடிசூட்டினோம். அதைக் குறித்து யாரும் வருத்தப்பட இடமில்லை. ஏனெனில், சுந்தர சோழ மகாராஜா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வரையில் நெறி தவறாமல் நாட்டைப் பரிபாலித்து வந்தார். நம்மையெல்லாம் நன்கு மதித்து யோசனை கேட்டு ராஜ்ய பாரம் நடத்தினார். இதனால் சோழ ராஜ்யம் மேலும் விஸ்தரித்துச் செழித்தது. இப்போது சுந்தர சோழ மகாராஜாவின் உடல்நிலை கவலைக்கிடமாயிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்தபடி பட்டத்துக்குரியவர் யார்? கண்டராதித்ததேவரின் திருக்குமாரர் மதுராந்தகர் இப்போது பிராயம் வந்து ராஜ்ய பரிபாலனம் செய்யக் கூடியவராயிருக்கிறார். அறிவினாலும் கல்வியினாலும் குணத்தினாலும் பக்தி சிரத்தையினாலும் எல்லா விதத்திலும் பட்டத்துக்கு தகுந்தவராயிருக்கிறார் அவரிலும் ஒரு வயது இளையவரான ஆதித்த கரிகாலர் – சுந்தர சோழரின் புதல்வர் – காஞ்சியில் வடதிசைப் படையின் சேனாதிபதியாக இருந்து வருகிறார். இந்த இருவரில் யார் பட்டத்துக்கு வருவது நியாயம்? குலமுறை என்ன? மனு நீதி என்ன? தமிழகத்தின் பழைமையான மரபு என்ன? மூத்தவரின் புதல்வர் மதுராந்தகர் பட்டத்துக்கு வருவது நியாயமா? அல்லது இளையவரின் பேரர் பட்டத்துக்கு வருவது முறைமையா? நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கருத்தை மனம் விட்டுச் சொல்ல வேண்டும்…”
“மூத்தவராகிய கண்டராதித்ததேவரின் புதல்வர் மதுராந்தகர் தான் பட்டத்துக்கு உரியவர். அதுதான் நியாயம், தர்மம், முறைமை” என்றார் சம்புவரையர்.
“என் அபிப்பிராயமும் அதுவே”, “என் கருத்தும் அதுவே” என்று அக்கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் சொல்லி வந்தார்கள்.
“உங்கள் அபிப்பிராயம்தான் என் அபிப்பிராயமும். மதுராந்தகருக்குத்தான் பட்டம் உரியது. ஆனால் அந்த உரிமையை நிலைநாட்டுவதற்காக நாம் ஒவ்வொருவரும் பிரயத்தனம் செய்யச் சித்தமாயிருக்கிறோமா? உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்து போராடச் சித்தமாயிருக்கிறோமா? இந்த நிமிஷத்தில் துர்க்காதேவியின் பாதத்தில் ஆணையிட்டு அவ்விதம் சபதம் செய்வதற்குச் சித்தமாயிருக்கிறோமா?” என்று பழுவேட்டரையர் கேட்டபோது அவர் குரலில் அதுவரையில் இல்லாத ஆவேசம் தொனித்தது.
கூட்டத்தில் சிறிது நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு சம்புவரையர், “அவ்விதமே தெய்வ சாட்சியாகச் சபதம் கூறச் சித்தமாயிருக்கிறோம். ஆனால் சபதம் எடுத்துக் கொள்வதற்கு முன்னால் ஒரு விஷயத்தைத் தாங்கள் தெளிவுபடுத்த வேண்டும். இளவரசர் மதுராந்தகரின் கருத்து என்ன? அவர் சிங்காதனம் ஏறி ராஜ்யபாரத்தை ஏற்கச் சித்தமாயிருக்கிறாரா? கண்டராதித்தரின் தவப் புதல்வர் உலக வாழ்க்கையை வெறுத்துச் சிவபக்தியில் பூரணமாக ஈடுபட்டுள்ளார் என்று கேள்விப்படுகிறோம். இராஜ்யத்தில் அவருக்கு விருப்பமில்லை என்று பலர் சொல்லவும் கேட்டிருக்கிறோம். அவருடைய அன்னையார் செம்பியன் மாதேவியார் தமது புதல்வர் பட்டத்துக்கு வருவதற்கு முற்றும் விரோதமாயிருக்கிறார் என்றும் கேட்டிருக்கிறோம். தங்களிடமிருந்து இதைப் பற்றிய உண்மையை அறிய விரும்புகிறோம்.”
“சரியான கேள்வி; தக்க சமயத்தில் கேட்டீர்கள். இதைத் தெளிவுபடுத்தும் கடமையும் எனக்கு உண்டு. முன்னமே சொல்லியிருக்க வேண்டும். சொல்லத் தவறியதற்காக மன்னியுங்கள்” என்று பீடிகை போட்டுக் கொண்டு பழுவேட்டரையர் கூறத் தொடங்கினார். “செம்பியன் மாதேவி தமது ஏக புதல்வரை இராஜ்யபார ஆசையிலிருந்து திருப்பிச் சிவபக்தி மார்க்கத்தில் செலுத்துவதற்குப் பிரயத்தனப்பட்டு வந்தது நாடு அறிந்த விஷயம். ஆனால் இதன் காரணம் என்னவென்பதை நாடும் அறியாது; மக்களும் அறியார்கள். மதுராந்தகருக்கு இராஜ்யமாளும் விருப்பம் இருப்பதாகத் தெரிந்தால் அவருடைய உயிருக்கே ஆபத்து வரலாம் என்று பெரிய பிராட்டியார் பயந்தது தான் காரணம்… “
“ஆஹா!” “அப்படியா?” என்ற குரல்கள் கூட்டத்தில் எழுந்தன.
“ஆம்; பெற்ற தாய்க்குத் தன் ஏக புதல்வன் சிம்மாசனம் ஏற வேண்டும் என்னும் ஆசையைக் காட்டிலும் பிள்ளை உயிரோடு இருக்க வேண்டும் என்ற ஆசை தானே அதிகமாயிருக்கும்? அன்னையின் வாக்கே தெய்வத்தின் வாக்கு என்று மதித்து வந்த மதுராந்தகரும் மனத்தை விரக்தி மார்க்கத்தில் செலுத்தியிருந்தார். சிவ பக்தியில் முழுதும் ஈடுபட்டிருந்தார். ஆனால் சில காலமாக அவருடைய மனது சிறிது சிறிதாக மாறி வந்திருக்கிறது. இந்தச் சோழ சாம்ராஜ்யம் தமக்கு உரியது, அதைப் பராமரிப்பது தம்முடைய கடமை என்ற எண்ணம் அவருடைய மனத்தில் வேரூன்றி வளர்ந்திருக்கிறது. நீங்கள் எல்லாம் அவரை ஆதரிப்பதாகத் தெரிந்தால், தக்க சமயத்தில் பகிரங்கமாக முன்வந்து சொல்லவும் சித்தமாயிருக்கிறார்..”
“இதற்கு அத்தாட்சி என்ன?”
“உங்களுக்கெல்லாம் திருப்தி தரக்கூடிய அத்தாட்சியை இப்போதே அளிக்கிறேன். அளித்தால் அனைவரும் பிரமாணம் செய்யச் சித்தமாயிருக்கிறீர்களா?”
பல குரல்கள் “இருக்கிறோம்! இருக்கிறோம்!” என்று ஒலித்தன.
“யாருடைய மனதிலும் வேறு எவ்விதச் சந்தேகமும் இல்லையே?”
“இல்லை! இல்லை!”
“அப்படியானால் இதோ அத்தாட்சி கொண்டு வருகிறேன். வணங்காமுடி முனையரையரின் சந்தேகத்தையும் இப்போதே தீர்த்து வைக்கிறேன்!” என்று கூறிக் கொண்டே பழுவேட்டரையர் எழுந்தார். கம்பீரமாக நடந்து அங்கே சமீபத்தில் வைக்கப்பட்டிருந்த மூடு பல்லக்கின் அருகில் சென்றார்.
“இளவரசே! பல்லக்கின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே எழுந்தருள வேண்டும். தங்களுக்காக உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்யச் சித்தமான இந்த வீராதி வீரர்களுக்குத் தங்கள் முக தரிசனத்தைத் தந்தருள வேண்டும்!” என்று மிகவும் பணிவான குரலில் கூறினார்.
மேல்மாடத்தில் தூண் மறைவில் உட்கார்ந்து ஒரு வார்த்தை விடாமல் அடங்கா ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவன் இப்போது ஜாக்கிரதையாகக் கீழே பார்த்தான். பல்லக்கின் திரையை முன்போலவே ஒரு கரம் விலக்கிற்று. அது பொன் வண்ணமான கரம். முன்னே ஒருமுறை அவன் பார்த்த அதே செக்கச் சிவந்த கரந்தான். ஆனால் அவன் முன்னம் வளையல் என்று நினைத்தது உண்மையில் அரச குமாரர் அணியும் கங்கணம் என்பதை இப்போது கண்டான். அடுத்த கணம் பூரண சந்திரனையொத்த அந்தப் பொன் முகமும் தெரிந்தது. மன்மதனையொத்த ஓர் அழகிய உருவம் பல்லக்கிலிருந்து வெளியே வந்து புன்னகை புரிந்து நின்றது.ஆகா! கண்டராதித்த தேவரின் புதல்வரான இளவரசர் மதுராந்தகரா இவர்! பல்லக்கினுள் இருந்தபடியால் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அல்லவா அந்தத் தவறைச் செய்து விட்டோம்? தன்னைப் போல் அதே தவறைச் செய்த ஆழ்வார்க்கடியான் நம்பி சுவர் மேல் தலையை நீட்டிக் கொண்டிருக்கிறானா என்று வந்தியத்தேவன் பார்த்தான். அந்த இடத்தில் மர நிழல் விழுந்து இருள் சூழ்ந்திருந்தது ஆகையால் அங்கு ஒன்றும் தெரியவில்லை.
இதற்குள் கீழே, “மதுராந்தகத்தேவர் வாழ்க! பட்டத்து இளவரசர் வாழ்க! வெற்றி வேல்! வீரவேல்!” என்ற ஆவேசமான முழக்கங்கள் கிளம்பின. கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து நின்று வாளையும் வேலையும் உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அவ்விதம் கோஷமிட்டதை வந்தியத்தேவன் கண்டான். இனிமேல் அங்கிருப்பது அபாயமாக முடியலாம் என்று எண்ணி, தான் படுத்திருந்த இடத்துக்கு விரைந்து சென்று படுத்துக் கொண்டான்.

<<அத்தியாயம் 7                                                                                                                                  அத்தியாயம் 9 >> 

அத்தியாயம் 7 – சிரிப்பும் கொதிப்பும்


அரசுரிமையைப் பற்றிப் பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான். அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப் போகிறார்கள்? இவர்கள் யார் பேசுவதற்கு? இந்தக் கூட்டத்தில் நடக்கப் போவதை அறிந்து கொண்டே தீரவேண்டும்! இங்கேயே உட்கார வேண்டியதுதான். இதைக் காட்டிலும் வசதியான இடம் வேறு கிடையாது. ஆழ்வார்க்கடியான் எப்படியாவது போகட்டும் அவனைப்பற்றி நமக்கு என்ன கவலை?
இன்றைக்கு இங்கு ஏதோ மர்மமான நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்ற எண்ணம் வந்தியத்தேவன் மனத்தில் முன்னமே உண்டாகியிருந்தது. ஆழ்வார்க்கடியானின் விபரீதமான பொருள் தரும் வார்த்தைகள், கோட்டை வாசற் காவலர்களின் துடுக்கான நடத்தை, சம்புவரையரின் அரைமனதான வரவேற்பு, வெறியாட்டம் ஆடிய சந்நதக்காரனின் ஆவேச மொழிகள் இவையெல்லாம் அவனுக்கு ஏதேதோ சந்தேகங்களை உண்டாக்கியிருந்தன. அந்தச் சந்தேகங்களையெல்லாம் நீக்கிக் கொள்ளவும், உண்மையை அறிந்து கொள்ளவும் இதோ ஒரு சந்தர்ப்பம் தெய்வாதீனமாகக் கிடைத்திருக்கிறது; அதை ஏன் நழுவவிட வேண்டும்? ஆகா! தன்னுடைய உயிருக்குயிரான நண்பன் என்று கருதி வந்த கந்தமாறன் கூடத் தன்னிடம் உண்மையைச் சொல்லவில்லை. தன்னைத் தூங்க வைத்துவிட்டு, இந்த ரகசிய நள்ளிரவுக் கூட்டத்துக்கு வந்திருக்கிறான். அவனை நாளைக்கு ஒரு கை பார்க்க வேண்டியதுதான்.
இதற்குள் கீழே பழுவேட்டரையர் பேசத் தொடங்கி விட்டார். வந்தியத்தேவன் காது கொடுத்துக் கவனமாகக் கேட்கலானான்.
“உங்களுக்கெல்லாம் மிக முக்கியமான ஒரு செய்தியை அறிவிக்கவே நான் வந்திருக்கிறேன். அதற்காகவே இந்தக் கூட்டத்தைச் சம்புவரையர் கூட்டியிருக்கிறார். சுந்தரசோழ மஹாராஜாவின் உடல்நிலை மிகக் கவலைக்கிடமாயிருக்கிறது. அரண்மனை வைத்தியர்களிடம் அந்தரங்கமாகக் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் ‘இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை; அதிக காலம் உயிரோடு இருக்க மாட்டார்’ என்று சொல்லி விட்டார்கள். ஆகவே, இனிமேல் நடக்க வேண்டிய காரியங்களைப்பற்றி நாம் இப்போது யோசித்தாக வேண்டும்!” என்று கூறிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.
“ஜோசியர்கள் என்ன சொல்கிறார்கள்?” என்று கேட்டார் கூட்டத்தில் ஒருவர்.
“ஜோசியர்களைப் போய்க் கேட்பானேன்? சில நாளாகப் பின் மாலை நேரத்தில் வானத்தில் வால்நட்சத்திரம் தெரிகிறதே! அது போதாதா! என்றார் ஒருவர்.
பின்னர் பழுவேட்டரையர் கூறினார்: “ஜோசியர்களையும் கேட்டாகிவிட்டது அவர்கள் சில காலம் தள்ளிப் போடுகிறார்கள்; அவ்வளவுதான். எப்படியிருந்தாலும், அடுத்தாற்போல் பட்டத்துக்கு உரியவர் யார் என்பதை நாம் யோசித்தாக வேண்டும்…”
“அதைப் பற்றி இனி யோசித்து என்ன ஆவது? ஆதித்த கரிகாலருக்குத்தான் இளவரசுப் பட்டம் இரண்டு வருஷத்துக்கு முன்பே கட்டியாகிவிட்டதே!” என்று இன்னொரு கம்மலான குரல் கூறியது.
“உண்மைதான், ஆனால் அப்படி இளவரசுப் பட்டம் கட்டுவதற்கு முன்னால் நம்மில் யாருடைய யோசனையாவது கேட்கப்பட்டதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இங்கே கூடியுள்ள நாம் ஒவ்வொருவரும் நூறு ஆண்டுக்கு மேலாக, நாலு தலைமுறையாக, சோழ ராஜ்யத்தின் மேன்மைக்காகப் பாடுபட்ட பழங்குடியைச் சேர்ந்தவர்கள். என் பாட்டனாருக்குத் தந்தை திருப்புறம்பியம் போரில் இறந்தார். என் பாட்டனார் வேளூரில் நடந்த போரில் உயிர் விட்டார். என் தந்தை தக்கோலத்தில் உயிர்த் தியாகம் செய்தார். அம்மாதிரியே உங்கள் ஒவ்வொருவரின் மூதாதையரும் இந்தச் சோழ நாட்டின் மேன்மையை நிலைநாட்டுவதற்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். நம் ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் இளம் பிள்ளைகள் யுத்தகளத்தில் செத்திருக்கிறார்கள். இன்றைக்கும் ஈழ நாட்டில் நம்முடைய குலத்தையும் குடும்பத்தையும் சேர்ந்த பிள்ளைகள் போர் செய்து வருகிறார்கள். ஆனால் அடுத்தபடியாகப் பட்டத்துக்கு வரவேண்டியவர் யார் என்பது பற்றித் தீர்மானிப்பதில் நம்முடைய அபிப்பிராயத்தை மகாராஜா கேட்கவில்லை. தசரதர்கூட இராமருக்குப் பட்டம் கட்டுவது பற்றி மந்திராலோசனை சபை கூட்டி யோசனை செய்தார். மந்திரிகளையும், சாமந்தகர்களையும், சேனைத் தலைவர்களையும், சிற்றரசர்களையும் ஆலோசனை கேட்டார். ஆனால் சுந்தர சோழ மகாராஜா யாருடைய யோசனையையும் கேட்பது அவசியம் என்று கருதவில்லை..”
“நம்மை யோசனை கேட்கவில்லையென்பது சரிதான். ஆனால் யாரையுமே யோசனை கேட்கவில்லையென்று இறைவிதிக்கும் தேவர் கூறுவது சரியன்று. பெரிய பிராட்டியாரான செம்பியன் மகாதேவியின் யோசனையும், இளைய பிராட்டியாரான குந்தவை தேவியின் யோசனையும் கேட்கப்பட்டன. இல்லையென்று பழுவேட்டரையர் கூற முடியுமா?” என்று கேலியான தொனியில் ஒருவர் கூறவும், கூட்டத்தில் ஒரு சிலர் சிரித்தார்கள்.
“ஆகா! நீங்கள் சிரிக்கிறீர்கள்! எப்படித்தான் உங்களுக்குச் சிரிக்கத் தோன்றுகிறதோ, நான் அறியேன். நினைக்க நினைக்க எனக்கு வயிறு பற்றி எரிகிறது; இரத்தம் கொதிக்கிறது. எதற்காக இந்த உயிரை வைத்துக் கொண்டு வெட்கங்கெட்டு வாழ வேண்டும் என்று தோன்றுகிறது. இன்று சந்நதம் வந்து ஆடிய ‘தேவராளன்’ துர்க்கை பலி கேட்பதாகச் சொன்னான். ‘ஆயிரம் வருஷத்துப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்த நரபலி வேண்டும்’ என்று சொன்னான். என்னைப் பலி கொடுத்து விடுங்கள். என்னுடைய குலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் தொன்மையானது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கத்தியினால் என் கழுத்தில் ஒரு போடு போட்டுப் பலி கொடுத்து விடுங்கள். அன்னை துர்க்கை திருப்தி அடைவாள்; என் ஆத்மாவும் சாந்தி அடையும்…”
இவ்விதம் ஆவேசம் வந்து ஆடிய சந்நதக்காரனைப் போலவே வெறி கொண்ட குரலில் சொல்லிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.
சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. மேற்குத் திசைக் காற்று ‘விர்’ என்று அடிக்கும் சப்தமும், அந்தக் காற்றில் கோட்டைச் சுவருக்கு வெளியேயுள்ள மரங்கள் ஆடி அலையும் ‘மர்மர’ சப்தமும் கேட்டன.
“ஏதோ தெரியாத்தனமாகப் பேசிவிட்ட பரிகாசப் பேச்சையும், அதனால் விளைந்த சிரிப்பையும் பழுவூர் மன்னர் பொறுத்தருள வேண்டும். தாங்கள் எங்களுடைய இணையில்லாத் தலைவர். தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற இங்குள்ளவர் அனைவரும் சித்தமாயிருக்கிறோம். தாங்கள் காட்டிய வழியில் நடக்கிறோம். தயவு செய்து மன்னித்துக் கொள்ள வேண்டும்!” என்று சம்புவரையர் உணர்ச்சியுடனே கூறினார்.
“நானும் கொஞ்சம் பொறுமை இழந்து விட்டேன். அதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஒரு விஷயத்தை எண்ணிப் பாருங்கள். சரியாக இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் விஜயாலய சோழர் முத்தரையர்களை முறியடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். திருப்புறம்பியம் போரில் பல்லவ சைன்யத்துக்குத் துணையாக நின்று மதுரைப் பாண்டியரின் படையை நிர்மூலமாக்கினார். அதுமுதலாவது சோழ ராஜ்யம் நாளுக்கு நாள் பெருகி விஸ்தரித்து வந்திருக்கிறது. காவேரி நதிக்குக் கரையெடுத்த கரிகால் வளவர் காலத்திலேகூடச் சோழ ராஜ்யம் இவ்வளவு மகோன்னதத்தை அடைந்தது கிடையாது. இன்றைக்குத் தெற்கே குமரி முனையிலிருந்து வடக்கே துங்கபத்திரை – கிருஷ்ணை வரையில் சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கிடக்கிறது. பாண்டிய நாடு, நாஞ்சில் நாடு, யாருக்கும் இதுவரையில் வணங்காத சேர நாடு, தொண்டை மண்டலம், பாகி நாடு, கங்கபாடி, நுளம்பபாடி, வைதும்பர் நாடு, சீட்புலி நாடு, பெரும்பாணப்பாடி, பொன்னி நதி உற்பத்தியாகும் குடகு நாடு ஆகிய இத்தனை நாடுகளும் சோழ சாம்ராஜ்யத்துக்கு அடங்கிக் கப்பம் செலுத்தி வருகின்றன. இவ்வளவு நாடுகளிலும் நம் சோழ நாட்டுப் புலிக்கொடி பறக்கிறது. தெற்கே ஈழமும் வடக்கே இரட்டை மண்டலமும் வேங்கியும் கூட இதற்குள் நமக்குப் பணிந்திருக்க வேண்டும். அப்படிப் பணியாததற்குக் காரணங்களை நான் சொல்ல வேண்டியதில்லை; அவைகள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான்!…”
“ஆம்; எல்லோருக்கும் தெரியும்; ஈழமும் இரட்டைப்பாடியும் வேங்கியும் கலிங்கமும் பணியாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒரு காரணம் வடதிசை மாதண்ட நாயகராகிய இளவரசர் ஆதித்த கரிகாலர்; இன்னொரு காரணம் தென் திசைப் படைத் தலைவரான அவருடைய தம்பி அருள்மொழிவர்மர்..”
“மழவரையர் கூறும் காரணத்தை நான் ஒப்புக் கொள்கிறேன். சென்ற நூறாண்டு காலமாக இந்தச் சோழ நாட்டில் சேனாபதி நியமிக்கும் மரபு வேறாயிருந்தது. பல யுத்தங்களில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற வீராதி வீரர்களையே படைத் தலைவர்களையும் மாதண்ட நாயகர்களாகவும் நியமிப்பார்கள். ஆனால் இப்போது நடந்திருப்பது என்ன? மூத்த இளவரசர் வடதிசைச் சேனையின் சேனாபதி; அவர் என்ன செய்கிறார்? இரட்டை மண்டலத்தின் மீதும் வேங்கி நாடு மீதும் படையெடுத்துப் போகவில்லை. காஞ்சிபுரத்தில் உட்கார்ந்து கொண்டு பொன் மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார். வீரப் பெருங்குடியில் பிறந்த வீராதி வீரர்களாகிய உங்களைக் கேட்கிறேன். இதற்கு முன்னால் தமிழகத்தில் எந்த மன்னராவது தாம் வசிப்பதற்குப் பொன்னால் மாளிகை கட்டியதுண்டா? உலகமெங்கும் புகழ் பரப்பி இப்போது கைலாச வாசியாயிருக்கும் மதுரையும் ஈழமும் கொண்ட பராந்தக சக்கரவர்த்திகூடத் தாம் வசிப்பதற்குப் பொன் மாளிகை கட்டிக் கொள்ளவில்லை. தில்லைச் சிற்றம்பலத்துக்குத்தான் பொன் கூரை வேய்ந்தார். ஆனால் இளவரசர் ஆதித்த கரிகாலர் தாம் வசிப்பதற்குக் காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை கட்டுகிறார்! பல்லவ சக்கரவர்த்திகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து ராஜ்ய பாரம் புரிந்த அரண்மனைகள் இவருடைய அந்தஸ்துக்குப் போதவில்லையாம். பொன்னிழைத்த அரண்மனை கட்டுகிறார். ரத்தினங்களையும் வைடூரியங்களையும் அப்பொன் மாளிகைச் சுவர்களில் பதிக்கிறார். கங்கபாடி, நுளம்பபாடி, குடகு முதலிய நாடுகளில் வெற்றியடைந்து, கைப்பற்றிக் கொண்டு வந்த பொருளில் ஒரு செப்புக் காசாவது தலைநகரிலுள்ள பொக்கிஷ சாலைக்கு அவர் இதுவரை அனுப்பவில்லை..”
“பொன் மாளிகை கட்டி முடிந்து விட்டதா?”
“ஆம், முடிந்து விட்டது என்று என்னுடைய அந்தரங்க ஒற்றர்கள் மூலம் அறிந்தேன். அத்துடன் சுந்தர சோழ மகாராஜாவுக்கு அவருடைய அருமை மூத்த புதல்வரிடமிருந்து கடிதங்களும் வந்தன. புதிதாக நிர்மாணித்திருக்கும் பொன் மாளிகையில் வந்து சுந்தர சோழ மகாராஜா சில காலம் தங்கியிருக்க வேண்டும் என்று.”
“மகாராஜா காஞ்சிக்குப் போகப் போகிறாரா?” என்று ஒருவர் கவலை ததும்பிய குரலில் கேட்டார்.
“அத்தகைய கவலை உங்களுக்கு வேண்டாம், அப்படி ஒன்றும் நேராமல் பார்த்துக் கொள்ள நான் இருக்கிறேன்; தஞ்சைக் கோட்டைக் காவலனாகிய என் சகோதரனும் இருக்கிறான். சின்னப் பழுவேட்டரையன் அனுமதி இல்லாமல் யாரும் தஞ்சைக் கோட்டைக்குள் புக முடியாது. என்னையறியாமல் யாரும் மகாராஜாவைப் பேட்டி காணவும் முடியாது; ஓலை கொடுக்கவும் முடியாது. இது வரையில் இரண்டு மூன்று தடவை வந்த ஓலைகளை நிறுத்தி விட்டேன்.”
“வாழ்க பழுவேட்டரையர்!”, “வாழ்க பழுவூர் மன்னரின் சாணக்ய தந்திரம்!”, “வாழ்க அவர் வீரம்!” என்னும் கோஷங்கள் எழுந்தன.
“இன்னும் கேளுங்கள், பட்டத்து இளவரசர் செய்யும் காரியங்களைக் காட்டிலும் ஈழத்தில் போர் நடத்தச் சென்றிருக்கும் இளவரசர் அருள்மொழிவர்மரின் காரியங்கள் மிக மிக விசித்திரமாயிருக்கின்றன. யுத்த தர்மத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பதென்ன? பரம்பரையாகப் பல நூறு ஆண்டுகளாக ‘நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருப்பதென்ன? நம் நாட்டுப் படைகள் வேறு நாடுகளின் மீது படை எடுத்துச் சென்றால், நம் படைகளுக்கு வேண்டிய உணவுகளை அந்த வேற்று நாடுகளிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அந்த நாடுகளில் கைப்பற்றும் பொருளைக் கொண்டே வீரர்களுக்கு ஊதியமும் கொடுக்க வேண்டும். மிகுந்த பொருளைத் தலைநகரிலுள்ள அரசாங்க பொக்கிஷத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் இளவரசர் அருள்மொழிவர்மர் என்ன செய்கிறார் தெரியுமா? ஈழ நாட்டிலுள்ள நம் போர் வீரர்களுக்கெல்லாம் இங்கிருந்து கப்பல்களில் உணவு அனுப்பி வைக்க வேண்டுமாம்! ஒரு வருஷ காலமாக நானும் பத்துத் தடவை பல கப்பல்களில் ஏற்றி உணவு அனுப்பி வந்திருக்கிறேன்..”
“விந்தை! விந்தை!”, “இந்த அநியாயத்தைப் பொறுக்க முடியாது!”, “இப்படிக் கேட்டதே இல்லை!” என்ற குரல்கள் எழுந்தன.
“இந்த அதிசயமான காரியத்துக்கு இளவரசர் அருள்மொழிவர்மர் கூறும் காரணத்தையும் கேட்டு வையுங்கள். படையெடுத்துச் சென்ற நாட்டில் நம் வீரர்களுக்கு வேண்டிய உணவுப் பொருளைச் சம்பாதிப்பது என்றால், அங்குள்ள குடிமக்களின் அதிருப்திக்கு உள்ளாக நேரிடுமாம். ஈழத்து அரச குலத்தாரோடு நமக்குச் சண்டையே தவிர ஈழத்து மக்களோடு எவ்விதச் சண்டையும் இல்லையாம். ஆகையால் அவர்களை எவ்விதத்திலும் கஷ்டப்படுத்தக் கூடாதாம்! அரச குலத்தாருடன் போராடி வென்ற பிறகு மக்களின் மனமார்ந்த விருப்பத்துடன் ஆட்சி நடத்த வேண்டுமாம். ஆகையால் பணமும் உணவும் இங்கிருந்து அனுப்ப வேண்டுமாம்!”
இச்சமயம் கூட்டத்தில் ஒருவர், “படையெடுத்துச் சென்ற நாடுகளில் உள்ள ஜனங்களிடம் ஒன்றுமே கேட்கக் கூடாது; அவர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்ற யுத்த தர்மத்தை இதுவரை நாங்கள் கேட்டதே கிடையாது!” என்றார்.
“அதனால் விளையும் விபரீதத்தையும் கேளுங்கள். இரண்டு இளவரசர்களும் சேர்ந்து செய்யும் காரியங்களினால் தஞ்சை அரண்மனைத் தன பொக்கிஷமும் தானிய பண்டாரமும் அடிக்கடி மிகக் குறைந்து போகின்றன. உங்களுக்கெல்லாம் அதிக வரி போட்டு வசூலிக்கும் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்படுகிறது. இதற்காகத்தான் என்னை இறை அதிகாரியாக நியமித்திருக்கிறார்கள்! சோழ நாட்டின் மேன்மையே முக்கியம் என்று நான் கருதியிராவிட்டால், எப்பொழுதோ இப்பதவியை விட்டுத் தொலைத்திருப்பேன்.”
“ஆ! கூடவே கூடாது! தாங்கள் இப்பதவியிலிருப்பதுதான் எங்களுக்கெல்லாம் பெரிய பாதுகாப்பு. இந்த முறைகேடான காரியங்களைப் பற்றித் தாங்கள் மகாராஜாவிடம் சொல்லிப் பார்க்க வில்லையா?”
“சொல்லாமல் என்ன! பல தடவை சொல்லியாகிவிட்டது. ஒவ்வொரு தடவையும் பெரிய பிராட்டியிடம் கேளுங்கள்; இளையபிராட்டியிடம் கேளுங்கள்!’ என்ற மறுமொழிதான் கிடைக்கிறது. முன்னமே தான் சொன்னேனே, மகாராஜாவுக்குச் சுயமாகச் சிந்தனை செய்யும் சக்தியே இப்போது இல்லாமற் போய்விட்டது! முக்கியமான காரியங்களில் நம்முடைய யோசனைகளைக் கேட்பதும் இல்லை. அவருடைய பெரியன்னை செம்பியன் மாதேவியின் வாக்குத்தான் அவருக்கு வேதவாக்கு; அடுத்தபடியாக, அவருடைய செல்வக் குமாரி குந்தவைப்பிராட்டியிடம் யோசனை கேட்கச் சொல்கிறார். இராஜ்ய சேவையில் தலை நரைத்துப் போன நானும் மற்ற அமைச்சர்களும் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணிடம் கொள்ளிடத்துக்கு வடக்கேயும் குடமுருட்டிக்குத் தெற்கேயும் சென்றறியாத பெண்ணிடம் யோசனை கேட்பதற்குப் போய் நிற்க வேண்டும்; எப்படியிருக்கிறது கதை! இந்தச் சோழ ராஜ்யம் ஆரம்பமான காலத்திலிருந்து இப்படி இராஜ்ய காரியங்களில் பெண்கள் தலையிட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை! இத்தகைய அவமானத்தை எத்தனை நாள் நாம் பொறுத்திருக்கமுடியும்? அல்லது நீங்கள் எல்லாரும் ஒருமுகமாகச் சொன்னால், நான் இந்த ராஜாங்கப் பொறுப்பையும், வரி விதித்துப் பொக்கிஷத்தை நிரப்பும் தொல்லையையும் விட்டு விட்டு என் சொந்த ஊரோடு இருந்து விடுகிறேன்…”
“கூடாது! கூடாது! பழுவூர்த்தேவர் அப்படி எங்களைக் கைவிட்டு விடக் கூடாது. அரும்பாடுபட்டு, ஆயிரமாயிரம் வீரர்கள் நாலு தலைமுறைகளாகத் தங்கள் இரத்தத்தைச் சிந்தி ஸ்தாபித்த சோழ சாம்ராஜ்யம் ஒரு நொடியில் சின்னாபின்னமாய்ப் போய் விடும்” என்றார் சம்புவரையர்.
“அப்படியானால் இந்த நிலைமையில் என்ன செய்வது என்று நீங்கள்தான் எனக்கு யோசனை சொல்ல வேண்டும். அல்லி ராஜ்யத்தைவிடக் கேவலமாகிவிட்ட இந்தப் பெண்ணரசுக்குப் பரிகாரம் என்ன என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்றார் பழுவூர் மன்னர்.

<<அத்தியாயம் 6                                                                                                                                  அத்தியாயம் 8 >>